IN TO THE WILD - கவிஜி

திரும்பிக் கொண்டே இருப்பதில் இருக்கும்......... திரும்புதலை... திரும்பிக் கொண்டே பார்க்காமல் நின்று பார்க்கையில்தான் சுற்றும் நாட்களின் சூட்சுமம் புரிகிறது...அதே திங்கள்.. அதே செவ்வாய்,. அதே புதன்... அதே வியாழன்.... அதே வெள்ளி..... அதே சனி..... அதே ஞாயிறு.... திரும்பவும் அதே திங்கள்... ஒரே வழி... அதே இட்லி... அதே தோசை.. ஒரு வட்டம்.... அதை முன்னோக்கியே சுற்ற நினைப்பது.......கண்களைக் கட்டிக் கொண்ட குதிரை போல... ஓடிக் கொண்டே இருப்பது....பின் ஒரு நாளில் செத்துப் போவது......என்ன மாதிரியான வடிவமைப்பு இது....

என்ன மாதிரியான சூழல் இது... என்ன விதமான... வெளியை நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்....!

இந்த வாழ்க்கை, சலிப்புகளால் நெய்யப்பட்டவை...பணம்... மிகப் பெரிய கருப் பொருளாகி ஒரு சூன்யத்துக்குள் நம்மை சிக்க வைத்து விட்டனவோ என்றொரு மிகப் பெரிய கேள்வியை.. சுயபரிசோதனைக்கான வேள்வியை நம்முள் மூட்டுவதாகவே உணருகிறேன்...அதே பயணம்... அதே முகங்கள்... அதே உணர்வுகள்... ஒரு நாளுக்கும் மறு நாளுக்கும் வித்தியாசம் இல்லாத வாழ்க்கை முறை... கடக்க கடக்க கடந்து கொண்டே இருந்தால் அதுவும் ஒரே இடத்தை.... அது எத்தனை சலிப்புத்தன்மையால் வடிவமைக்கப் பட்ட ஒன்று... காணும் இடமெல்லாம் மனித தலைகள்... கடவுள் கொடுத்தான், கடவுள் கொடுத்தான் என்று பெருகிக் கொண்டே போகும் மனித உயிர்கள்....உடம்புக்கும் கட்டுப்பாடு இல்லை...மனதுக்கும் கட்டுப்பாடு இல்லை.. இரண்டையுமே ஓர் இயந்திரமாக மனிதன் பார்க்கத் துவங்கி விட்டான்..

அது மிகப் பெரிய பேராபத்தை விளைவிக்க கூடியது என்று "இன் டு தி வைல்ட்" படம் உணரச் செய்தது.....

நான் எழுதிக் கொண்டிருக்கும் இதே உணர்வுடன் தான் இப் படத்தின் கதை நாயகன் வாழ்வின் மீது சலிப்பு தட்டி.. தன் அடையாளங்களை அழித்து, தன் பெயரை மாற்றிக் கொண்டு , காட்டுக்குள் பயணமாகிறான்.... அது சாதாரண பயணம் அல்ல...நாம் எங்கேயோ, ஏதோ ஓர் இசத்தினாலோ.. ஏதோ ஒரு மயமாக்கலாலோ... ஏதோ ஒரு தத்துவத்தினாலோ... தொலைத்த இயற்கையை மீட்டெடுக்க.. அதனோடு இயைந்து வாழ செல்லும் மிகப் பெரிய ஆபத்தான பயணம்.. காடும் மலையும் மிகப் பெரிய கண்களுடன் விரிந்து கிடைக்கிறது... திறந்த உடல் எங்கும்... தெவிட்டாத காமத்தை வாரி வழங்கும் நதிகளும்.. ஆறுகளும்... சொல்லொணா வரிகளால் மிதக்கிறது...

வழியெங்கும் ஆங்காங்கே சில நல்ல மனிதர்களைக் காண்கிறான்.... இவர்கள் போல நடைமுறை வாழ்விலும் சிலர் இருந்திருந்தால்... அந்த வாழ்க்கையே கூட வாழத் தகுதி வாய்ந்தவையாக இருந்திருக்கும் என்றொரு மௌனம் கூட அவனுக்கு வருகிறது.... ஒவ்வொரு பிரிவும்..அவனைப் பிரிபவர்களுக்குதான் வலி யைத் தருகிறது.. அவனுக்கு தந்தாலும் அதை விட பேரின்பமாய் அவன் இந்த இயற்கையை நினைக்கிறான்.. ஓடுகிறான்... ரசிக்கிறான்... இயற்கையோடு பேசுகிறான்.. காட்டுக்குள் கைவிடப் பட்ட ஒரு வண்டியை தன் இருப்பிடமாக்கிக் கொள்கிறான்.. பசிக்கு வேட்டை ஆடுகிறான்... பின் பசி அவனை வேட்டை ஆடும் எனும் மிகப் பெரிய தத்துவத்தை, பதிலை இந்த இயற்கை ஒரு முகமூடியைப் போல மறைத்து வைத்திருக்கிறது.......

மீண்டும் இயற்கையோடு சேர்வது அத்தனை சுலபமல்ல.. என்று அவன் வெகு சீக்கிரத்தில் புரிந்து கொள்கிறான்.. உடல் இளைக்கிறது.. உள்ளம் கூட... அவனின் அப்பா அம் மாவை நினைத்து வாடுகிறது.... அவர்கள் ஒரு பக்கம் அவனைத் தேடி அலைகிறார்கள்... இயற்கையின் வாசலுக்கு வருவதற்காக அவனின் பெற்றோரை சாலை க்கு கொண்டு வந்து தேட வைத்து விடுவதில் நாம்... சற்று வேறு மாதிரி புரிந்து கொள்ள வேண்டிய இருகிறது... இதுதான் நாம் இயற்கையை பலி வாங்கியதற்கு நாம் கொடுக்கும் முதல் விலை... மரங்கள் பேசும் ரகசியங்கள் கேட்க வேண்டுமானால் நீங்கள் மனித இசைகளை மெல்ல மெல்ல கை விட வேண்டும்... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் அது இயற்கையிடம் நடக்காது...பலி கொடுத்த பின் தான் கண்டு பிடிப்புகள் நடந்திருக்கும்...உதாரணத்துக்கு, உருளைக் கிழங்கை சாப்பிட உகந்த ஒன்றுதான் என்று நிரூபிக்க பல உயிர்கள் கொடுக்கப்பட்டிருக்கும்....

அப்படி ஒரு தருணத்தில் அவன் மரணம் விளைவிக்கக் கூடிய விதைகளை உண்டு விடுகிறான்.. அத்தனையும் பசி.... காட்டுக்குள் போனால் பழம் இருக்கும், கிழங்கு இருக்கும்.. வேட்டையாடி உண்டு விடலாம் என்ற மேம்போக்கு சித்தாந்தங்கள் செல்லுபடியாகாது என்பதற்கு அவன்... வேட்டையாடிய காட்டெருமையை வேக வைக்க முடியாமல் புழுக்களால் அது நிரம்பி வழியும் போதும்.... விஷ விதைகளை மாற்றி உண்டு விடும் போதிலும்...வரும் போது கடந்த ஆற்றை போகும் போதும் சுலபமாக கடந்து விட யத்தனிக்க, ஆற்றோடு அடித்துக் கொண்டு போக பெரும்பாடு பட்டு தப்பிக்கும் போதும்... இயற்கை நாம் நினைத்தது போல அல்ல.. அது யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லை... அது தன் கால்களை விரித்து நடந்து கொண்டேயிருக்கிறது..அதற்குள் நடக்க, வாழ.. ஆசை கொண்ட மனம் கண்டிப்பாக இன்றைய சூழலில் ஒரு பட்டாம் பூச்சியாய் ஆகவே முடியாது.......அதற்கு நீண்ட நெடிய வெளி தேவைப் படுகிறது.... தொடர்ந்து அடுத்தடுத்து பயணிக்கும் சிறகுகள் வேண்டியிருக்கிறது...என்பதை உணர்கிறான்...

ஒரு கட்டத்தில் அவனாக தன் நாட்குறிப்பில் எழுதுகிறான்.. "இந்த இடம் அவ்வப்போது வந்து போக சிறந்த இடம்..ஆனால் தொடர்ந்து வாழ சரியான இடம் இல்லை.."

அது தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை...வியந்தவன் தன்னை உயர்வாக நினைக்கத் துவங்கியதில்... கசப்பு சூடுகிறது....ஆனால் அதே சமயம் இயந்திர யுகமான நாகரிக வாழ்க்கை அவனுக்குள் விதைத்திட்ட சலிப்பை அவனால் தாண்டி வர முடிவதில்லை..... இந்த வானம் புதியதாக இருக்கிறது .. இந்த ஆறு அவனிடம் பேசுகிறது.. இயற்கையை மெல்ல மெல்ல பழக்கப் படுத்தி விடலாம் என்று அவனின் மனம் நம்புகிறது...இருந்தாலும்.. நாட்களின் வாட்கள் அவனின் உடலை மெலிய வைக்கிறது.. மனதை கரைய வைக்கிறது..... வெறுமையும்.. நினைவுகளும்..அவனை செயல் படாமல் முடக்கிப் போடுகிறது... மரணம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தன் சிறகை விரிக்கிறது...வானம் நீண்டு பெருகுகிறது... அவனை கடைசியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு சாகடித்து விடுகிறது அவனின் காலம்...... அங்கிருந்தும் ஒரு வகை விடுதலையையே அவனின் திறந்திருக்கும் கண்கள் தேடுகிறது.... மனிதனாக பிறந்து விட்டால் விடுதலை ஏது என்பதோடு நமக்கு இனம் புரியாத சலிப்பும்.. அதற்கு எதிர்பதமான அதீத உற்சாகமும் தொற்றிக் கொண்டும், விடுபட்டுக் கொண்டும் இருப்பதை புரிந்த மனதோடு... மௌனிக்கதான் வேண்டி இருக்கிறது...

இந்தப் படம் முழுக்க அவனின் தங்கையின் நினைவுகளால்தான் விரிகிறது.. அவனின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டு அவனின் ஆசைப்படி...மேற்குக் கடற்கரையில் அவனின் அஸ்தி கரைக்கப்படுகிறது .. அங்கும் அவன் தன் பயணத்தை தொடர்வதாகவே நாம் கண்கள் மூடி யோசிக்கிறோம்...யோசிப்பதில் தானே... யோசனை பிறக்கும்..

"ஷான் பென்" இயக்கிய இந்தப்படம்... நமக்கு தெளிவைத் தருகிறதோ இல்லையோ... வாழ்வின் மீதான குழப்பத்தைப் குலபப்தை போக்குகிறது.. இயற்கையோடு இணைந்து கொள்வது அத்தனை சுலபம் அல்ல என்பதை கூறினாலும்... அதுவும் இனி சாத்தியமே..என்பதற்கான முதல் பலியாக இப் படத்தின் கதை நாயகனை சொல்லிக் கொள்ளலாம்....அது நாம் தொலைத்து விட்ட இயற்கைக்கு அமைக்கப்பட்ட தொங்கு பாலம்....

தகுதி உள்ளவைகள் தப்பி பிழைக்கும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Jan-16, 8:15 pm)
பார்வை : 166

மேலே