ஆப்பிள் நிறத்தழகி பகுதி 4

மரணம் என்பது நிச்சயம் தான்..
ஆனால் இளமையில் வரும் மரணம் கொடுமையானது.. அதுவும் நாம் நேசிக்கும் ஓருயிர் மரணித்தால் நம் வாழ்க்கைத்தடமே மாறிவிடும்.

சபதம் இட்ட நாள்முதல், கோபத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் மனதில் விதையாக விதைத்தேன். அது விருட்சமாக வளர ஆரம்பித்தது.
முயற்சி என் உற்ற தோழன் ஆனது.
வெறித்தனமாக கல்விக்கற்க ஆரம்பித்தேன்.
ஆரம்பப் பள்ளியில் தேசிய அளவில் நான் முதல் நிலை மாணவனாக தேறினேன். ரிஷி தேசிய அளவில் மூன்றாவது நிலை அடைந்தான்.

இருவரும் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றோம். பலி வாங்கும் வெறி இன்னும் வேர்விட்டு வளர்ந்தது கொண்டேதான் இருந்தது.

இப்பள்ளியில் யார் என்னுடனோ, ரிஷியுடனோ பகை கொண்டாலும் திட்டம் தீட்டி, அவர்களைத் தனிமையில் கொண்டு சென்று வெளுத்து எடுப்போம். நாங்கள்தான் செய்தோம் என்று யாருக்கும் தெரியா வண்ணம் செய்யக்கற்று கொண்டோம்.

இறைவா, என் காதல் என்னை இப்படி மாற்றிவிட்டது. இனி, எந்தப் பெண்ணை எவன் என்ன செய்தாலும் நான் அவர்களைக் கொன்றே தீருவேன். மிருகம் கூட இப்படி செய்யாது ; தன் இனத்தை உறுப்புக்காக கொல்லாது.

மனிதனைக் கொல்லும் அந்த கொடூர இனத்துக்கு என் அகராதியில் என்றும் மன்னிப்பே கிடையாது; கருணையும் கிடையாது..

இப்பள்ளியில், பெண் விஷயத்தில் கூட நான் வில்லன் தான்!!
இப்பள்ளியில் நிறைய பெண்களுக்கு நான் கனவுக் கண்ணனாக திகழ்ந்தேன். ஆனால், என் விழிகள் ஒரு பெண்ணைக் கூட ஏறெடுத்துப் பார்க்காது.. யாரைப் பார்த்தாலும் சஞ்ஜனாதான் வந்து நிற்பாள்.. அவளுக்கு நடந்த கொடூரம் கண்ணில் வந்துபோகும்.

பெரிய அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது என எதிர்காலத்துக்குத் தேவை என்று எண்ணி பல தற்காப்புக்கலையில் கறுப்பு நிற இடைவார் அளவுக்கு எங்கள் தகுதியை வளர்த்தோம்.

எனக்கு இப்பொழுது 16 வயது. நான்கு வருடங்கள் சஞ்ஜனா இல்லாமல் எப்படியோ கழித்துவிட்டேன்.
வாழ்க்கை சீராக இயல்பாக இருந்தது...

நாம் ஒன்று நினைத்தால், இறைவன் வேறு ஒன்று நினைப்பான்..

எல்லோருக்கும் நல்ல காலம் அப்படியே இருப்பது இல்லை, அவ்வப்போது புயல் அடித்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும்.

என் வாழ்வில் இனி இரண்டாவது புயல் ஆரம்பம். போன ஜென்மத்து பாவமோ என்னவோ, என் குடும்பம் மீண்டும் படாத பாடு பட்டது.

என் மாமாவும் என் தந்தையும் சேர்ந்து செய்த வியாபாரத்தில் பேர் நஷ்டம். எங்களின் பெரிய சரக்குக்கப்பல் கடலில் மூழ்கிவிட்டதால், முதலீட்டாளர்களின் கடனை ஈடு கட்ட அவர்கள் இருவரும் மிகுந்த சிரமப்பட்டனர். இருவரை நம்பிதான் குடும்ப சக்கரமே ஓடிக்கொண்டிருக்கும்போது அச்சாணிகள் அனைத்தும் கழன்று அனைத்து சக்கரங்களும் ஓடியதுபோல அல்லல் பட்டது.

அதன் விளைவு, எங்கள் வீடு முதற்கொண்டு ஏலத்திற்கு வந்தது.
உடுத்த உடையில்லை, உண்ண உணவு இல்லை; இருக்க இடமில்லை.

நன்றாய் சீரும் சிறப்பாக வாழ்ந்த ஒரு கூட்டுக்குடும்பமே வீதியில் நிற்கதியாய் நின்றோம். ஒரு வழியும் தெரியவில்லை. கொடுத்து பழகிய எங்கள் குடும்பம் கையேந்துவதைவிட இறப்பது மேல் என முடுவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

ஊரே எங்கள் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தது.

யார் மூலமாகவோ என் பள்ளி தலைமையாசிரியர் என் வீட்டுச்செய்தியை அறிந்ததும் என் வகுப்பு ஆசிரியருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். வந்தவர் என் தந்தை கையைப் பிடித்து ஐந்தாயிரம் ரிங்கிட் பண காசோலையைத் திணித்தார்.

என் குடும்பத்திற்கு உதவ வந்திருக்கும் தலைமையாசிரியரின் காலில் விழுந்து நன்றிக்கூற வேண்டுமென என் மனம் எத்தனிக்கும் போது, அக்காசோலையை என் தந்தை வாங்க மறுத்தார்.

அதற்கு என் தலைமையாசிரியர், “ஐயா, இது உங்கள் மகனின் உழைப்பில் கிடைத்த வெற்றிப்பணம்.. நம்ம வினய் பள்ளியைப் பிரதிநிதித்து அறிவியல் ஆராய்ச்சிக்காக செய்த Noiseless Blender அதாவது “இரைச்சலில்லா கலப்பான்”-னை மாநில ரீதியான அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டிக்கு அனுப்பியிருந்தோம். மாநில அளவில் அவனுக்கே முதல் பரிசு இன்றுதான் ஐயா கிடைத்தது. அதை நாளை பள்ளிப் பேரணியில் வைத்து தர எண்ணி நான் வைத்து இருந்தேன். உங்கள் நிலையறிந்து இன்று இது உங்கள் குடும்பத்துக்குத் தேவையென எடுத்துக்கொண்டு விரைந்து வந்தேன்”, என்று கூறி நிறுத்தினார்.

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்று நான் படித்த பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. இறைவனே நேரில் வந்ததுபோல உணர்ந்தேன். சற்றும் தாமதிக்காமல் ஓடிச்சென்று என் தலைமையாசிரியர் காலில் தொப்பென விழுந்து கட்டிபிடித்து கொண்டு அழுதேன். என் தலைமையாசிரியர் ஐயா என்னை மேலே தூக்கி என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

“வினய் வருந்தாதே! நீ கற்ற கல்வி இருக்கும்வரை நீ என்றுமே ஏழையில்லை. உனக்கு அறிவியலில் மேலும் ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே ஊக்கத்தொகையும் கொடுக்கத் தயாராக உள்ளது. கஷ்டங்கள் வருவது நம் தன்னம்பிக்கையைச் சோதிக்க மட்டுமே! என்றும் உன் நம்பிக்கையைக் கைவிடாதே! உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நம் பள்ளி நிர்வாகம் செய்ய தயாராக உள்ளோம்", எனக் கூறி என்னைத் தேற்றினார்.

என் குடும்ப துயரங்கள் சூரியனைக் கண்ட பனி போல எங்களைவிட்டு விலகுவதைப் போன்று நான் உணர்ந்தேன்.

என் வகுப்பு ஆசிரியர் அன்றிரவு அவர் வீட்டில் தங்கிக்கொள்ள எங்களுக்காக பேருந்து ஒன்றையும் கொண்டு வந்து இருந்தார். என் தந்தை அவர் வீட்டுக்குச் செல்ல எவ்வளவோ மறுத்தும் பிள்ளைகள் எங்களுக்காக வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார். அனைவரும் கதறிக்கொண்டே பேருந்தில் ஏறினர்.

எங்கள் வீட்டை விட்டு பேருந்து நகர்கிறது. எங்கள் நனைந்த விழிகள் எங்கள் வீட்டின் மீது மட்டுமே இருந்தது.
விதி என்று நான் அழ விரும்பவில்லை. தன்னம்பிக்கை கொண்டு விதியோடு முட்டி மோத தயாராக ஆனது என் மனம்.

இருந்தாலும் இது என் வீடு; என் சந்ததி வாழ்ந்த வீடு; என் சஞ்ஜனா வாழ்ந்த வீடு..
ஒரே இரவில் இப்பொழுது எங்களுக்குச் சொந்தமில்லை. கசக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது!

என்னதான் தன்னம்பிக்கை மனம் முழுக்க நிரம்பி வழிந்தாலும் கனத்த மனதோடுதான் என் பயணம் அந்தப் பேருந்தில் தொடர்ந்தது.

(தொடரும்)

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (22-Jan-16, 6:31 pm)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே