காஞ்சி காமாட்சி பாமாலை

காஞ்சி காமாட்சி பாமாலை
1.
ஐந்தவித்த முனிவர்களும் வானவரும் தானவரும்
வந்திங்கு வணங்குபுகழ் காஞ்சிகா மாட்சிதனை
செந்தூர நிறத்தாளை வண்டூரும் முகத்தாளை
வந்தனை செய்வோம் நினைந்து.
2.
மருங்கினில் அசைந்தாடும் நந்தா விளக்கொளிதான்
கருவறையில் உறைகின்ற காமாட்சி முகந்தனில்
நெருங்கியும் நீங்கியும் நடமிடுதல் காண்கையில்
உருகிடும் உள்ளமெல் லாம்.
3.
சாமமறை நாயகனின் வாமபாகத் தினளின்,
காமனை எறித்தவனைக் கடிமணம் புரிந்தவளின்,
காமத்திரு கண்ணினளின், வரமருளும் புண்ணியளின்
நாமமதை நாளும் நவில்வோம்.
4.
பத்துமா தம்தாங்கி நமைப்பெற்ற அன்னைபோல்
மொத்தமா வுலகையும் ஈன்றெடுத்துக் காப்பவளை
பத்(து)மா சனநிலையில் அமர்ந்திருந்து அருள்புரியும்
சித்தமா சக்தியைத் தொழு.
5.
இருகையில் பாசமங் குசங்கள் பிடித்தவள்
கரும்புவில் ஒருகையில் தாங்கித் தரித்தவள்
மறுகையில் தாமரை மலரொன்றைக் கொண்டவளின்
திருப்பாதம் துதிப்போம் தினம்.
6.
ஆதிசங் கரரமைத்த திருச்சக் கரத்தமர்ந்து
மேதினியில் தீதொழிய அருள்புரிபவள் அவள்
காதினிக்க சௌந்தர்ய லாஹிரியைப் பாடியவள்
பாதங்களைப் பணிந்து தொழுவோம்.
7.
ஊசிமுனை தனில்நின்று உறுதவம் செய்துப்பின்
ஈசனை மணந்துஅவன் இடம் சேர்ந்தவள்-அவளைப்
பூசித்து மலர்கொண்டு அனுதினமும் அருள்வேண்டி
யாசித்து அடைவோம் நலம்.
8.
வளியவள் வெளியவள் அனலவள் புனளவள்
ஒளியும் நன் னிலங்களும் அவள்படைப்பு தான்..
களிப்புடன் அவளது கழல்களைப் பற்றினால்
ஒளிந்திடும் மனக்கவலை கள் .
9.
கயிலையில் களிநடம் புரிகின்ற ஈசனை
இயக்கும்நல் விசையே மகாசக்தியே- அவள்
மயக்குமுக அழகினை மகிழ்வுடன் பாடினால்
பயனுறும் இப்பிறப் பே.
10.
சக்தியவள் இல்லையேல் சிவனிங்கு இல்லையே
முக்திதரும் அவள்நாமம் தினம்சொல்லியே -நாளும்
பக்தியுடன் தொழுவோர்க்குப் பிறவிச்சுழல் நீங்கியே
சித்திக்கும் சொர்க்கலோ கம்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (27-Jan-16, 6:32 am)
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே