எனக்கான வானம் _ குமரேசன் கிருஷ்ணன்
நிலவின் நிறப்பிரிகையில்
அமிழ்ந்திருந்த நேரம்
எனக்கான வானம்
இருளோடேயிருந்தது...
உன்விழிப்பிரளயத்தால்
வெடித்துச்சிதறிய
காதலணுக்களின்
கடைசித்துகளும்
வேற்றுக்கிரகத்தில்
நிலவாய் உயிர்த்திருக்க...
எரிதணலில் சிதைமூட்டிய
என் ஞாபக விசும்பல்களுடன்
எழுந்து நர்த்தனமாடி
என் இராவோடென்றும்
எரியட்டும் உன் நினைவுகள்...
கிளிஞ்சல்கள் சேகரித்த
உன் பாதச்சுவடுகளின்
உராய்வினால் கிளர்ச்சியுற்ற
கடலணுக்கள் பேரலைகளாய்
உருமாறி பெருமூச்சுவிட...
பெருமழையைப் பெய்விக்க
எழுந்த மின்னல்களின் ஒளிக்கீற்று
உன்விழிவீச்சில் அதிர்ச்சியுற்று
மேகத்திற்குள் பதுங்கிக்கொள்ள
இன்னொரு பிரளயத்தின்
முன்னோட்டத்தை உணராமலே
மூழ்கினேன் காதல்முத்தெடுக்க
உன் விழிக்குளத்தில் நீச்சல்மறந்து..
கண்ணுக்குப் புலனாகாத
காதலின் அதிர்வலைகள்
பெருவெளியெங்குமுலவி
உன்னதிர்வுக்குள் சங்கமிக்க
உன் கண்களைச் சந்திக்க
திராணியற்று என்காதல்
வெறுமை புலவெளியில்
வெந்தணலில் வீழ்ந்துவேக..
எனக்கான வானம் புலப்படாமலே
வெளிச்சக்கீற்று நாடியுருகுது மனம்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்