கல்லூரிக்கு வந்த வானவில்
அன்பே!
உன்னைப் பார்த்த பிறகுதான்
தெரிந்துகொண்டேன்—
வானவில்லும்
கல்லூரிக்கு
வருமென்று!
உன் தரிசனம்
நன்றாகக் கிடைக்குமிடத்தில்
அமரவேண்டும் என்றுதான்
நான்
தாமதமாய் வருவதையே
தவிர்த்துவிட்டேன்!
பாட இடைவேளையில்
நான் பருகுவது
தேநீர் அல்ல—
உன் பார்வை!
இவர்கள்
ஞாயிற்றுக்கிழமை கூட
வகுப்புகள் வைக்கட்டும்
நீயும்
வருவதாக இருந்தால்!
உன்னால்
என் வருகைச் சதவீதம்
நூற்றிப்பத்து ஆகிவிடுமோ என்று
எல்லோரும்
அஞ்சுகிறார்கள்!
இப்போதெல்லாம் நான்
இல்லாத சந்தேகத்தையே
உன்னிடம் கேட்கிறேன்.
நீ
சொல்லித்தரும்போது
பொறியியல் கூட
கவிதையாகிவிடுகிறது!
தேர்வுக்குமுன்
நீ
தெய்வங்களின் பெயரை
உச்சரிக்கிறாய்!
நான்
உன்பெயரை உச்சரிக்கிறேன்
ஏனெனில்
என் காதல் தெய்வம் நீ!
-----மதிபாலன்-----