வழிகாட்டும் மன்றம்
அறியாமை இருள்நீக்கும் திங்கள் ! போற்றும்
அறிவென்னும் கரைசேர்க்கும் படகு ! நல்ல
நெறிபாடும் நீலவானம் பாடி ! மூட
நெஞ்சத்தில் ஒளியேற்றும் பரிதி ! ஞானச்
செரிவூறும் வற்றாத வூற்றே ! மென்மைச்
சேர்த்திடவே தழுவுகின்ற காற்றே ! நெஞ்சில்
உறவோடு கைகாட்டி அறிவு மன்றல்
உவப்போடு தருகின்ற மல்லிகைப்பூ !
ஆசிரியர் இனம்தழைத்து செழித்தே ஓங்க
அல்லலெனும் புல்கலைய பாரின் மீது
தேசுடைய புகழ்வாழ்வு மலர , நெஞ்சால்
தேம்புகின்ற நிலைமாய்ந்தே ஒளிர , ஏற்றிப்
பேசுகின்ற பேறுதனை அடைய , நிற்கும்
பேதையர்கள் தடையெல்லாம் உடைய , கொண்ட
தூசுகளை துடைத்திடவே கண்ட மன்றம்
தூய்மனத்தார் என்னாளும் போற்றுகின்ற
அன்னைமொழி வளமையுற மதுரை மன்றம் !
ஆடுகின்ற நீதிவாழ நீதி மன்றம் !
இன்னலெலாம் நீக்குகின்ற இனிய மன்றம் !
ஈகையிலே களிக்கின்ற வள்ளல் மன்றம் !
உன்னுகின்ற உயர் கருத்தும் ஊறும் மன்றம்
ஊருக்கே உழைக்கின்ற தொண்டன் மன்றம் !
என்னருமை ஆசிரியர் கண்ட மன்றம்
ஏற்றமுடை வழிகாட்டும் கொள்கை மன்றம் !