பாவாண்ட கண்ணதாசன்

பாவாண்ட கண்ணதாசன்.
நா இனிக்கத் தமிழ் வரைந்த
பா உலகக் குரு இவன்.
சா இல்லாக் கவி உலகினுள்
வா என்று பலரை இழுத்தவன்.
மா கவிஞன் பிறந்த நாளுக்காய்
பா எழுதுகிறேன் பரவசம் கொண்டு.
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தேழில்
ஆனித் திங்கள் இருபத்தி நான்கில்
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தேழில்
அவனியில் உதித்த வித்தகன் முத்தையா.
அறிமுகமானான் பின் அரசவைப் புலவராயும்.
அர்த்தமுள்ள இந்துமதம், யேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்களால் விசுவரூபமானான்.
சந்தக் கவியின் சொந்தக்காரன் இவன்.
சுந்தரப் புதையல் சிறுகூடல் பட்டிக்கு.
செந்தமிழ் மகரந்தம் சிந்தி உலகிற்குப்
பந்தி விரித்தான் சினிமா விருந்தில்.
தந்த வரிகளின் தரத்தால் நம்
சிந்தை நிறைத்த தேனருவி கண்ணதாசன்.
பாவாண்ட இவன் வசந்த வரிகள்
மனமாண்டு தந்தது நிதானம், தத்துவத்தில்.
பக்தியாண்டு தந்தது தெளிவு, சமயத்தில்.
காதலாண்டு தந்தது கிறக்கம் காதலில்.
கருத்தாண்ட வரிகள் அனைவர் உதட்டிலும்
காலவரையின்றிப் புரள்வதிவன் வாங்கிய வரம்.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-6-2006