பாயும் ஒளி நீ - மகிழினி
 
 
            	    
                ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் வர்ணிப்பான்.. காதலில் இருக்கும் போது??? 
இப்பொழுதெல்லாம் சபிக்காமல் கவிதைகள் இருந்தாலே ஆச்சரியம் தான்.. இதில் உயர் தர வர்ணனை என்பது எதிர்பார்க்காமலே இருப்பது தான் நல்லது என்றும் தோன்றுகிறது.. 
பாடல் ஒன்றை கேட்டேன்.. ரசித்தேன்.. மதியிழந்தேன் .. இதைத்தான் சொல்ல வேண்டும் பாரதியின் "பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு"...பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இன்னும் தேனாய் இசைக்கிறது மீசைக்காரனின் கவிதை.. 
ஏனோ பாரதிகள் குறைவாய் இருப்பதாலே கண்ணம்மாக்கள் அதிகம் வெளிப்படுவதில்லை என நினைக்கிறேன்.. 
உள்ளம் உருகி கண்ணீராய் வெளிவருகிறது பாரதியின் மீது கொண்ட மரியாதை, பற்று மற்றும் காதல்... 
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா - இந்த வரிகள் இன்று வேறொரு வடிவில் தான் வெளிப்படுகிறது "You are my sun shine" ....  இருந்தும் மயக்கும் தமிழ் போல அத்தனை இன்பமாய் இருப்பதில்லை தானே! 
"வீரம் அடி நீ எனக்கு வெற்றி அடி நான் உனக்கு" - நீயின்றி எதுவும் இயங்காது கண்ணம்மா இந்த ஏழைக் கவிஞனுக்கு! 
நீதான் எங்கும் நிறைந்திருக்கிறாய் அவனுக்கு 
பெண்ணே கண்ணம்மா ! 
அவன் காணும் ஒளியெல்லாம் நீ தான் 
அவன் இசைக்கும் இசையெல்லாம் நீ தான்
அவனை தாங்கி நிற்கும் உயிரும் நீ தான் 
அவனின் காதலும் நீ தான் 
அவன் ஓதும் வேதமும் நீ தான் 
பெண்ணே கண்ணம்மா ! 
எத்தனை அழகாய் காதலை யார் சொன்னாலும் அது பாரதியின் வரிகள் போல நிச்சயம் இருக்காது...
 
                     
	    
                

 
                                