பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்....!!
இறைவனின் ஓர வஞ்சனை நாடகத்தில்
சிக்கிக் கொண்டவர்கள்
ஊனமுற்றவராய் சிலரும்
ஒன்றுமே இல்லாதவராய் பலரும்....!!
மானம் விட்டு கேட்பார்கள்
"அய்யா பசிக்கிறது... தர்மம் செய்யுங்கள்"
கால்களில் வேகத்தைக் கூட்டி
இரக்கத்தை தொலைத்துப் போவான்
பிச்சைக்கும் பிச்சையிடாத
பெரும் பிச்சைக்காரன்..!!
பணமிருந்தும் பிச்சைக்காரன்
ஆரோக்கியத்திற்கு கையேந்தி
மருத்துவ மனைகளில்...!!
உறவுகள் அற்றவனும் பிச்சைக்காரன்
அன்பிற்காக கையேந்தி
கிடைத்த இடத்தில் மடிப் பிச்சை..!!
குழந்தை வரம் வேண்டி
துண்டு விரித்து வேண்டுதலாய்
கோவிலில் பக்தி பிச்சைகள்..!!
அனைத்துப் பிச்சைகளும்
இன்னல் தந்ததாய் தெரியவில்லை..
நூதனமாய் சில பிச்சைகள்
உடல் நோகாமல்...!!
வரதட்சினை வேண்டாம்
மணப்பெண்ணுக்கு
நூறு பவுன் போட்டு விடுங்கள்
மாப்பிள்ளைக்கு ஒரே ஒரு கார்
சின்னதாய் ஒரு வீடு ..
சத்திரமும் சாப்பாட்டு செலவு மட்டும்
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்
மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..!!
திருமண திருவோடு ஏந்தி
அனைத்தையும் பிச்சையெடுத்து
பிச்சையிட்டவனை பிச்சைக்காரனாக்கும்
கல்யாண பிச்சைகள் காலம் .காலமாய்.!
ஐந்தாண்டு பிச்சைகள் அறிந்ததுதான்
வசதியானவர்களும் ஏழை வாசலில்
வணங்கி நின்று
வறுமை போக்குவதான வாக்குறுதியளித்து
தங்கள் வறுமைகளை போக்கிக்கிக்கொள்ளும்
வேட்பாள வாக்குக் பிச்சைகள்..
பிச்சை வாங்குவதற்கும் பிச்சையிடும்
அரசியல் பிச்சைகள்...!!
நாடு நலம் பெற
பிச்சை பெறாமல் பிச்சையிடுங்கள்..!!
கந்தலாடை அணிந்தவர்கள் மட்டும்தான்
பிச்சைக்காரர்கள் என்று யார் சொன்னது...??
அதிகாரப் பிச்சை..!! அரசியல் பிச்சை
வரதட்சிணைப் பிச்சை என்று
பட்டாடை கட்டிய பிச்சைகளும் பரவலாய்..!!
============================================================
குறிப்பு: 09-01-2016 அன்று நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றத்தின்
19-ஆம் ஆண்டு விழாவில் வாசித்த கவிதை. கவிதை
தலைப்பினை அளித்து ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு
கவிதை வாசிக்க அழைப்பு விடுத்த அம்மன்றத்தின்
நிறுவனர் திரு கண்ணையா அவர்களுக்கு எனது நன்றிகள்.
===========================================================