அறை எண் பதினாறு - மீள்பதிவு -1
.........................................................................................................................................................................................
(நெருங்குவது பிரியத்தினால் எனில் விலகுவதும் அதற்காகவே.)
பாகம் 1
தேதி: 20.8.2014
நகரத்தின் பிரதான சாலையில் அமைந்த அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்கு புதிய இயக்குனராக அப்போதுதான் பொறுப்பேற்று இருந்தார் டாக்டர் மிஸஸ் பூவரசன். அலுவலர்கள் சால்வையும் பூங்கொத்தும் கொடுத்து வாழ்த்து சொல்லிச் சென்ற பின் பூர்வாங்க வேலைகளை முடித்து விட்டு தனது ஏசி அறையின் சொகுசு நாற்காலியில் சாய்ந்த போது மணி மாலை ஏழு.
இயக்குனர் பதவிக்குத்தான் எத்தனை போட்டி! அதிகாரமும் கௌரவமும் நிறைந்த பதவியல்லவா?
இந்த அறை அவருக்கு ஏனோ பரிச்சயமானது மாதிரி தெரிகிறதே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தேதி: 20.8.1991
சின்ன கொலுசு சத்தம் கொஞ்ச, அப்போதுதான் வந்தாள் சசிகலா. தொடை வரை தொங்கும் அடர் கூந்தல், அளவெடுக்கும் கண்கள், நேர்க்கோட்டில் நடந்து நடனமாகிப் போன நடை. ‘‘ நைட் டூட்டி டாக்டர் வந்துட்டாங்க’’ நர்ஸ் கீதாம்பரி தங்கமணி மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டை எடுத்து நீட்ட, ’சஞ்சய்‘ என்ற பேருக்கு நேரே அன்றைய தேதியில் தன் கையெழுத்தைப் போட்டாள் சசிகலா.
‘‘ரூம் நம்பர் 16 ரெடியாயிடுச்சா? ’’ கீதாம்பரியைப் பார்த்துக் கேட்டாள்.
கண்களிலும், கன்னங்களிலும் கபடச் சிரிப்பு நிரம்ப உதடுகளுக்குள் நாவைத் துழாவிக் கொண்டே சாவி எடுத்து நீட்டினாள் கீதாம்பரி.
‘‘கொஞ்சம் யோசிச்சுகுங்க மேடம். அது ஒரு மாதிரி மூடை கிளப்புற ரூம். ..உங்களுக்கு முன்னாடி டாக்டர் அபயா அங்க தங்கியிருந்தாங்க. அவங்களுக்கும் டாக்டர் கருணாகரனுக்கும் நைட் டூட்டியிலே லிங்க் வந்து பேர் கெட்டுடுச்சு. டாக்டர் ஜமுனாவும் டாக்டர் மாதவியும் அதே கதைதான் ஆனாங்க. ரூமோட ராசியோ என்னவோ தனித்தனியா உள்ளே நுழைவாங்க; சேர்ந்து வெளியே ஏடாகூடமாகி வருவாங்க.’’
சசிகலா சட்டை செய்யவில்லை. ஒரு சின்னப் புன்னகையோடு அறையை நோட்டமிட்டாள். ஒரு எமர்ஜென்சி கேஸை திறம்பட கையாண்டதற்காக இந்த மருத்துவமனையின் இயக்குநர் சலுகையாகத் தங்க அனுமதித்த அறை இது.
நல்ல கலை ரசனையோடு கட்டப்பட்ட அறை! டூட்டி டாக்டர் அறைக்குத் தேவையே படாத, சுவற்றில் பதிக்கப்பட்ட எல்லோரா வகை ஓவியங்கள்! வலது மூலையில் தனித்திருக்கும் பெண்ணின் ஓவியம். அதைத் தவிர மற்றதெல்லாம் ஆண்-பெண் சங்கமம் ! பிரமாத லைட்டிங், கதவைத் திறந்தால் கம்மென்று உள் நுழையும் மகிழம்பூ வாசம்; விசாலப் படுக்கை; இருவர் உட்கார்ந்தால் கால் இடிக்கும் டேபிள், சேர். (அடப்பாவிகளா!) இந்த மருத்துவமனையின் சொந்தக்காரர் திருமணமான புதிதில் கட்டிய அறை.
டபிள் டூட்டி. பதினாறு மணி நேரம் இந்த மருத்துவமனையில் தங்கிப் பணி புரிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு வந்தால் அடுத்த நாள் மதியம் பன்னிரண்டரை மணிக்குப் போக வேண்டும். இங்கேயே குளியல், சாப்பாடு இத்யாதி இத்யாதி. அதற்குத் தனியறை வேண்டும். அறையின் அமைப்பு அவளுக்குத் தேவையில்லாத விஷயம்.
சசிகலாவின் சொந்த ஊர் வத்தலகுண்டு. தந்தை காலமானதும் கூடப் பிறந்த நான்கு அண்ணன்களும் ஒவ்வொருவராக அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். தாயையும் சேர்த்துக் கொள்ளவில்லை.
எம்பிபிஎஸ் முடித்த கையோடு தாயாரோடு ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவியாக வேலை பார்த்து வந்தாள். மருத்துவமனையிலேயே எந்நேரமும் தங்கி நோயாளிகளை கவனித்துக் கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலற்ற வேலை; குறைவான சம்பளம்.
தனித்திருந்து தாயைத் தாங்க வேண்டி இருந்ததாலும் அனுபவத்துக்காகவும் அவள் அந்த மருத்துவமனையில் தொடர்ந்தாள்.
ஒரு வருடம் கழித்து தாயை ஊரிலேயே விட்டு விட்டு, பட்ட மேற்படிப்புக் கனவுகளோடு சென்னை வந்தபோது சசிகலா கையிலிருந்தது ஒரு சூட்கேசும், தோள் பையும்தான். மூன்றாந்தர லேடீஸ் ஹாஸ்டலில்தான் தங்க இடம் கிடைத்தது. ஏதாவது தனியார் மருத்துவமனையில் வேலை தேட வேண்டும். வேலை பார்த்துக் கொண்டே பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குப் படிக்க வேண்டும்.
சென்னையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாயில்லை. அங்கேயும் சிபாரிசு; முன்பணம். இல்லாவிட்டால் மூன்று மாதம் சம்பளமில்லாமல் வேலை செய்யச் சொன்னார்கள். வேலை திருப்திகரமாய் இருந்தால் நான்காம் மாதம் சேர்த்துக் கிடைக்கும். அப்படி இல்லையென்றால் வெறுங்கையோடு வெளியே அனுப்பி விடுவார்கள்.
அந்த சமயத்தில்தான் சஞ்சய்யை சரணடைந்தாள்.
தொடரும்...