காட்சிப் பிழைகள் - 43

குழந்தையின் தவிப்போடு என் காதல் சொன்னேன்
தாயின் பேரன்போடு ஏற்றுக்கொண்டாய்

===========================

என்னுடைய பிறந்தநாள் கேக்கில்
நீ ஏற்றிவைத்த அந்த ஒற்றை மெழுகுவர்த்தி
இன்னும் அணையவேயில்லை தெரியுமா

===========================

உன்னுடன் இருக்கும்போது மட்டும்
வந்து கையேந்துவான் ஒரு பிச்சைக்காரன்
தொழில் நுணுக்கம் தெரிந்தவன் அவன்

===========================

எத்தனை கிளிஷேக்கள் இருந்தாலும்
போரடித்ததேயில்லை நமது காதல்

===========================

கஸல் இலக்கணம் உனக்குத் தெரியுமா என்றாய்
காதல் இலக்கணம் மட்டுமே எனக்குத் தெரியும் என்றேன்

===========================

ஜல் ஜல் என்று பாதக் கொலுசொலிக்க நடப்பதால்
நீயுமொரு கஜல் கவிதையே

===========================

பறவைகள் பயந்துவிடும் என்று நீ சொன்னபிறகு
நான் தீபாவளிகளில் பட்டாசு வெடிப்பதில்லை

===========================

உனது தந்தையிடம் நமது காதலைச் சொன்னபோது
சப்பென்று அறைந்தார் எனது கன்னத்தில்
குபுக் கென்று கண்ணீர் துளிர்த்துவிட்டது உனக்கு

===========================

நாம் கடைசியாய்ச் சேர்ந்தருந்திய அந்தக் காபி
முதன் முறையாய் உப்புக்கரித்தது

===========================

உனது திருமணப் பத்திரிக்கையை
எரித்து விடலாமா என்று நினைத்தேன்
உன்னுடைய பெயரிருந்ததால் தப்பித்தது

===========================

என்னுடைய கண்ணீர்த் துளிகளே
உனக்கான அட்சதை

===========================

மது அருந்தினால் மறந்து போகலாம் என்றான் நண்பன்
ஒரு புட்டித்திரவம் என்ன செய்துவிடமுடியும்
ஒரு பேரலையை

===========================

நான் தனிமையின் மடியில்
அமர்ந்து பிடிக்கும் சிகரெட்டிலெல்லாம்
வளையம் வளையமாக உனது நினைவுகள்

===========================

ஒரு பின்மதியத் தனிமையில்
எங்கோ இருக்கும் நீயும்
எங்கோ இருக்கும் நானும்
நம்மை நினைத்துக்கொள்ளக்கூடும்

===========================

நாம் பிரிந்த அந்தநாள் எனக்கு ஞாபகமிருக்கிறது
என்னுடைய இறந்தநாள் என்று குறித்து வைத்திருக்கிறேன்
அந்தத் தேதியை

===========================

நாம் காதல் வளர்த்த அந்தப் பூங்காதான்
மனசு சரியில்லாத போது நான் போகும் கோயில்

===========================

இப்போதும் எனது பர்ஸில் இருக்கும்
உனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை
நான் பார்ப்பதேயில்லை
அதன் கண்களைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை

===========================

ஜவுளிக்கடையில் உன்னுடைய சாயலில்
யாரோ தெரிந்தார்கள்
கூப்பிடவில்லை
காரணம் அது நீயாகவும் இருந்துவிடலாம்

===========================

நீண்டநாள் கழித்து உன்னைக் கண்டுபிடித்தேன் முகப்புத்தகத்தில்
அங்கே உன் மூன்று வயது மகன் சிரித்துக் கொண்டிருந்தான்
என்னுடைய பெயரில்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (23-Jan-16, 3:37 am)
பார்வை : 745

மேலே