தமிழோடு உறவாடு

தமிழென்னும் தென்றல்
தவழ்கின்ற போது
பூவாக நான்மாற வேண்டும் -அங்கு
கமழ்கின்ற வாசம்
கரைகின்ற போது
கவிதைக்குள் சொர்க்கங்கள் தோன்றும் !

தமிழென்னும் வாளை
நான் வீசும் வேளை
மின்னல்கள் கண்கூசி மாயும் -இன்பத்
தமிழ்கொண்டு சென்று
வானோர்க்குத் தந்தால்
அமிழ்தங்கள் வீணாகிப் போகும் !

தமிழ்பாடும் வாயில்
மிளகாயும் கூட
தேனாக மாற்றங்கள் காணும் -நாம்
தமிழ்பேசிக் கொண்டு
நடக்கின்ற போது
வெயில்கூட மழைவேடம் பூணும் !

தமிழென்னும் கங்கை
பாய்கின்ற போது
இதயங்கள் வளமாக மாறும் - தாய்
தமிழுக்கு சேயாய்
பிறக்கின்ற யார்க்கும்
இன்பங்கள் பரிசாகச் சேரும் !

எழுதியவர் : மதிபாலன் (24-Jan-16, 7:34 pm)
Tanglish : thamilodu uravaadu
பார்வை : 596

மேலே