என்றும் நீ எமக்கு வேண்டும்

வெண் முகிலே விரதம் விடுத்து
பரவை பார்க்க பறவையாய் திரிந்து
நீரைக் கவர்ந்து நிலத்தில் தெளித்து
மண் உயிரெலாம் நித்தம் பிழைக்க
என்றும் நீ எமக்கு வேண்டும்
உன் னுயிரை உதிரமாய் உதிர்த்தாய்
மண் ணுயிரின் வறுமை நீக்க
உடல் முழுதே கறுமை சேர்த்து
தீரா இன்பம் திகட்டா தளிக்க
என்றும் நீ எமக்கு வேண்டும்
ஒன்றாய் பிணைந்தே ஒருங்கே விழுந்தாய்
ஆனந்தமே வந்தாய் ! ஆருயிரே வந்தாய் !
இரவின் சொத்தை கொத்தாய் திருடி
திடீர் இருளை பகலிற் கொடுத்தாய்
என்றும் நீ எமக்கு வேண்டும்
கதிரவனின் கண்ணை களவு கொண்டு
கனத்த உயிரை புவியிற் பதித்து
அனைத்து உயிரும் பகிர்ந்து பிரித்து
ஆனந்த வாழ்வு அகம் முளைக்க
என்றும் நீ எமக்கு வேண்டும்
மரித்துப் போன குளம் குட்டை
உயிர்த்து மீள உயிராய் நுழைந்தாய்
எங்கும் ஆறு தங்கி ஓட
செழுமை பொங்கும் பசுமை ஆட
என்றும் நீ எமக்கு வேண்டும்
வெற்றுத் தண்ணீர் நீ அல்ல
உயிரைக் நீட்டும் தே னமுதம்
உன்னை நீ எமக் களித்தாய்
என்றும் மறவே நா மும்மை
என்றும் நீ எமக்கு வேண்டும்.