அறை எண் பதினாறு - பாகம் 2
.....................................................................................................................................................................................
முன்கதைச் சுருக்கம்
பட்ட மேற்படிப்புக் கனவுகளோடு சென்னை வருகிறாள் சசிகலா. தற்போது தங்கமணி மருத்துவமனையின் டூட்டி டாக்டர்.
.........................................................................................................................................................................................
சஞ்சய் அவள் கல்லூரித் தோழன். ஹவுஸ் சர்ஜனான சமயம் முதற்கொண்டு அந்த மருத்துவமனையில் பணி புரிந்து வருபவன். சிங்கிள் டூட்டி, டபிள் டூட்டி என்று செய்து எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவன் அந்த மருத்துவமனையை விடவில்லை. வெறும் எம்பிபிஎஸ்ஸை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆள் பலம், ஆஸ்பத்திரி பலம் இல்லாது ப்ராக்டிஸ் பண்ணி பிழைக்க முடியாது. முதுகலை படிப்பு கிடைக்கிற வரை பிழைப்பை ஓட்ட தங்கமணி ஹாஸ்பிடல் மாதிரி வேலைப்பளு அதிகமில்லாத பிரைவேட் ஹாஸ்பிடல் அவசியம். அதற்காகவே அவன் அதை வைத்திருந்தான்.
சசிகலா கேட்டவுடன் கொடை வள்ளலாக மாறி தன் டூட்டி மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்குப் போய் விட்டான். அங்கே பதினைந்து நாள் டூட்டி பார்த்து தொகுப்பூதியமாக இதே எட்டாயிரத்தை வாங்கி விடுவான். என்ன, அங்கேயும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் உண்டு. பதினைந்து நாள் சிறை வாசம் போல் அங்கேயே தங்க வேண்டும்; இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பானலில் வருகிற ஆண் டாக்டர்கள் மட்டும்தான் டூட்டி பார்க்க அனுமதிக்கப்படுவர்; பானலை வருடத்துக்கு ஒரு தரம் புதுப்பிக்க வேண்டும்; பானல் டாக்டர்கள் அடுத்தடுத்து டூட்டி பார்க்கக் கூடாது; ஒரு வருடத்தில் மூன்று தடவைக்கு மேல் டூட்டி பார்க்க முடியாது.
சஞ்சய் பதினைந்து நாள் டூட்டி பார்த்து முடித்திருப்பான். மீதி பதினைந்து நாட்கள் வீட்டை கவனித்துக் கொண்டிருப்பான். இப்போதெல்லாம் அவன் பெற்றோருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது. சஞ்சய் இல்லாவிட்டால் வீடு ஆட்டம் கண்டு விடும்.
‘‘சசி, நீ என் இடத்தில் எனக்குப் பதிலா வேலை செஞ்சா ஒரு ஷிப்ட்டுக்கு நாலாயிரத்தி எண்ணூறு ரூபாய் கிடைக்கும். புது அப்பாயிண்ட்மென்டா வந்தா நாலாயிரம் ரூபாய்தான் கிடைக்கும். ஆனா உனக்குன்னு தனிப்பேரு, அடையாளம் கிடைக்கும். உனக்கு என்ன வேணும்? பணமா, சுயமா?’’ அன்றைக்கு சஞ்சய் அப்படித்தான் கேட்டான்.
‘‘நீ என் ஃப்ரண்டு சஞ்சய். உனக்குப் பதிலா வேலை செய்றதுல எனக்கு ஆட்சேபணை இல்ல. ’’ சசிகலா புன்னகைத்தாள். ‘‘அப்படி செஞ்சாதானே என் கொடை வள்ளல் ஃப்ரண்ட்டோட இடத்தை இங்கே தக்க வைக்க முடியும்? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்ல மூணு டூட்டி முடிச்சதுக்கப்புறம் அய்யா என்ன பண்றதா உத்தேசம்? ’’
சஞ்சய் நெற்றியில் தட்டிக்கொண்டான்.
‘‘அந்த பாயிண்ட்டை நான் யோசிக்கவே இல்லை’’ அவன் வாய்க்குள் சிரித்தபடி திரும்பிக் கொண்டான்.
இப்படி சஞ்சய் கோட்டை விடுவதும் சசிகலா விட்ட கோட்டை பிடிப்பதும் புதிதல்ல.
‘‘தவிர எனக்குப் பணம் தேவைப்படுது சஞ்சய் .நான் அம்மாவைத் தாங்கணும். எந்த அண்ணன்க மடியில விழுந்து புரண்டு வளர்ந்தேனோ அந்த அண்ணன்களே என்னை வீட்டை விட்டு வெளில போகச் சொல்லிட்டாங்க. அவங்க என் வீட்டு வாசல் வந்து எனக்காக காத்திருக்கணும். அந்த அளவு செட்டில் ஆகணும்- அதுவும் அவங்க தங்கச்சியா இருந்து இதைச் செய்யணும்- ஒருத்தனுக்கு பெண்டாட்டியா இல்லாம! ’’
‘‘கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாதா?’’
‘‘பண்ணி வைக்க வேண்டியவங்கதானே துரத்தி அடிக்கிறாங்க? காதல் கல்யாணம்னு போகலாம். இது ஆயிரத்தி தொளாயிரத்தி தொண்ணூறாம் வருஷம் சஞ்சய். காதலை குணக்கேடா பார்க்கிற காலம். நான் முறைப்படி ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிகிட்டாலும் ஓடிப் போய்ட்டேன், இழுத்துகிட்டு போய்ட்டேன்னுதான் பேர் வரும். வத்தலகுண்டு என்ன அமெரிக்காவுலயா இருக்கு? பொண்ணுங்கள படிக்க அனுப்புனா வீட்டுக்கு அடங்க மாட்டாங்கன்னு ஒபினியனே இருக்கு. அதுக்கு நான் உதாரணமா இருக்கப் பிடிக்கல. படிச்ச பொண்ணு தைரியமா தனியா நிக்கிறான்னு பேர் வரட்டுமே. அதுதான் எங்க அண்ணன்களையும் குத்தும். ’’
பல்லைக் கடித்துக் கொண்டு தலை குனிந்து கை முறுக்கிச் சொன்னாள் சசிகலா. அவள் உணர்ச்சிப் போராட்டங்களை உள் வாங்கினான் சஞ்சய்.
அப்படித்தான் இந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் சசிகலா. இங்கு அவளுக்கென்று எதுவுமில்லை வருகைப் பதிவேடு உட்பட. இப்போது ஒதுக்கப்பட்ட அறை வாயில் கூட சஞ்சய் பெயரைத்தான் தாங்கி நிற்கிறது.
சஞ்சய்யின் அப்பா பிசினஸ்மேன். அவருக்கு இரண்டு மனைவிகள். சஞ்சய் முதல் மனைவிக்குப் பிறந்த ஒரே மகன். சஞ்சய்க்கு ஒரு அண்ணன்-இரண்டாம் மனைவிக்கு முதலில் பிறந்தவன். இரு தங்கைகள். சஞ்சய்யின் அம்மா காசியில் சந்யாசினியாக வாழ்வதாகக் கேள்வி. அண்ணன் ஜாதி மாறி காதல் கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டான். சஞ்சய்யும் அப்படிப் போய் விடக் கூடாதென்று அவன் தொடர்புகளை வேவு பார்க்கிற பெற்றோர் அவனுக்கு.
சஞ்சய் மிகவும் கலகலப்பானவன். கெட்ட பழக்கம்? ஊஹூம். பெற்றோருக்கு அடங்கியவன். ஆண் பெண் கூட்டம் எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும். சொற்ப நண்பர்களே என்றாலும் ஆபத்துதவி.
அவன் சிறந்த நண்பர்களாக அவன் பெற்றோர்களால் நம்பி அடையாளம் காட்டப்பட்டவர்கள் சசிகலாவும், சந்திர மோகனும். சந்திர மோகனை விட்டு விடுவோம்.
சஞ்சய்யின் பிரியம் படு பிராக்டிகல். அவன் கடலை போட மாட்டான்; கனவு காண மாட்டான். குடும்பத்தினர் மேலும் நண்பர்களிடத்தும் வெளிப்படும் அவனின் அர்ப்பணிப்பு ஆச்சர்யமானது. ஒரு பொருளாதார நெருக்கடி வந்தால் அவனைப் போல தூக்கி நிறுத்த ஆள் கிடையாது.
ஒருமுறை அவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருந்தபோது காம்ப் முடித்து நல்ல பசியோடு ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போனார்கள். பெண்கள் தனிக் குழுவாகவும் ஆண்கள் தனியாகவும் அமர்ந்திருந்தனர். அந்த கூட்டத்தில் ஹேமா-ரமணன், பார்கவி-சந்தோஷ் போன்ற காதல் ஜோடிகளும் இருந்தனர். சஞ்சய் டேபிளுக்கு சர்வர் வந்து விட்டார். சஞ்சய் தனக்கு ஆர்டர் கொடுத்த போதே சசிகலாவுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணி விட்டான். பெண்கள் பகுதிக்கு சர்வர் வந்த நேரம் சசிகலா சூடான இட்லியையும் பொங்கல் வடையையும் வெட்டு வெட்டி முடிக்கிற நிலையில் இருந்தாள். பிற பெண்கள் பொறாமையில் தீய்ந்து போயினர். ‘காதல் பெண்கள்’ தங்கள் ஜோடிகளோடு ஹோட்டல் வாசலில் சண்டையே போட்டனர்!
மேற்படி சந்திப்பில் சஞ்சய்க்கு தெரிந்த, சசிகலா அறியாத ரகசியம் ஒன்றுண்டு. சஞ்சய்யின் பெற்றோர்கள் என்னதான் காதல் கல்யாணத்தை வெறுத்தாலும் சஞ்சய் சசிகலாவை காதலிக்கும் பட்சத்தில் அவளையே மணந்து கொண்டு அவளைத் தங்கள் வீட்டுக்குக் கூட்டி வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தாமாகவே வலிய வந்து அவனிடம் தெரிவித்து விட்டனர். (கூடவே இன்னொன்றும் சொன்னார்கள். அதை அப்புறம் சொல்கிறேன்.) இதைச் சொல்லத்தான் சஞ்சய் அங்கே வந்தான். அதற்குள் அவள் பேச, இவன் மௌனமானான்!
தொடரும்