கவிஞனாய் மாறிட வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிஞனாய் மாறிட வேண்டும்
மார்கழி பனித்துளி நீரென
மாறியே புல்லிடை இருத்தல் வேண்டும் – அந்த
பனித்துளி நீரினை பகலவன்
பருகும் நிலையினைப் பெறுதல் வேண்டும்!
ஊரது கோடியில்
ஊருணியாய் வளைந்தே பாயவேண்டும் – அந்த
ஊருணி நீரினில் ஓடிவிளையாடி
ஊற்றினைச் சுவைத்திடும் சிறுவனாய் மாற வேண்டும்!
மாலைக் கதிரவன் மேற்கே
மறையும் பொழுதினில் செவ்வண்ணமாய் ஆக வேண்டும்- அந்த
செம்மையில் மூழ்கிடும் சிகரங்களில்
சீர்மிகு சோலைகளாய் மாற வேண்டும்!
சோலைகளின் சலசலப்பில்
சுகமான தென்றலது சிலிர்ப்பென மாற வேண்டும் – அந்த
சிலிர்ப்பினில் இளைப்பாறி இமைமூடி
சிருங்கார கனவுகள் காண வேண்டும் !
காதலது போதையிலே
கண்மூடிக் கிடக்கையில் காலங்கள் மாற வேண்டும்-அந்த
காலசுழற்சியில் காவியம் படைத்திடும்
கவிஞனாய் மாறிட வேண்டும்.!
நன்றி- பிஞ்சுவிரலின்
பிகாசோ ஓவியம் ---- கே. அசோகன்.
-