மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் திருநாளில்
மாண்புடனே நாம் நடந்திடுவோம்
வீட்டில் வளர்த்திடும் மாட்டுக்கு
விடுதலை ஒருநாள் கொடுத்திடுவோம்

புன்னகை சுமந்து மாட்டுக்கு
பொங்கல் வைத்தே படைத்திடுவோம்
சந்தன குங்குமம் மாலையிட்டு
சகலரும் மாட்டை வணங்கிடுவோம்

அன்னையை அம்மா என்றழைக்கும்
அறிவைத் தந்தது மாடுகளே
தாயே இல்லாத குழந்தைக்கும்
தன்பால் தருவதும் மாடுகளே

பசுவினை காலையில் வணங்கிவிட்டு
பணிகளை தொடங்குவர் குலமாதர்
குடும்பத்தின் குலதெய்வம் பசுவென்று
கும்பிடுவர் இன்றும் பலமாதர்

வைக்கோல் தவி்டைத் தானுண்டு
வளமானப் பாலை நமக்களிக்கும்
கஞ்சிக் கழுநீர் தான்குடித்து
கலயம் பாலை கரக்கவைக்கும்

குறைவாய் உணவை தந்தாலும்
நிறைவாய் உழைத்திடும் மாடுகளே
சாட்டை சவுக்கால் அடித்தாலும்
சளைக்காமல் உழைப்பதும் மாடுகளே

நன்றி யில்லாத மனிதருக்கும்
நன்மை செய்வது மாடுகளே
கன்றுக்கு சுரக்கும் பசும்பாலை
காசாக்கி பிழைக்கும் மனிதர்களே

வாயற்ற ஜீவன் மாடுகளை
வதைக்காமல் நாம் இன்றேனும்
வயிறார உணவை படைத்திடுவோம்
வாழ்த்துகள் செல்லி மகிழ்ந்திடுவோம்

உழவுக்கு உற்ற துணையாகி
உருக்குலையும் நம் மாடுகளை
உள்ளத்தில் வைத்தேப் போற்றிடுவோம்
ஒன்றாய் சேர்ந்தே அன்பிடுவோம்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (16-Jan-16, 4:15 pm)
பார்வை : 131

மேலே