நகரும் என் நொடிகள் - உதயா
என்னை கட்டியாளும்
பாசத்தின் பிணைப்பே
எனக்கு பாடைக்கட்டுகிறது
கட்டிய பாடையையும்
உடைத்தெறிகிறது
புரிதலோடும்
முழு புரிதலின்றியும்
அச்சத்தின் பிடியில் தொலைந்து
கௌரவத்தின் கரையில் எழுந்து
என்னைக் கொல்லாமல் கொல்கிறார்கள்
உணர்ச்சிகள்
என் மனதினை அறுக்க
சிந்தும் கண்ணீர் கரைத்தாண்டி ஓட
வேதனைக் குழியில் புதைக்கப்பட்டு
வெந்து வெந்து சாகிறேன்
ஓர் மௌனத்தின் முனையில்
வெகு நேரம் மூழ்கியும்
ஏதோவொரு இருட்டறையில்
தொலைந்துப் போன என் பாதை
பயணத்தை வெறுக்கிறது
சீற்றம் கொண்ட ஆற்றில்
என் பிடிமானம் உதறப்பட்டும்
என் உயிர் பறிக்கப்படாமல்
கரைகளிரண்டும் ஆற்றில் குதித்து
மாண்டுப் போக துடிக்கிறது
ஓர் மாளாப் போரில்
என் மனமே மயானமாகிறது
பிணங்களின் வரிசையில்
என் கண்ணீரின் அணிவகுப்பு தொடர்கிறது
என்னை மட்டும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறது
- உதயா