சல்லிக்கட்டு - Sallikattu
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும்.
மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு . …தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,
புதுக்கோட்டை மாவட்டம் தேனீமலை, தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி மற்றும் ஆவரங்காடு போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் பெறுகின்றன.
50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லி காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிகட்டு’ என்று மாறியது.
பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது. பழந்தமிழ் இலக்கியங்களிலும்
சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல்
(மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.