வேறு நிலாக்கள் 1 பிரணவன்

எனது மீன்களும் சமுத்திரமும்,அந்த இரவும்
***

புது வீட்டில் மீன் தொட்டிக்கு
போதிய இடமில்லை

பிரியாவிடை கொடுத்து
கடலில் விட்டுவந்தேன்

விடிந்தும் விடியாமலும்
கதவைத் தட்டின மீன்கள்

அந்நிய இடத்தில்
அறிமுகமில்லா முகங்களோடு
அநாதை போல் தவித்ததில்
உன்னை நினைத்து
அழுதேவிட்டோம் தெரியுமா
என்றது பாசக்கார மீனொன்று

பேருதான் பெரியஇடம்
ரா முழுக்க பட்டினி
பசியறிந்து உன்னைபோல்
சோறுபோட யாருமில்லை
புலம்பியது
பசிபொறுக்கா மீனொன்று

தண்ணியை மாத்தும்
பழக்கமே இல்லையாம்
அருவெறுப்பாய் சொன்னது
சுத்தக்கார மீனொன்று

எத்தனை பெரியதொட்டி
நீந்திநீந்திச் செதில்கழன்றுபோனது
சோகையாச் சொன்னது
சுகமில்லா மீனொன்று

அந்த பிக்பிஷ் வெரி பேட் அங்கிள்
என்னை மிழுங்கியே இருக்கும் தெரியுமா
குட்டிமீனின் மழலையில்தான்
விபரீதம் புரிந்தது

செருப்பு போடுமிடத்தில்
சின்னதாய் ஒரு
இட்ம்கொடுக்க மாட்டாயா
இருக்கும்வரை உன்னுடனே
இருந்துவிட்டுப்போகிறோமே---
கதறின மீன்கள்

நிர்கதியாய் நிழலின்றி
தனித்துவிட்டதொரு நாளில்
என் அப்பனைப்பார்த்து
என் தாய் கதறிய
வார்த்தைகள் அவை

கட்டிலின் மேல்
தொட்டியை வைத்துவிட்டு
வெளியில் படுத்துக்கொண்டேன்
தூக்கம் கண்ணை அழுத்தியது

அது
தனிமையில் நான்
நேற்று இழந்தது.

-பிரணவன்

எழுதியவர் : பிரணவன் (17-Jan-16, 2:22 pm)
பார்வை : 232

மேலே