கிறுக்கியவைகளில் சில துளிகள் -கயல்விழி

இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்

பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************

கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************

நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************

முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************

நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************

என்னை நீ திராட்சை என்றதன் அர்த்தம்
புரிகிறது
என் உதிரத்தை பருகிக்கொண்டிருக்கின்றாய்
பீராக.
**************************

அமிர்தம் என்றே அருந்தினேன் உன் காதலை
அளவிற்க்கு அதிகமானால் அமிர்தமும்
நஞ்சு என்பதை மறந்து
**************************

அலையாக நீயும்.
நுரையாக நானும்.
நீ அடித்துக்கொண்டே
இருக்கிறாய்
நான் சிதறிக்கொண்டே
இருக்கிறேன்
****************************

நீ எனக்கு ஒளி விளக்கு
நான் உனக்கு விட்டில் பூச்சி
**************************

முட்டைக்குள் கருவாய் உன்னை
வைத்தேன்
நீ உயிர்பெற்று
நடமாடினாய்
நான் உடைப்பட்டு
தெருவாகினேன் .
***************************

நீ கோயிலில் பூஜிக்கப்பட வேண்டியவள் தான்
கற்சிலை போல்
உன் இதயமும்.
****************************

தீ
பயிற்சி பெறட்டும்
உன் வார்த்தைகளிடம்
எப்படி சுடுவதென்று.
************"**********

நீயும் எனக்கு அன்னை
தான்
பைத்தியக்காரன், முட்டாளென
தினமொறு பெயர் சூட்டுகிறாய்
***************************

தூக்கு கயிறாய் நீ
இருப்பாய் என்றால்
கொடு
மரண தண்டனை
**************************

வரமாய் சபித்திடு
செருப்பாய் உன்னை காக்க
*******************"*******

நீ கொடுத்த கண்ணீருக்கு
தினமும்
வெட்டப்படும் வெங்காயமே சாபம் பெறுகிறது என் அன்னையிடம்.
***************************

அழைப்பிதழோடு வந்து
மரணிக்கச் சொல்கிறாய்
பூவும் பொட்டோடும் நீ
புதைக்குழிக்குள் நான்.
***************************

என் காதல் மாட்டிக்கொண்டது -உன்னிடம்
முள்ளில் விழுந்த சேலையாய்.
***************************

உன் சிரிப்"பூ"க்களை
சேமிக்கின்றேன்
என் கல்லறை தனிமைக்கு துணையாய்.
****************************
கனவில் என்னோடு
நேரில் அவனோடு
காட்சிப் பிழைகள்
எனக்கு மட்டும்

எழுதியவர் : கயல்விழி (20-Jan-16, 7:04 pm)
பார்வை : 506

மேலே