ஆப்பிள் நிறத்தழகி பகுதி 3

என் முகத்தில் தண்ணீரை யாரோ தெளித்து, உலுக்கி எழுப்பினார்கள்.
கண் விழித்து சுற்றி முற்றிலும் பார்த்தேன்.
எனக்கு ஒன்றும் நினைவில்லை; அழுகை வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு மூச்சு விட முடியவில்லை.

சஞ்ஜனா எப்படி சாக முடியும்? இப்படிக் கூட கொலை செய்யலாமா? உண்மையாகவே செத்துட்டாளா? நான் கனவு காணுகிறேனா? கையைப் பல முறை கிள்ளிப் பார்த்தேன். வலிக்கிறது.. அப்படியென்றால் என் கனவில் மண்ணைப் போட்டு மூடிவிட்டார்களா?

பிணம் வைக்கப்பட்ட திசையைப் பார்த்தேன்.
“ஆ...ஐயோ... சஞ்சனாஆஆஆ.. ..”
நான் கத்தும்போது என் நெஞ்சு வெடித்து, இரத்தம் கசியும் வலியை உணர்ந்தேன். ரிஷி என்னைச் சமாதானப் படுத்துகிறான்.

வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியவர்களைக் களை அறுப்பாயா இறைவா...!
என் வேதனைக்குரல் உனக்குக் கேட்கவில்லையா இறைவா!
எனக்கு வேறு ஏதாவது தண்டனை கொடுத்து இருக்கலாம். என் உயிர்வேரை இரத்தம் சொட்ட சொட்ட பிடுங்கி வீசி விட்டாயே இறைவா.. நான் செய்த பாவம் என்ன?

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்! இறைவா என் சஞ்சனா விஷயத்தில் அவளைக் கொன்ற தீயவர்களுக்கு உடனடி தீர்ப்பை நீ வழங்க மாட்டாயா?
என் மனம் அந்த பிரேத உடலைப் பார்த்து கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது..

சரிங்க எவ்வளோ நேரம் வெச்சு இருப்பீங்க! கூறு போட்ட ஒடம்பு என்று யாரோ கூட்டத்தில் சொல்ல, உடனடியாக அனைவரும் எழுகின்றனர். ஆளுக்கு ஒரு பக்கம் பெட்டியைத் தூக்குகிறார்கள்.
தயவுசெய்து யாரும் பெட்டியை எடுக்காதிங்க-னு தடுக்கிறேன்; சண்டை போடுகிறேன். என்னை வேறு பக்கம் தள்ளிவிட்டு பெட்டியை ஒரு சிறப்பு மூடுந்தில் வைக்கின்றனர்.

ஏதேதோ சாங்கியங்கள் மூடுந்தைச் சுற்றி செய்கின்றனர். என் மாமா கையில் தீச்சட்டியைத் தூக்கிச் செல்கிறார். என் வீட்டுப்பெண்கள் அனைவரும் ஒருசேர ஒப்பாரி வைக்கின்றனர். என் அத்தை மீண்டும் மீண்டும் மயங்கி விழுகிறார். அனைத்து பெண்களும் அவரைத் தூக்கிக்கொண்டு உள்ளே செல்கின்றனர். என்னை யாரோ பிடித்து இருக்கிறார்கள். நான் அழுவதா சஞ்சனா செல்வதைத் தடுப்பதா?
ஒன்றும் செய்வதறியாது அதிர்ச்சிக்கடலில் நான் மூழ்கியிருந்தேன்.. மூடுந்து மெதுவாக நகர்கிறது... “ஐயோ!” என என் உறவினர்கள் இறுதி ஓலமிடுகின்றனர். நான் பித்து பிடித்தாற்போல மூடுந்தைப் பார்த்தவண்ணம் இருக்கிறேன்.

போவது என் ஆப்பிள்தானா? அப்படியே உட்கார்ந்தவன் தான்.. வீட்டை நீர் ஊற்றி கழுவுகிறார்கள்..
நான் ஓரடிகூட அசையவில்லை; என் மனம் ஒன்றுமே யோசிக்கவில்லை; கண் இமைக்கவில்லை; வாய் எதுவும் பேசவில்லை; மூளை செயல்படவில்லை; வயிறு பசிக்கவில்லை; ஆனால் இதயம் மட்டும் அவளுக்காக துடிக்கிறது..

பேயறைந்தார்போல நாள்முழுவதும் வீட்டின் முன்புறம் அமர்ந்தே இருக்கிறேன்... என் வீட்டு ஆண்கள் அனைவரும் அனைத்தையும் முடித்து வீடு திரும்பியும் விட்டார்கள்.

என்னை யாரோ தூக்கிச் சென்று தலைக்குமேல் நீரைக்கொட்டுகிறார்கள்.

“ஐயா, மனசு விட்டு, வாய்விட்டு அழுவுயா!
இப்படி பித்து பிடித்தாற்போல் இருக்காதே! ” என்று என் அப்பாதான் என் கன்னத்தைத் தட்டி தட்டி சொல்கிறார்.

“என்னப்பா?
அழுகணுமா?
ஏன்?
எதுக்கு?” நான் தான் கேட்டேன்.

என் அப்பா நான் அப்படிக்கேட்டதும் என்னைக் கட்டிப்பிடித்துகொண்டு கதறியே விட்டார். அவரைப் பார்த்ததும் நான் வாய்விட்டு மனம் வலிக்க வலிக்க கத்தினேன்.. உருண்டேன், பிரண்டேன்.. ஓலமிட்டு அழுதேன்..
நெஞ்சைக் கீறியதைப் போன்று வலித்தது. ஒரு மணிநேரமாவது அழுது இருப்பேன்.

நள்ளிரவும் ஆகியிருந்தது. என் வீட்டில் ஆங்காங்கே அழுகுரல் கேட்டவண்ணம் இரவு கழிந்தது. என்னையும் அறியாமல் நான் அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை அனைவரும் எழுந்து சோகத்துடன் அனைத்து வேலைகளையும் வழக்கம்போல செய்கிறார்கள்.

நான் என்ன செய்வேன்? ரிஷி என்னைப் பார்க்கிறான். நான் அவனைப் பார்க்கிறேன்.
அவன் கண்களில் நீர்.

“ஏன் டா அழற? அவள் போய் சேர்ந்துட்டாள் னா?
அவள் நம்மல விட்டு போகமாட்டாள்!
இப்ப கூட நம்ம பக்கத்துல நின்றுக்கொண்டு இருப்பாடா.. ரிஷியிடம் நான் தான் கூறினேன்.
ரிஷி அதிர்ச்சியில் பார்க்கிறான்.

நேற்றே நல்ல அழுது தீர்த்துட்டேன் டா! இரவு முழுக்க நல்லா யோசிச்சேன் அவளைக் கொன்னவங்கள தேடி நானே போட்டு தள்ளுவேன் டா!
அதான் என் வாழ்க்கை இலட்சியம்!
நான் போலீஸ் ஆனாலும் சரி, தீவிரவாதி ஆனாலும் சரி, அவனுங்கள கண்டுபிடிச்சு சுட்டுத் தள்ளுவேன்டா!

“டேய் அண்ணா, கண்டிப்பாடா! நான் உன்கூடவே இருப்பேன்! சஞ்ஜனாவுக்காக நம்ம அவனுங்க வேர் அறுப்போம்! என்னையும் சேர்த்துக்கோ!
இருவரும் கைக்கோர்த்து சபதம் இட்டோம்.
கட்டிப்பிடித்துக் கொண்டு இறுதியாக கண்ணீர் விட்டோம்...

இதோ எங்களது வெறி தொடங்கிவிட்டது....

(தொடரும்)

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (22-Jan-16, 4:44 pm)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 114

மேலே