வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் - ராகமாலிகை

அகத்தியர் (1972) திரைப்படத்தில் கவிஞர் உளுந்தூர்ப் பேட்டை ஷண்முகம் இயற்றி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் அகத்தியராக சீர்காழி கோவிந்தராஜனும், ராவணனாக ஆர்.எஸ்.மனோகரும் (மனோகருக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார்) நடித்துப் பாடும் ஒரு அருமையான போட்டிப் பாடல் ’வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்!’.

இப்பாடல் வெவ்வேறு ராகங்களில் அமைந்த ராகமாலிகையாகும். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
’நாட்டை’யும் நாதத்தால் வென்றிடுவேன் - எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்?
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன் (நாட்டையும்)

வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
’பைரவி’ துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் - அந்த
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்.

விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்

'பைரவி' துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்

இசை கேட்டு எழுந்’தோடி’ வந்தான் - என்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உந்தன்
இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான் உந்தன்
இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான் என் (இசை)

நடித்தான் தமிழைப் படைத்தான் இசையை
வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ்ப் புலமை சித்தனும் எனது
வித்தகம் கண்டு பரிவுடனே என்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்.

‘ஆரபி’மானம் கொள்வார்
ஆரபிமானம் கொள்வார் வெறும்
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்

வெற்றி எட்டு திசை முட்டவே பெற்ற
வெறியினால் வந்த விளைவிதுவா?
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே (ஆரபிமானம்)

‘ஷண்முகப் ப்ரிய’ன் என்னும் தைரியமா?
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
ஷண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?

நாடகமா ‘தர்பார்’ நாடகமா?
அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும்
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?

‘ஹம்சத்வனி’ அமைத்த மன்னவன் நான்

அனைத்தும் உன் ‘வசந்தா’னா ஆணவம் ஏன்?

(ஹம்சத்வனி)

'மோஹன' கானம் நான் மீட்டிடுவேன்

மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

(மோஹன)

‘பாகேஸ்வரி’யோ பரம்பொருளோ?
பாகேஸ்வரியோ பரம்பொருளோ?

பாற்கடலில் துயிலும் ‘சாரங்க’னோ?
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?

யார் வந்தால் என்ன ‘காம்போதி’
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்

‘நாட்டை’யும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

‘கௌரி மனோகரி’ துணையிருப்பாள்
கௌரி மனோகரி துணையிருப்பாள்

’கல்யாணி’ மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்

‘சரஸ்வதி’ எந்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்

சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன் அந்த

'பைரவி' துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-16, 9:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 598

மேலே