அறை எண் பதினாறு - பாகம் 5

..........................................................................................................................................................................................

முன்கதைச் சுருக்கம்

சசிகலா, தங்கமணி மருத்துவமனையின் டூட்டி டாக்டர். சஞ்சய் அவள் கல்லூரித் தோழன்; இவர்களோடு அறை எண் பதினாறு ... நடுநிசி தாண்டிய இரவு...!

.......................................................................................................................................................................................

சசிகலா டேபிள் தடுக்கி அவன் மேல் பூக்கூடையாய்க் கவிழ்ந்தாள்! சஞ்சய் அவளைத் தீண்டவில்லை. அவளே சுதாரித்து எழுந்தாள். சஞ்சய்யின் கைகள் சேரின் கைப்பிடியை இறுகப் பற்றியிருந்தன. பார்வை திரும்பி தரையைப் பார்த்திருந்தது. மூச்சு சூடாக வேக வேகமாக வெளிப்பட்டது. அவள் பெண்மைக்கு ஏதோ புரிய....

வெளியே ஓடி விட்டாள்!

கதவு தாளிடப்பட்ட ஓசை கேட்டது.

படியேறி வந்த நர்ஸ் கீதாம்பரி காதில் அந்த ஓசை விழுந்தது.

பரபரப்பாக அவள் வந்தபோது முதல் தளத்தில் ஆடை குலையாமல் சிலை போல் அமர்ந்திருந்தாள் சசிகலா. இரண்டாம் தளத்தில் பதினாறாம் எண் அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. சஞ்சய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலும் என்று எண்ணியவள் தன் நினைவுக்குத் தானே வெட்கி வந்த சுவடு தெரியாமல் கீழே திரும்பினாள். அறையிலிருந்து வந்த ஆண் பிள்ளையின் சன்னமான விம்மல் சத்தம் கீதாம்பரிக்குக் கேட்க வாய்ப்பில்லை.

சத்தம் நெடுநேரம் நீடித்தது!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தேதி: 20.8.2014

நகரத்தின் பிரதான சாலையில் அமைந்த அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்கு புதிய இயக்குனராக அப்போதுதான் பொறுப்பேற்று இருந்தார் டாக்டர் மிஸஸ் சசிகலா பூவரசன்.

இந்த அறை அவருக்கு ஏனோ பரிச்சயமானது மாதிரி தெரிகிறதே? எழுந்து சென்று பார்த்தார். அறையின் அமைப்பு, சுவற்றிலிருந்து எதையோ பெயர்த்த வடு... அறையின் வலது மூலையில் தனித்திருக்கும் பெண்ணின் ஓவியம்...

சசிகலாவின் மெய் சிலிர்த்தது! கண் தளும்பியது!

‘‘இது ஒரு காலத்துல பிரைவேட் ஹாஸ்பிடல்மா. அப்புறமா கவர்ன்மெண்ட் கைக்கு வந்துடுச்சி.’’ என்றார் அறைப் பணியாள்.

சஞ்சய்யை கடைசியாக, அவன் கல்யாணத்தில் பார்த்தது. அவன் கைகளுக்குள் அவள் கையை வைத்து வலிக்க வலிக்க அழுத்தியது நேற்று மாதிரி இருக்கிறது. அதற்குள் இருபது வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது!

மரணமென்று ஒன்று வரும். சாவு வருவதற்கு முன்னே அதற்கான அறிகுறிகள் தெரியுமாம். சாவதற்கு ஒரு வாரமோ, ஒரு மாதமோ இருக்கிற போது சஞ்சய்யை பார்த்து பேசி விட்டால் போதாது? ஓவியத்தை வருடினார் சசிகலா.

லண்டனில் நோயாளியை பரிசோதித்து விட்டு வீட்டில் மனைவியிடம் இரவு உணவு பற்றி ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்த புகழ் பெற்ற டாக்டர் சஞ்சய் தம் முகம் வருடப்பட்டது போல் உணர்ந்தார்...

‘‘சசிகலா.. ’’ என்று முணுமுணுத்தார்!


முற்றும்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (22-Jan-16, 12:16 pm)
பார்வை : 130

மேலே