ஸ்டிக்கர் பொட்டு

...........................................................................................................................................................................................

திருமதியோ செல்வியோ போடாமல்
பெயர் மட்டுமே உள்ள பெயர்ப் பலகை
உலக அதிசயமல்ல...
இப்படி உறுத்த....!

ஸ்டிக்கர் பொட்டு, ஸ்பாஞ்ச் பூ,
பிளாஸ்டிக் வளையல்..
எங்கேயப்பா மங்கலமும் அமங்கலமும் ?
நல்ல வேளை...
வெள்ளைப் புடவை போலல்ல, வெள்ளைச் சுரிதார்..!

எதிரே வந்தால் அபசகுனமென்று
எதை வைத்து முடிவெடுப்பாய்?
எனைப் பார்த்து அபசகுனமென்று நீ போனால்
உனைப் பார்த்து அபசகுனமென்று நான் போகலாமே?
ஒற்றைப் பிராமணணும், ஒன்றுமில்லாத நெற்றியும், கையும்
விரித்து விட்ட கூந்தல் பெண்ணும்
அபசகுனமென்றால்
நாகரீக மாந்தர் முக்கால்வாசிப் பேர் அபசகுனங்களே..!

சுப நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் போவாயோ?
போ...
விடுமுறை வாங்க என்னிடம் நிற்க வேண்டும்..!

இங்கிதமில்லாதவள் என்கிறாயா?
உயிரற்ற சிக்னல் விழுந்தால்
அதற்கு மதிப்புக் கொடுத்து
ஓட்டத் தெரிந்த நீ...
ரத்தமும் சதையுமான
உயிருள்ள சகமனுஷியை
உதாசீனப் படுத்துவது இங்கிதமோ?

உற்றுப் பார் ஆறறிவுப் பிராணியே..
ஐந்தறிவும் ஓரறிவும் கூட
இப்படிச் செய்வதில்லை...

முதல் ஆளாக நன்கொடை கொடுத்தால்
“ சற்றுப் பொறுங்கள்...
அந்த அம்மாவிடம் வாங்கி விட்டு இரண்டாவதாக உங்களிடம்....” என்கிறாயோ?
நீட்டிய கை பணத்தோடு சுருங்குகையில்
உன் நெஞ்சம் பதைப்பதைப் போல்தான்
என் நெஞ்சம் பதைத்தது சற்று முன்..!

அழுது புலம்புவேன் என்று பார்த்தாயா?
மூலையில் முடங்குவேன் என்று நினைத்தாயா?
கண்ட கண்ட கசடுகளின் வீச்சுக்கு
கந்தல் கதையாவேன் என்று சப்புக் கொட்டுகிறாயா?

பிய்த்து விடுவேன் பிய்த்து..! !
இறந்தது அவர்தான்....
நானல்ல...!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Jan-16, 6:53 pm)
பார்வை : 209

மேலே