பிறகெதில் தாழ்ந்தோம்

மேடுகளில் மேல்சாதியாம்
பள்ளங்களில் கீழ்சாதியாம்
ஏனெனில்
முற்றத்தில் வரும் மழைநீர் கூட
தீட்டுப்படாமல் இருப்பதற்காம்...

எங்கள் வறுமையை விட
அதிகமாக தான்
உங்களுக்கு உழைத்தோம்...

உங்கள் மறைவிட மயிர் சிரைத்தோம்...
உங்கள் தீட்டு துணி துவைத்தோம்...
உங்கள் காடு களணியில் பொன் விளைத்தோம்...
உங்கள் கால்களில் மண்டியிட்டு கிடந்தோம்...
சுடுகாட்டில் குடியிருந்தோம்...

நீங்கள் எங்கள் குடிசைகளை எரித்தீர்...
கோவிலில் நுழைந்த சிறுவனை
வன்கொடுமை செய்தீர்...
திண்ணியத்தில் மலம் அள்ளி
வாயில் திணித்தீர்...
வெண்மனியில் உயிரோடு
எங்களை எரித்தீர்...
உங்கள் கோபங்களில்
எங்கள் இனப்பெயர் சொல்லி திட்டினீர்...
எங்கள் பெண்களை
எப்போதும் இழிவாகவே பேசினீர்...
எங்கள் நிறத்தை பழித்தீர்...
எங்களை இழிபிறப்பு என்றீர்...

உங்களின் பிறப்புறுப்பு போலதான்
எங்களுக்கும் உள்ளது...
பிறகெதில் தாழ்ந்தோம்...

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
தினமொரு பாவச் செயல்...
தினமொரு பெருங்குற்றம்...
தினமொரு மனிதநேயமற்ற செயல்...
சாதிப் பெயர் சொல்லி
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது...

இவையெல்லாம் தெரியாத
உங்களுக்கு எப்படி தெரியும்...
சாதிய அடிப்படையில்
வழங்கும் இட ஒதுக்கீட்டை பற்றி...

இன்னும் எத்தனை
ரோஹித் வெமுலாவை பலிகொடுக்குமோ...
இந்த சனநாயக இந்தியா...

எழுதியவர் : கோபி சேகுவேரா (23-Jan-16, 6:32 pm)
பார்வை : 74

மேலே