மனிதம் விதைத்த மழை

கொட்டிய வான்மழை கொந்தளிக்கச் செய்ததே
பட்டது கொஞ்சமோ? பாதகமோ ? -கட்டுடைத்த
ஏரிகளே! போக்கிட மேதெனத் தேடியே
போரிடவோ வந்தீர் புகல் .

உடைமை யிழந்து உயிரைப் பிடித்து
கிடைத்த யிடத்திற் கிடந்தார் - அடைந்த
துயரு மடங்குமோ சொல்லில்? இறைவா !
இயற்கை கொதித்ததும் ஏன் ?

கவள உணவுக்குக் கையேந்தி நின்ற
அவல நிலையை யளித்தாய் - துவண்ட
யிதயம் துணிவை யிழந்து வருந்த,
உதவியக் கைகள் உயர்வு .

மரித்திட வில்லை மனித மிதனைப்
புரிந்திட வைத்தது போலும் - தெரியா
முகங்களின் சேவையில் மூழ்கிடச் செய்தே
அகத்தை நிறைத்ததே அன்பு .

உள்ளம் சிலிர்த்தது உன்னதச் சேவையில்
கள்ள மனமும் கரைந்தது - வெள்ளத்தில்
சிக்கித் தவித்தோரைத் தேடி யுதவிட்ட
மக்களின் அன்பே வரம் .

பொழிந்த மழையும் புகட்டியது பாடம்
விழியில் வழிந்தது வெள்ளம் - பிழிந்துக்
கனிந்த மனத்தில் கருணை துளிர்க்க
மனிதம் விதைத்த மழை .

( துபாய் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் முதற்பரிசும், ஐந்து கிராம் தங்க நாணயமும் வென்ற கவிதை )
போட்டியைச் சிறப்புற நடத்திய துபாய் தமிழர் சங்கமத்துக்கும் , மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Jan-16, 10:14 pm)
பார்வை : 132

மேலே