காட்சிப் பிழைகள் 37 – கார்த்திகேயன்

மண்ணில் பெண்ணாய் நீ, பிறப்பெடுத்த மறுநொடியே...
என்னில் இன்பமாய், வேர் விட்டது காதல் பூச்செடியே...!

விழுகின்ற வார்த்தையில், வாருணிக்கும் வரும் போதையடி !
எழமுடியாமல் தவிக்கிறேன், சிந்தும் சிரிப்பொலிகள் போதுமடி !

மணல்போல் கொட்டி கிடக்கும், நினைவு குவியல் உள்ளே !
மனம்போல் குளியல் போடு, பச்சைப் பஞ்சுருட்டான் போலே !

இருக்கின்றாயே, என் காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் ஏன், அகப்படவில்லை கண்ணுக்கு அக்காக் குயிலாக !

மின்னுகின்ற மின்மினியாய், நெஞ்சை தினம் உருக வைக்கிறாய் !
மிஞ்சுகின்ற உயிரையும், மிச்சமின்றி ஏனடி உறிஞ்சி நிற்கிறாய் !

என் உணர்வுகள் தொலைத்து, நடமாடும் இயந்திரம் நானே !
உன் நினைவுகள் இயக்கும், உயிருள்ள எந்திரனும் நானே !

ஊரும் உறவும் உன்னால், எனக்கு என்றும் உறவாகுமே !
வேற்றுக் கிரக வாசியாய், விலகினால் மனம் சருகாகுமே !

வழி மறித்தது, வாழ்நாள் எல்லாம் உன்னோடு வாழ்வதற்கு !
வழிப்பறியென பழி போட்டால், வாழும் இந்த வாழ்வு எதற்கு ?

என்றும் நீ இருக்கும் இதயத்தில், பன்னங்கள் விதைக்காதே !
இருவிழி ஈரமானால், வழுக்கும் பாசிகள் வளரும் மறக்காதே !

படுத்தும் காதலை, பார்வை கிண்ணத்தில் எடுத்து வந்தேன் !
ஏறெடுத்தும் பாராது நீ-போனால், எவ்விடம் நான் போவேன் ?

காயங்கள் தந்தாலும், காட்டிட உன்னிடம் தான் வந்திடுவேன் !
மாயங்கள் செய்யும் அணைப்பில், காயம் தனை மறந்திடுவேன் !

உறைபனிக்குள் உறைந்து கிடக்கிறது, என்காதல் வெண்புறா !
உறைவிடம் நீதானே, உணர்வுகளை மீட்டெடுக்க விரைந்துவா !

இழந்த வாழ்வை உயிர்ப்பிக்க, இரிஸ்கள் ஏந்தி வருவாயா ?
மலர்ந்த காதலுக்கு மௌனமாக, பாப்பீக்கள் மலர் தருவாயா ?

ஆயுள்வரை பிடித்து ஆட்டுவிக்குதே, காதல் எந்தவகை கிரகம் ??
ஆயுளையும் முடிக்கத் துணியுதே, காதல் எந்தவகை கிறக்கம் ??

என்னில்-உன்னுயிர், உன்னில்-என்னுயிர், இது படைப்புப் பிழையோ ???
மண்ணில் காட்சிப்பிழைக்கு சாட்சி, கார்த்தியின் கஸல் மழையோ ???

*******************
பின் குறிப்பு:
*******************
வாருணி (பழங்கால மதுவகை) – மிகவும் காட்டமானது. குடித்தவுடன்
போதையில் தள்ளாடி விழச் செய்யும்.
_________________________________________________________________________
பச்சைப் பஞ்சுருட்டான் (பறவை) – அடிக்கடி மணல் குளியல் போடுவது.
_________________________________________________________________________
இருவாச்சி (பறவை) – மழைக்காட்டின் குறியீடாக இருப்பது.
_________________________________________________________________________
அக்காக்குயில் (பறவை) – மனிதர்களுக்கு அருகில் இருந்தாலும்
கண்களுக்கு எளிதில் புலப்படாது.
_________________________________________________________________________
மின்மினி – இரையைப் பிடித்தவுடன் அதை மயக்கமடையச் செய்து
உடலினுள் செரிமான நொதிகளை செலுத்தி, அவயங்களை கூழ்மமாக
மாற்றி உறிஞ்சிவிடும்.
_________________________________________________________________________
பன்னங்கள் (தாவரம்) – வித்துக்கள், பூக்களைக் கொண்டிராதது.
_________________________________________________________________________
இரிஸ்கள் (பூக்கள்) - உயிர்ப்பித்தல்/வாழ்க்கையைக் குறிக்கும் அடையாளம்.
_________________________________________________________________________
பாப்பீக்கள் (பூக்கள்) – இழப்பிற்கு ஆறுதல் வழங்கும் அடையாளம்.
_________________________________________________________________________

(கஸல் தொடரில் வாய்ப்பு தந்த நண்பர் ஜின்னாவுக்கும், எழுத்து தளத்திற்கும்
மனமார்ந்த நன்றிகள்!)

எழுதியவர் : கார்த்திகேயன் (17-Jan-16, 3:29 am)
பார்வை : 575

மேலே