தேடிச் செல்வோம்

சங்கு ஒன்றைக் காதில் வைக்க
இங்கிதமாய்க் கேட்கும் ஓசை
அன்னவம் தன்னில் ஒலிக்கும்
அரவமே என நாம் அறிவோம்.

இயம்பிடும் காற்றின் மொழியில்
நயம்பட சொல்லும் உண்மை
இரைச்சலே என்பது அறிந்தும்
இடக்கரடக்கலில் மாறும்

இடும்பையில் உடம்பில் தோன்றும்
உணங்கலும் உயங்கு நோயும்
கடுமையின் கொடுமை தாங்கும்
கதைத்தலே முணு முணுப்பாகும்

அதிகமாய் அதனை நாமும்
அதிர்வினை கண்டு கொளாமல்
அந்தகன் கையில் கோலாய்
அந்தவெளிப் பயணி ஆவோம்.

காலம் நிறைவேறும் காலைச்
சுகமான சுமைகள் இல்லாச்
சடலமாய் சவாரி செய்து
சடாதாரி சென்று சேர்வோம்

புகுந்திட்ட கூடு விட்டு
புகுமுக மாணவர் போலெ
புள்ளதன் உருவம் தாங்கிப் புதுப்
பள்ளியைத் தேடிச் செல்வோம்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (20-Jan-16, 4:26 pm)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : thedich selvom
பார்வை : 90

மேலே