மோகனம் தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மோகனம்!

தொகுப்பாசிரியர் : பேராசிரியர் நிர்மலா மோகன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


திருவரசு புத்தக நிலையம்,
23, தீன தயாளு தெரு,தியாகராய நகர், சென்னை – 600 017. 044 – 24342810/2310769
விலை : ரூ. 300/- 496 பக்கங்கள்




நூலின் தோரண வாயில் வரவேற்பு வாயிலாக கவிஞர் வைரமுத்து அவர்கள் மனம் திறந்து தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களையும், நூலின் தொகுப்பாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களையும் பாராட்டி உள்ளார். ஒப்புக்காக பாராட்டாமல் உள்ளார்ந்த உண்மையுடன் பாராட்டி உள்ளார், பாராட்டுகள்.


தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் காதலித்துக் கரம் பிடித்து, வெற்றிகரமான காதல் இணையராக வலம் வந்து, மணிவிழாக் கண்ட இலக்கிய இணையர். தனது கணவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றி அறிஞர்கள், சான்றோர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், பிரபல இதழ்கள், சிற்றிதழ்கள் வழங்கி உள்ள மதிப்புரைகளைத் தொகுத்து ‘மோகனம்’ என்ற பெயரில் பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளார். இப்பரிசு எல்லோருக்கும் இலக்கியப் பரிசாக அமைந்து விட்டது.


கணவரின் இலக்கியப் பயணத்திற்கு மனைவி துணை நிற்பது என்பது விதிவிலக்காக சிலருக்கு மட்டுமே அமையும்.பலருக்கு வாய்ப்பதில்லை. இருவருக்குமே கருத்து ஒருமித்த இலக்கிய ஈடுபாடு இருந்த காரணத்தால் மட்டுமே இந்நூல் சாத்தியமாகி உள்ளது. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் அவரது மனைவி தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களை, “என் பின்னால் வா என்று சொல்லாமல், என்னோடு இணைந்தே சமமாக கூட வா” என்பார். தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களே தந்த ஒப்புதல் வாக்குமூலம் இது. அய்யாவின் இந்த மனநிலையே இந்த நூல் உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.


முன் அட்டையில் உள்ள தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் புகைப்படம் கம்பீரம். முன்பின் அட்டைப்பட வடிவமைப்பு உள்ள அச்சு யாவும் மிக நேர்த்தி, திருவரசு புத்தக நிலையத்திற்கு பாராட்டுகள்.


குலோத்துங்கன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதிடும் கவிஞர் பத்மபூசன் விருதாளர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் வரைந்த மடல்களும் நம்மை வரவேற்கின்றன.


மு.வ.-வின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் எழுதித் தந்த இரண்டு வரிகளை வாழ்வின் தாரகமந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்.


தமிழ் உன்னை வளர்த்தது !

தமிழை நீயும் வளர்க்க வேண்டும் !


தமிழை வளர்க்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எழுத்து, பேச்சு என்ற இருவேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். அவர் எழுதிய 122 நூல்களின் பட்டியல் உள்ளது. ஒரு மனிதர் 122 நூல்கள் எழுதுவது என்பது சாதாரணமான செயல் அன்று. அளப்பரிய சாதனைதான். அவர் எழுதிய நூல்கள் பற்றி, பிறர் எழுதிய மதிப்புரைகள் பெரிய நூலாக வந்து இருப்பதும் சாதனைதான். வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு கிடைத்த பெரும்பேறு என்றே சொல்ல வேண்டும்.


நூலில் 5 தலைப்புகளின் கீழ் மதிப்புரைகள் இடம் பெற்றுள்ளன.

1. சான்றோர் நோக்கில், 2. படைப்பாளிகள் பார்வையில், 3. அறிஞர்கள் அலசலில், 4. இளையோர் மதிப்பீட்டில், 5. மணியான மதிப்புரைகளில்,

6. பின்னிணைப்புகள் பகுதியில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பற்றிய குறிப்பும் எழுதிய நூல்களின் பட்டியல், வெளியிட்ட ஆண்டு வரை குறிப்பிட்டு, நுட்பமாக நூலில் இடம் பெற்றுள்ளன.


ஆள்வோர் யாராக இருந்தாலும் சமரசத்திற்கு இடமின்றி எழுதியும், பேசியும் வந்த தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள் சமீபத்தில் காலமானார்கள். உண்மையில் தமிழ் உலகிற்கு இடம் செய்ய இயலாத இழப்பாகும். அவர் மறைந்து விட்டாலும் ‘சங்க இலக்கியச் செல்வி’ என்ற நூலிற்கு அவர் எழுதிய மதிப்புரை இந்நூலில் முதல் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. அவர் எழுதிய எழுத்துக்களுக்கு என்றும் மறைவில்லை, அழிவில்லை, தமிழண்ணல் எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்.

தமிழ்த்தேனீ எந்த ஒரு கட்டுரையும் மேம்போக்காக எழுத மாட்டார்கள். அதற்கான சான்றுகளை தொகுத்து வைத்து தான் நுட்பமாக எழுதுவார்கள். இதோ தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் மொழியில் காண்க.


“ஒரு கட்டுரையாயினும் அதற்கான தரவுகளைத் தொகுத்தும் வகுத்தும் சிந்தித்துக் கொண்டு எழுதுகின்றமையால், இது ‘மோகன் பாணி’ போல்வது என எண்ணி வைக்கின்றது. கட்டுரைகளைப் படிக்கும் போது, அதிலொரு கட்டுக்கோப்புப் புலனாகிறது. பேராசிரியர் இரா. மோகனின் நூல் என்றால் அதற்கொரு தனி வடிவமைப்பு இருக்கும் என்ற கருத்து உருவாகி விட்டது”.


இப்படி பல அறிஞர்கள், முன்னை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மட்டுமல்ல, பட்டிமன்ற பேச்சாளர்கள் கா. முத்து இளங்கோவன், சங்கீத் இராதா வரை பலரும் நூலின் ஆய்வுரை எழுதி உள்ளனர். என்னுடைய மதிப்புரையும் இரண்டு இடம் பெற்றுள்ளது. வரலாற்று ஆவணம் போன்ற நூலில் நம் கட்டுரை இரண்டு இடம் பெற்றது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தொகுப்பாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு நன்றி.


பேராசிரியர் குருசாமி அவர்கள், ‘உரை மரபுகள்’ என்ற நூலிற்கு வழங்கி உள்ள மதிப்புரையின் தொடக்க வரிகள் இதோ, “தொகை, வகை, நெறிகள் உரிய அளவில் அமைந்து விரிந்துள்ள சிறந்த கருவி நூல் இது”.


திருக்குறளில் மனிதவள மேம்பாடு என்ற தலைப்பிலும், “திருவள்ளுவரும், சேக்சுபியரும்” என்ற தலைப்பிலும் கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்ற தலைப்பிலும் மூன்று முனைவர் பட்ட ஆய்வினை முடித்துள்ல முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், ‘கணினி யுகத்திற்குக் கம்பர்’ என்ற தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய நூலிற்கு வழங்கியுள்ள மதிப்புரையிலிருந்து சில துளிகள் இதோ!


தொடுப்பு : “இந்த நோக்கில் நாம் இன்னும் கம்பரைப் பார்க்கவில்லையே என்ற எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது”.


முடிப்பு : சொற்பொழிவு என்பது செயற்கைக் கருவூட்டலாக நடக்காமல், அயல் மகரந்தச் சேர்க்கையாக நிகழப் பேச்சாளர் வண்ணத்துப் பூச்சியாய் வலம் வர வேண்டும். அந்தப் பணியைப் பேராசிரியர் மோகன் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பதற்கு அடையாளச் சின்னமே இந்த அழகான நூல்”.


அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தி அதனை நூலாக்கி இருப்பதை மிக நுட்பமாக எழுதி, எழுத்து, பேச்சு இரண்டையும் பாராட்டிய விதம் அருமை.


தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் சிறந்த வாசிப்பாளர், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமன்றி மரபுக்கவிதை நூல்கள், புதுக்கவிதை நூல்கள், ஹைக்கூ கவிதை நூல்கள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்ற எதையும் விட்டுவிடாமல் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களையும் ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து கட்டுரைகள் வடித்து நூலாக்கி தனக்கென தனி இடம் பிடித்தவர்.

எந்த ஒரு படைப்பாளியையும் காயப்படுத்துவது இல்லை என்ற கொள்கையோடு நல்லதை மட்டும் எடுத்தியம்பி, பாராட்டி பல புதியவர்களை, இளையவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருபவர். அவரது வெற்றிக்குக் காரணம் வாசிப்பு, நேசிப்பு. எல்லோரையும் மகிழ்விக்கும் தாயுள்ளம் படைத்த தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் தொகுத்த நூல் அருமை. மோகனம் என்றால் அழகு என்றும் பொருள் உண்டு. அழகாக வந்துள்ளது நூல். ‘மோகனம்’ மோகனமாக உள்ளது. பாராட்டுக்கள்.

வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு சூட்டப்பட்ட மணிமகுடம் இந்த நூல் .இந்த நூல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் வாழ்நாளை நூற்றாண்டு கடந்து வாழ வைக்கும். மகிழ்விக்கும் .மேலும் மேலும் எழுத வைக்கும்.

அரிய பணியாற்றிய தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Jan-16, 5:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 308

மேலே