இந்த நாள் கடவுள் தந்த நாள்

என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய விசயம் இது. இதுவரை எந்த ஒரு பெரிய மனிதர்களையும் சந்தித்தது கிடையாது. வெளியே எங்கேயும் அவ்வளவாக சென்றதும் கிடையாது என்பதால் தளத் தோழர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் இவரைச் சந்திக்க வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நாள் என் வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வு நடந்த நாள். அதுதான் அய்யா திரு.கன்னியப்பன் அவர்களை சந்தித்த நாள். ”நான் கோவை வந்துள்ளேன்” எனத் தெரிவித்து இரவு நேரத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தன் செல்பேசி எண்ணையும் தந்திருந்தார். என் செல்பேசியிலுள்ள ஒலிவாங்கி கொஞ்சம் பழுதாகி இருந்ததாலும், இரவு 11 மணி என்பதாலும் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. காலையில் என் நண்பர் ஒருவரிடம் செல்பேசி வாங்கி அவரைத் தொடர்பு கொண்டேன். ”அய்யா வணக்கம்” என்று பாதி முடிக்குமுன்பே கண்டுபிடித்து விட்டார். இது எப்படி ? என்று இப்போது வரை தெரியவில்லை.

மருத்துவமனையில் இருக்கும் தன் பேரனைப் பார்க்க கோவை வந்திருப்பதாகவும் மதியம் 12 மணி வரைதான் வீட்டில் இருப்பேன் பிறகு மருத்துவமனைக்கு சென்றுவிடுவேன் என்றும் கூறினார்

அவரை எப்படியாவது சந்தித்தாக வேண்டும் என்று விரைவாக பேருந்தைப் பிடித்து ஏறினாலும், இரண்டு பேருந்து மாறி ஏற, மேம்பால வேலை காரணமாக ஏற்பட்ட வாகன நெருக்கடியில் பேருந்து மெதுவாகச் சென்று மதியம் 12 மணிக்கு மேல்தான் அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டது. இறங்கியதும் தொடர்பு கொண்டேன். செல்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் இருப்பாரோ அல்லது அவர் சொன்னபடி தன் பேரனை பார்க்க சென்றிருப்பாரோ என்ற படபடப்பு இருந்தாலும் “ஒரு வேளை எங்காவது அருகில் நின்றிருப்பாரோ” என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு சில நிமிடங்களில் அவரே தொடர்பு கொண்டார். அவர் சொன்ன இடத்தை சுற்றிலும் மாட மாளிகைகள் போல கட்டடங்கள். தீப்பெட்டி அடுக்கியிருப்பது போல் உயரமாக இருந்த கட்டடங்களைப் பார்ப்பது எனக்கு புது அனுபவமாக இருந்தது. வேடிக்கை பார்த்தபடி நடந்ததில் சற்று குழம்பிப் போனேன். அவர் செல்பேசியில் மறுமுறை தொடர்பு கொள்ளுமுன்பே அவர் சொன்ன இடத்தை தாண்டி 100 மீட்டர் முன்னே சென்று விட்டேன். எங்கள் கிராமத்து கால்களின் வேகம் அப்படி..!

நான் மீண்டும் திரும்பி நடந்து வர ஆரம்பித்தேன். என்னோடு ஒரு சிலர் அந்தப் பாதையில் நடந்து வந்தாலும், என்னை மட்டும் அடையாளம் கண்டு கொண்டு ஒரு சிரிப்புடன் வரவேற்றார். இதற்கு முன் அவர் என்னை பார்த்ததில்லை. ஆனால் அவரால் என்னை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இப்போது வரை புரியவில்லை. ஒரு வேளை என் வேட்டியும் சட்டையும் காண்பித்துக் கொடுத்திருக்குமோ என்ற சந்தேகம்.

அவர் இருந்த அந்த இடமே புதுமையாக இருந்தது. அத்தனையும் அடுக்குமாடி குடியிருப்புகள். படியேற மின்தூக்கி. அதன் உதவியில் மேலே சென்றோம் அது நின்றதும் கதவைத் திறந்து வெளியேற, பிறகு ஒரு கதவு. அதற்குப் பிறகு சிறு ஆசாரம் போல் (நாங்கள் சின்னதாக நீண்டு இருக்கும் அறை போன்ற அமைப்பு அப்படி சொல்லுவோம்) இரண்டு குடியிருப்புக்கான பாதை என நினைக்கிறேன். அதில் பக்கத்து வீட்டுக் குழந்தை, சின்ன கணினி போன்ற பொருளை கையில் வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த்து. அதையும் கடந்து அவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். என்னை தன் துணைவியாரிடம் அறிமுகப்படுத்தி வைக்க அவர் கையால் தந்த தண்ணீரை நான் குடித்து முடித்ததும் ”உங்கள் கவிதை ஒன்றைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்று உள் அறையில் இருந்த மடிக்கணினியை எடுத்து வந்து எனக்கு காண்பித்தபடி பேச ஆரம்பித்தார்.பல பாக்களைப் பற்றி பேசினார். தேமா, புளிமா, வெண்பாவின் வகைகள் என்று பல விதிமுறைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்.இலக்கிய இலக்கணத்தில் உயரத்தில் இருக்கும் சங்ககால புலவர் ஒருவரை நேரில் பார்த்த சுகத்தை எனக்குள் காட்சிப் படுத்தி, கண்ணெடுக்காமல் அவர் பேசுவதையே பார்த்தபடி இருந்தேன். எத்தனையோ வகைகளைப் பற்றி பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே குளிர்ந்த மோர்.அதில் கருவேப்பிலை கலந்திருந்ததில் அம்மாவின் கைப்பக்குவம் தெரிந்தது. அதற்குள் அவரது பேத்தியிடம் தன் செல்பேசியைக் கொடுத்து படம் எடுக்கச் சொன்னார். அடுத்த நொடியில் படம் பதிவானது. (இன்றைய இளைய தலைமுறையினருக்கு எதையும் சொல்லித் தரவேண்டியதில்லை).படம் எடுத்துவிட்டு அவரது பேத்தி உள்ளே சென்று விட, பிறகு அய்யாவே தொடர்ந்தார்.

நான் எழுதிய ”புதிய ஆற்றுப்படை” என்ற படைப்பை பார்வையிட்டு விட்டு, இது எந்த இலக்கணத்திலும் அமையவில்லை.கவிதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இதை இலக்கணத்தோடு எழுத முயற்சி செய்யுங்கள் என அன்புக் கட்டளை இட்டார்.

எனக்கு இலக்கணம் தெரியாது என்று சொன்னதுதான் தாமதம். ”ஒன்றும் கவலை வேண்டாம். இதோ கணினியில் ”அவலோகிடம்” என்ற தளம் இருக்கிறது. அது பார்த்துக் கொள்ளும். அதற்கு தகுந்தவாறு வார்த்தைகளை மாற்றி அமைத்தால் போதும் என்றும், அதற்கு எப்படி செல்ல வேண்டும் என்று எழுதிக் கொள்ளச் சொன்னார். எழுதிக் கொண்டேன். இலக்கண முறைகள், இலக்கண கவிதைகள் எப்படி இருக்க வேண்டும், அதன் இன்றைய நிலை ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார். ஆனால் அவர் சொன்னபடி இலக்கணத்தை படித்து விட்டு இன்று வரை அதை இலக்கண வழி எழுத சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தாலும் என்னை நான் நிரூபிக்க அதை செய்வேன் என்று மனதுக்குள்ளேயே ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டேன்.

நான் எழுதிய படைப்புகளை விட, என் கருத்துகள் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அது எதனால் என்று தெரியவில்லை. என் படைப்புகளுக்கு நான் மற்றவர்களுக்கு நன்றி சொல்லி எழுதும் போதும் மற்றவர்களின் கவிதைகளுக்கு நான் சொல்லும் என் கருத்துகள் பற்றியும் இரண்டு மூன்று முறை அவர் குறிப்பிட்டு சொன்னபோது நானே ஆச்சரியப் பட்டுப் போனேன்.

அவருக்கு நேரமாகி விட மருத்துவமனையில் இருக்கும் பேரனுக்கு மதிய உணவு கொண்டு செல்ல மருத்துவ மனைக்கு தயாரானார். மீண்டும் அதே ”மின்தூக்கி” இப்போது ”மின்இறக்கி”யாக மாறி எங்களை கீழ் தளத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. கீழே இறங்கியதும் அவர் தன் மகிழ்வுந்துக்கு அழைத்துச் சென்று, அதில் இருந்த புத்தகங்களில் ஒன்றான “ வகுப்பறையில் வண்ணத்துப் பூச்சிகள்” என்ற புத்தகத்தை பரிசாக தந்தார். அதற்கு என் நன்றி தெரிவிக்க அவரும் தன் வாழ்த்தை சொன்னார். என்னை எந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால் அவர் செல்லும் மருத்துவ மனை வழியும் நான் செல்ல வேண்டிய வழியும் வேறு என்பதால் அவரிடமிருந்து விடை பெற்று பேருந்தில் ஏறி அமர்ந்த போதுதான், அவர் ஒரு மருத்துவர் என்பதே நினைவுக்கு வந்தது. அதுவரை அவர் ஒரு சங்க காலப் புலவராகவே எனக்கு தெரிந்தார்.அறிவிலும், ஆற்றலிலும், மரபுக்கவிதை, புதுக்கவிதை, கட்டுரை என எல்லாவற்றிலும் மிக மிகச் சிறந்த அவ்வளவு பெரிய அறிஞர் ஒருவர், சாதாரணமான எனக்கும் மதிப்புத் தந்து, அருகில் அமர வைத்து பேசியதை என் ஒவ்வொரு அணுவும் எப்போதும் மறக்காது.

நம் தளத்தில் நான் எழுதிய ”மர்ம தேசத்து மகராணி” என்ற படைப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதாக சொன்ன போது இன்னும் ஆச்சரியம். அதற்கான இணைப்பை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதை ஆச்சரியத்தோடு பார்த்தேன். முதன் முதலாக என் தமிழ் எழுத்துகள், ஆங்கில உடையணிந்து வெட்கம் கலந்த மகிழ்ச்சியில் ஆங்கிலப் பள்ளி பிள்ளைகள் போல் தனியான ஒரு புதிய நாகரிக அழகில் இருந்தது எனக்கு ஒரு புதுமையாக தெரிந்தது. அவருக்கு என் பலகோடி நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன். அய்யா அவர்கள் என் எழுத்துகளுக்காக நேரம் ஒதுக்கி இதை செய்திருக்கிறார் என்றால் அது என் மிகப் பெரிய பாக்கியம். இந்த இலக்கணக் கவிதை மாமனிதரை சந்திக்க இது போன்ற வாய்ப்புக் கொடுத்ததற்கு கடவுளிடம் என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மட்டும் நிற்காமல் அவர் கேட்ட அந்த படைப்பை இலக்கண விதிகளோடு எழுதி அவரது ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

இந்த பயணம் ஒரு மகிழ்ச்சியான நிறைவான நகர உலா போனது போல் முற்றிலும் புதிய நகர அனுபவமாக இருந்தாலும், அவர் எவ்வளவு ஆழ்ந்த இலக்கண, இலக்கிய அறிவையும், அன்பையும், அரவணைப்பையும் கொண்டவர் என்பதை, கண் முன் கண்டு மகிழ ஒரு சந்தர்ப்பமாகவும் இருந்தது. என்பதையும் இதன் மூலம் சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர் நம் ”எழுத்து.காம்” தளத்தில் எழுதியிருக்கும் ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு கட்டுரைகளும் எல்லா வயதினருக்கும் இலக்கண தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கும் படைப்புகளாக இருந்து வருகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (25-Jan-16, 9:45 pm)
பார்வை : 851

சிறந்த கட்டுரைகள்

மேலே