பொங்கல் விளையாட்டு இது எங்கள் விவசாய விளையாட்டு

மாடும் விளையாடும்
எங்கள் வீரமும் விளையாடும்
தாவணிப் பெண்களின் கண்களோடு...!

நிலமும் விளையாடும்
அதன் வளமையும் விளையாடும்
மகிழ்ச்சி தரும் விளைச்சலோடு...!

உடம்பும் விளையாடும்
எங்கள் வேர்வையும் விளையாடும்
தானியமாய் உருமாறி பொங்கலோடு...!

கதிரும் விளையாடும்
அதில் பறவைகளும் விளையாடும்
உயர்ந்து நிற்கும் ஆதார தண்டோடு...!

உறவும் விளையாடும்
ஊர் அன்பும் விளையாடும்
ஈடில்லா கிராமிய உணர்வோடு...!

**
அஃறிணை எங்கள்
உயர்திணை கால்நடைகள்
வண்ணக் கொம்போடு
மணியசைத்து தலையசைத்து
மனம் மகிழும் விளையாட்டு...!

அதைப்பார்த்து நன்றியோடு
கைதொழுவோம்
இதுவும் எங்கள் விளையாட்டு...!

மரக்கலப்பை மாடு கொண்டு
எங்கள் மூதாதையர் விளையாட்டு
செழித்த நிலங்களோடு...!

எந்திரக்கலப்பை கொண்டு
எங்கள் நிகழ்கால விளையாட்டு
அழிந்துவரும் நிலங்களோடு...!

பசுமை வண்ணமின்றி
இனி பூமகளின் விளையாட்டு
பசித்து மடியும் உங்கள் வயிர்களோடு...!

இனியென்றும் வேண்டாம்
பசித்து மடியும் வருங்காலம்...
என்றென்றும் வேண்டும்
மகிழ்ச்சி பொங்கும் பொற்காலம்...!

நிலமகளை குளிர்விப்போம்
பசுமையாலே...!
உலக உயிர்களை குளிர்விப்போம்
அறுவடையாலே...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (16-Jan-16, 9:47 pm)
பார்வை : 270

மேலே