பொல்லாத பொழுதுகளில் - - - - - - - - - -

அது
அந்தி சாயும் பொழுது
வெண்ணிறத்தை
என் வீட்டு செவ்வந்தியும்
அடுக்குச்
செவ்வரத்தையும்
சாயமேற்றிக் கொண்டிருக்கிறது

மேல் வானம்
நீலக்கடலைப் பார்க்க
வேக வேகமாய் நடக்கிறது
பூங்காவிற்குள் தென்றலின்
அசைவு குறைந்து
மூர்க்கம் கொண்டு
நெடுவான நீள் கடல்
சங்கமத்தில் ஆட்கொள்கிறது

பிரகாசத்தில்
பளிச்சென்று கிடந்த
பூமி மனதிற்குள் பாரம். ....
பயம் கௌவிக் கொல்கிறது
அவளை
பிரபஞ்ச வெளியில்
சலனமற்ற பார்வையோடு
பெருமூச்சு விடுகிறாள்

கண்கள் கலங்க
அவள் கட்டுப்படுத்த
அதையும் மீறி
கொட்டிய துளிகள்
பச்சை புல் நுனியில்
விழுந்து கிடந்து
அண்ணார்ந்து பார்த்து
வியப்புற்றேன் என்கிறது

மாதுளம் பழ முத்துக்கள்
உதிர்த்து கொட்டுவது போல
சிரிப்படக்க முடியாது
செவ்விதழ் முகையவிழ்ந்து
புன்சிரிக்கிறது
பூஞ்சிட்டு
மொட்டுக்கள்

கருங்கூந்தல் சடையில்
கனகாம்பர கொத்தொன்று
செருகி விட்டது போல
குந்தி கறுப்பையே
காணாமல் செய்கிறது
இளங்காலைச்
சூரியனின் சிரிப்பு

பாரத்தை
மெது மெதுவாக இறக்கி
தென்றலை சுவாசிக்க
முற்படும்
கணங்கள் கழிய முன்னரே
இருளின்
மறுபடியான கரங்கள்
ஆக்கிரமித்து கொள்கிறது !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (12-Jan-16, 6:07 pm)
பார்வை : 151

மேலே