முடிவில் ஓர் ஆரம்பம்
ஒவ்வொரு வாரக் கடைசியிலும் ஏதாவது வேலை வந்துவிடுகிறது. கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கலாம் என்றால் முடிய மாட்டேங்குது.இந்த வாரம் அம்மா ஒரு வேலை வெச்சிட்டாங்க, ஊரில் உட்கார்ந்து கொண்டே.ஒரு நண்பர் பெங்களூர் வருகிறாராம். அவரை நான் தான் இரண்டு நாளைக்கு பார்த்து கொள்ள வேண்டுமாம். முதலில் அவரை நான் நகரத்தில் ஆயிரக்கணக்கில் வேலை தேடும் வாலிபராக தான் நினைத்தேன், அம்மாவிடம் நேரக அவரை அறை விலாசம் தந்து அறைக்கு அணுப்புமாறு கூறினேன். பின்னர் தான் வருவது மதன் என்று தெரிந்தது. மதன் பார்வை இழந்தவர், வேலூரில் வீட்டருகே இருக்கும் பார்வையிழந்தவர் இல்லத்தில் (Blind Home) இருப்பவர். இந்த இல்லம், தினமும் நான் கல்லூரி சென்ற பாதையில் இருக்கிறது. அம்மா அங்கிருக்கும் அனேக இல்லதாருக்கு நல்ல சினேகிதி. நான் மதனை முன்பொரு முறை பார்த்ததாக நியாபகம். முகம் நினைவிற்கு வரவில்லை.இப்ப நான் பெங்களூர் சிட்டி ஸ்டேஷனுக்கு தான் சென்றுகொண்டு இருக்கேன், அவரை கூட்டி வர. தினம் தினம் இந்த நெரிசலில் கடந்து செல்ல கடுப்பாக இருக்கும், இன்று வெள்ளிக்கிழமை வேறு, அனேக இளைஞர்கள் ஊருக்கு பயணிக்கும் தினம்.நான் ஸ்டேஷனுக்கு செல்கிறேன் என்று சொன்னதால் கார்திக்கும் என்னுடன் வந்தான்.கார்திக் என் சக ஊழியன். அவன் இறங்கிவிட்டான், நான் இப்போது வண்டியை நிறுத்தத்தில் நிறுத்திக்கொண்டுள்ளேன்.
“லால் பாக் எக்ஸ்பிரஸ் ஈஸ் அரைவிக் அட் பிளாட்பாரம் 5”. அடடா வழக்கமா முதல் பிளாட்பாரத்தில் தானே வரும்? அச்சோ அந்த பேம்பாலத்தை கடக்க வேண்டும்.ம்ம் வந்துவிட்டேன்.அட எந்த கோச்சில் வரார்? மறந்துட்டேனே? எங்கயோ எழுதினேனே..ஆங்..ஒரு துண்டு சீட்டுல் எழுதி பர்சில் வைத்தேன், S-2, 45. சிகப்பு சட்டை. நான் தான் அவரை அடையாளம் காண முடியும்..அது பெரிய பிரச்சனையா இருக்காது.வண்டி 15 நிமிடம் தாமதம். அப்பாடி வண்டி வந்துடிச்சு. ஆனா S2 முன்னாடி போயிடுச்சே.. நான் உங்க கிட்ட அப்புறம் பேசறேன்.
ஒரு வழியா அறைக்கு வந்துவிட்டேன், சாரி வந்துவிட்டோம்.அவர் அந்த இருக்கைவிட்டு நகரவே இல்லை.மற்ற சக பயணிகளிடம் உரையாடிக்கொண்டு வந்ததில், ஒரு வயதானவர், நான் வரும் வரையில் அவருடன் இருந்தார்.இப்ப அவர் முகம் நல்ல நியாபகம் வருது. கொஞ்சம் மெலிந்துருக்கிறார்.M.A., M.Phil படித்து இருக்கார்.ஸ்டேஷன்ல இருந்து என் வண்டியிலே அறைக்கு வந்தோம், சாப்பாடு வழியில பார்சல் வாங்கிட்டு வந்தேன்.எனக்கு சங்கோஜமா இருந்தது, எப்படி இவரை வைத்துக் கொண்டு உண்பது என்று.அவர் எப்படி சாப்பிடுவாருன்னு தெரியல. வரும் போது நெரிசல் கம்மியா இருந்தது. சாப்பிட்டோம்.இதோ என் பக்கத்தில் அவர் தூங்கிகிறார். நானும் தூங்க போகின்றேன்.
சனி இரவு பத்து மணி.ஊரே சனி இரவு என்றால் சந்தோஷத்தில் இருக்கும். நானும் மதனும் அறையில் இருக்கிறோம்.இன்று முழுவதும் இவரோடு தான் கழித்தேன். ஒரு நாளில் எனக்குள் சின்ன தாக்கத்தை ஏற்படுத்துவிட்டார் மனிதர். என்னென்னமோ தலைப்பில் பேசுகிறார்.காலையில் நான் சாப்பாடு வாங்க சென்ற போது, என் அலைபேசியில் அழைப்பு வந்து இருக்கு, தட்டு தடுமாறி அவர் சத்தம் வந்த இடத்திற்கு போய் அழைப்பை எடுத்துள்ளார். என் பால்ய நண்பன் தன்னுடைய திருமணத்திற்கு என்னை அழைத்து இருக்கான். ஆச்சர்யனம் என்னவெனில், நண்பனுடைய தொலைபேசி எண், வீட்டு விலாசம், கல்யாண மண்டப விலாசம்,கல்யாண நாள், நேரம் அத்தனையும் பிசிறு இல்லாமல் நான் மிண்டும் வந்தபோது ஒப்பிச்சார். நான் அசந்தே போய்விட்டேன்.சாதாரண கோச் நம்பர் கூட நான் எழுதி வைக்க வேண்டியதா இருக்கு, அதுவும் இல்லாம என் அலுவலக விலாசம், அறைவிலாசமும் என் நண்பனுக்கு சொல்லி இருக்கார். அம்மா கொடுத்து இருக்க வேண்டும்.
பஸ்வேஸ்வரய்யா பல்கலைகழகத்தில் Ph.D செய்ய ஏதோ தேர்வு மதனுக்கு. விளையாட்ட அவரிடம் கேட்டேன் “ஏன் சார் M.A., M.Phil போதாதா?” அதுக்கு அவர் “வாழ்கையில ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனும். அந்த தேடல் எப்ப நிற்கிறதோ அப்போதே உடல்ல உயிர் மட்டும் தான் இருக்கும், ஜீவன் இருக்காது. அதுவும் இல்லாம மனசு ஏதாச்சும் வேலையில் ஈடுபட்டால் மற்ற பிர்ச்சனைகள், துயரங்கள் கொஞ்சமாச்சும் மறைந்து போகும்”. வாழ்கை தத்துவத்தை போகிற போக்கில் சொல்கிறார். நானும் இளநிலை பட்டம் வாங்கி இங்க வந்து 5 வருடம் ஆகின்றது. என்ன தேடல் எனக்கு? பணம் ஒரு தேடலா? கேட்கவேண்டும் என்று நினைத்தேன் அவரிடம், ஆனால் என்ன விமர்சனம் வரும் என்று பயந்து கேட்கவேயில்லை.
R.K.நாராயணன் பற்றி, நாராயண மூர்த்தி பற்றி, கம்பராமாயணம், ஹிட்லர், அமேரிக்கா உலக ஆதிக்கம், வர்த்தகம், இரண்டாம் உலகப்போர் நாசங்கள், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பற்றி நாக்கு நுனியில் விஷயங்கள் வைத்து இருக்காரு. பாதி செய்திக்ள பற்றி கேள்வி பட்டது கூட இல்லை நான். எப்படி உங்களால இவ்வளவு பேச முடியுதுன்னு கேட்டேன். “கண்கள் மூடியிருந்தாலும் காது திறந்து தானே இருக்கு. நேரம் கிடைக்கும் போது நூலகம் சென்றுவிடுவேன். அங்க ஏதாச்சும் உங்கள போல நல்ல உள்ளம் (என்னை போலவா?) புத்தகம் வாசிப்பார்கள், தினசரி வாசிப்பார்கள். சில சமயம் கேஸட்டுகளில் பதுவு செய்து தருவார்கள். நான் பட்டம் படித்ததே இப்படி தான். என் பட்டங்கள் எல்லாம் மதனில் தனிமுயற்சியல்ல பல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சி. எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியமா? கலாம் இன்று அனுஆயுத ஒப்பந்தம் பற்றி பேசியுள்ளார், அதை வாசித்து காட்ட முடியுமா?
சாப்பாடு கூட சாப்பிடுவது இல்லை. வெறும் பழரசம் தான்.வெளியூரில் வயிறை கெடுத்துக்க கூடாதாம்.’பின்னர்’ நம்மை விட அதிக தொல்லை கழிவறை செல்ல. முதல் முறையாக பெங்களூர் வருகிறார். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் வேலூர் அருகே ஒரு கிராமத்தில் தான். சென்னைக்கு பல முறை பேயிருக்கிறாராம். பெங்களூரை பற்றி என்னை விட அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார். உலகம் பற்றி வேண்டாம், நாம் செல்கின்ற வாழ்கின்றா ஊரை பற்றியாவது தெரியவேண்டாமா என்பது அவர் கருத்து.
மாலை வரும் வழியில் லால் பாக் கார்டன்ஸ்க்கு சென்றோம்.ஒரு மணி நேரம் பேசியபடி, சுற்றி வந்தோம். அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் என்னை உற்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு. என்னுடன் ஒரு பார்வையற்றவர் வருகிறார் என்கிற ஒரு வெட்கமா என்று தெரியவில்லை. என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு நீங்குவது தெரிந்தது, அதனையும் மீறி ஒரு கடமை எனக்கு உள்ளதாகத் தோன்றியது. நாளைக்கு Kemp Fort கூட்டிட்டு போக சொன்னார்.63 அடி உயரத்தில் சிவன் சிலை அங்க இருக்கு முடிச்சா போகலாம் என்றார். தூக்கம் வருகின்றது. ரொம்ப சுற்றி விட்டேன்.. நாளை பார்ப்போம்.
இதோ இரயில் சென்றுவிட்டது. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.மத்தியம் 2.30. மதன் கிளம்பிவிட்டார். இந்த இரண்டு நாளில் எனக்குள் பல்லாயிரம் கேள்விகள் கிளப்பிவிட்டு கிளம்பிவிட்டார். காலையில் Kemp Fort அழைத்து சென்றேன். பத்து நிமிடத்தில் வெளியே போகலாம் என்றார். கோவில் என்றால் அமைதி வேண்டும், மனசுக்கு சாந்தம் வேண்டும். அது இங்க காணோம். வா போகலாம் என்றார். பின்பு அருகே இருந்த நண்பர்கள் அறைக்கு சென்றோம்.அவர்களிடம் சரளமாக பேசினார். ரயில் நிலையத்திற்கு விரைவில் சென்றோம், முன்பதிவு செய்யாததால். இருக்கை ஒன்று பிடித்து கொடுத்து அவரை அமர்த்தினேன்.தண்ணீர் பட்டில், பிஸ்கட் பேக்கட் வாங்கி தரும் போது என் கையை பற்றிக்கொண்டு “நன்றி !! உங்களுக்கு இரண்டு நாள் தொல்லை கொடுத்துவிட்டேன். எனக்கு இங்க Ph.D சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை,ஆனா இந்த இரண்டு நாள் இனிதா போச்சு.எங்க போய் எப்படி சிரமப்பட போகிறேன் என்று நினைத்தேன். எந்த சிரமமும் இல்லாமல் திரும்ப போகிறேன். வேலூர் அடுத்த முறை வந்தால் வந்து பார்க்கவும். அங்கு சென்றதும் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன். மீண்டும் நன்றி ”
“நன்றி கூற வேண்டியது நான் தான் மதன் சார்.எனக்கு எந்த சிரமமும் இல்ல. திருப்தியா இருக்கு உங்களை போல ஒருவருக்கு உதவியதற்கு. உங்க நட்பும் சினேகமும் எனக்கு ஒரு புது உலகை காட்டி இருக்கு. உங்க ஒவ்வொரு வார்தையும் தூங்கிகிட்டு இருந்த எனக்கு, ஓங்கி அடிச்சாற்போல இருந்தது. நீங்க சொன்னீங்க இல்ல, ஊனப்பட்டவர்களை பார்த்து பாவப்படாதே, அவங்களுக்கு பாவப்பட்டால் பிடிக்காது, பாசத்தை தாவென்று, என்ன நிதர்சனமான வார்தைகள்.உங்களை போல கல்வியை மக்களிடம் என்னால் எடுத்துகிட்டு போக முடியாது(மதன் ஒரு ஆசிரியர்) , ஆனால் இப்ப சொல்கிறேன் என்னால் ஆனதை கண்டிப்பாக செய்கிறேன்.
நேற்று இரவு குளிக்கும் போது மின்சாரம் துண்டித்தது ஒரு பத்து நிமிடம். உள்ளே ஒன்றும் தெரியவில்லை. எங்க தண்ணிர் இருக்கு எங்க சோப்பு இருக்கு தெரியவில்லை.தடவி தடவி குளித்து முடிப்பதற்குள் வேர்த்துவிட்டது. துண்டை தேடி, பனியன் போட்டு வெளியே வருவதற்குள் ஒரு போராட்டமே நடந்தது. அப்ப தான் உங்க கஷ்டம், சிரமம்,போராட்டம் விளங்கியது தெளிவாக..இனி தெருவில் போகும் போது பார்வையற்றவர் தென்பட்டால் , அவர்களுக்கு வாழ்கை பாதை காட்டும் அளவிற்கு வளரவில்லை, அட்லீஸ்ட் அவங்க எங்க போகனுமோ அதுவரை பாதை காட்டுவேன்.
இந்த நிமிடம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஆனந்தமா இருக்கு மதன் சார்.மனசுக்கு இதமா இருக்கு, ஏன்னு தெரியலை. சிக்னல் விழுந்துவிட்டது. வேலூர் சேர்ந்ததும், எனக்கு செய்தி தெரியப்படுத்துங்க.”
இரயில் சென்றுவிட்டது. நான் இதோ பிளாட்பாரத்தில் நிற்கிறேன். இப்போது நினைத்து பார்த்தாலும் எப்படி நான் தொடர்ந்து இவ்வளவு பேசினேன்னு தெரியவில்லை. இந்த வார இறுது எனக்குள்ள ஒரு புதிய ஆரம்பமா இருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ மனதில் பட்டதை சொன்னேன். எனக்குள்ள ஏற்பட்ட பாதிப்பில் சிறு பகுதி தான் நான் சொன்னேன். அச்சோ நாலு மணி. ஒரு நண்பனை பார்ப்பதாக வாக்கு கொடுத்திருக்கேன். இரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறேன். நேரம் கிடைக்கும் போது மீண்டும் சந்திக்கிறேன். வரட்டா…..
_________________________
படைப்பு – விழியன் - 2006