உதவி
பேருந்தை விட்டு இறங்கினார் சங்கரன். ஆறுமுகம் தனது ஸ்கூட்டியோடு தயாராக இருந்தான். “போலாமா சார்?” என்றான். சங்கரன் பின்னால் ஏறி உட்கார வண்டியைக் கிளப்பினான் ஆறுமுகம். அலுவலகத்தின் கடை நிலை ஊழியன்.
சங்கரனைக் காலையில் அலுவலகம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மாலையில் அலுவலகம் முடிந்து பஸ் ஸ்டாப் வரை கொண்டுவந்து விடுவதும் அவன்தான்.அலுவலகத்துக்கும் பேருந்து நிறுத்தத்துக்கும் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலிருக்கும்.பஸ் வசதியோ ஆட்டோ போக்குவரத்தோ கிடையாது கடந்த ஆறு மாதங்களாகத்தான் இவ்வாறு கொண்டுவந்து விடுகிறான்.யதேச்சையாய் ஒரு நாள் ஆரம்பித்த பழக்கம் அன்றிலிருந்து தொடர்ந்தது.சங்கரனுக்கும் வசதியாயிருந்தது.
சங்கரனுக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. இரட்டை நாடியான தேகம்.சிறிது தூரம் நடந்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும்.போதாததற்கு இரத்த அழுத்தம் வேறு இருந்தது. காலையில் சுள்ளென்று அடிக்கும் ஏறு வெயிலில் பஸ் ஸ்டாப்பிலிருந்து அலுவலகம் வரை நடந்து வருவது என்பது முடியாத காரியம். இள நிலை உதவியாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று அலுவலகக் கண்காணிப்பாளராக உயர்ந்திருப்பவர் சங்கரன்.வீட்டை மட்டும் அருகில் வைக்க முடியவில்லை.தினமும் போகவர ஐம்பது கிலோமீட்டர் பயணிக்கிறார்.
அலுவலகம் வந்துவிட கீழே இறங்கினார் சங்கரன்.”ரொம்ப நன்றிப்பா”,என்றார்.”நன்றியெல்லாம் எதுக்கு சார். நான் வர்ற வழி.அப்படியே உங்களை ஏத்திட்டு வர்றேன். அவ்வளவுதானே சார்”,என்றான் ஆறுமுகம்.
ஒரு நாள் அப்படி வரும்போது ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.”எதுக்கு சார் இது?அப்ப இந்த பணத்துக்காகத்தான் உங்களைக் கூட்டிட்டு வர்றேனா சார்?”,என்றான் கோபமாய். அன்றிலிருந்து பணம் கொடுக்கும் முயற்சியைக் கைவிட்டார் சங்கரன்.
நாட்கள் உருண்டோடின.அன்று மிகவும் வாட்டத்துடன் காணப்பட்டான் ஆறுமுகம்.என்னவென்று விசாரித்தார் சங்கரன்.
“அப்பாவுக்கு உடம்பு சரியில்ல சார். நுரையீரல்ல பிரச்சனை.ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.ஒரு லட்சத்துக்கு மேல செலவாகும்னு சொல்லிட்டாங்க.அதான் என்ன பண்றதுன்னு புரியல”,தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னான் ஆறுமுகம்.
“கவலைப்படாதப்பா.எல்லாம் சரியாயிடும். பணத்துக்குண்டான எற்பாட்டை நான் பண்றேன்.உன்னால முடியும்போது திருப்பிகொடு.”என்ற சங்கரன் தனது இத்தனை வருட சேமிப்பிலிருந்து ஒரு லட்ச ரூபாயை எடுப்பதென முடிவு செய்துகொண்டார் சங்கரன். இப்படியாவது உதவமுடிந்ததே என்ற ஆறுதல் அவர் முகத்தில் தெரிந்தது.