வளமோடு வாழுங்கள்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசை இருந்தால் நீந்தி வா !
என்னும் பாடலைக் கேட்டிருப்போம். துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் ஒத்தடம் கொடுத்து , உசுப்பேத்தி ,தெம்பூட்டுகின்ற பாடல் என்றால் அது மிகை அல்ல. தோல்விகளால் சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கு, நம்பிக்கை என்னும் மருந்தை ஊட்டுகின்ற சொற்கள்.
வாழ்க்கை என்றால் வாழத்தானே வேண்டும். வாழ்கிறோம், வாழ்வோம் எனும் நம்பிக்கையில் தானே ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஆற்றங்கரையோர அரச மரந்தான் என்பதை உணர்ந்தும் , மானுடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அதற்கு நம்பிக்கைதானே காரணம். நம்பிக்கை உள்ளவனால் நிச்சயமாக வாழ முடியும்.
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே –உனை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா-உன்
அஞ்சாமை திறமையிலே கண் வையடா !!
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வேது ? இன்பமும் துன்பமும் இல்லாமல் ஒரு வாழ்க்கை இருக்க முடியுமா? வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்பதைத் தெரிந்து கொண்டு நாம் வாழ்க்கைப் பாதையில் நடை போட வேண்டும். இந்த மண்ணுலகில் பிறப்பெடுப்பதே வாழ்வதற்காகத்தான் என்பதை ஒவ்வொரு மனிதனும் அவன் அவன் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். இறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று.அந்த இறப்பு சிறப்பானதாக இருக்க அவன் உழைக்க வேண்டும். மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு தனித்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? செயற்கரிய செய்தல் வேண்டும். வள்ளுவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ,
செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். . என்று உணர்த்தி விட்டாரே.
வாழ்க்கைப் பாதை பஞ்சு மெத்தைகளால் நிரப்பப்பட்டது அல்ல கல்லும் முள்ளும் கலந்து கிடக்கக் கூடியதுதான். நடப்பவர்கள் தான் பார்த்து நடக்க வேண்டும். இல்லையென்றால் கல் தடுக்கும், முள் குத்தும். அப்படியே கல் தடுக்கி, முள் குத்தி வேதனை பட்டாலும், அந்த வேதனைகளை எல்லாம் தூசியை தட்டிவிட்டு நடப்பது போல் , துடைத்துவிட்டு நடக்கின்ற மனத் துணிவு வேண்டும். இவைகள் எல்லாம் சின்ன வேதனைகள் தான் என்று எண்ணுகின்ற மனப் பக்குவம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருந்திடல் வேண்டும். மனம் பக்குவப் பட்டாலே பாதி துணிச்சல் மனதில் நிறைந்து விடும் .
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே !!!.
பாடிப் பாருங்கள். உங்கள் மனம் சிலிர்க்கும். உடலும் சிலிர்க்கும். உணர்வுகளும் சிலிர்த்து நிற்கும். மற்றவர்கள் நமக்காகப் பரிதாபப் படவேண்டும் என்று எக்கராணத்தைக் கொண்டும் உள்ளத்தில் நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் அது உங்களைக் கோழை ஆக்கிவிடும். நமக்கு நாமே என்று வாழவேண்டும். நம்மால் மட்டுந்தான் நமது வாழ்க்கையை வாழ முடியும் என்று எண்ணுகின்ற உறுதியான உள்ளங்கள் இருந்து விட்டால் போதும், நம்மால் வென்று விட முடியும். தோல்விகளை எல்லாம் துவசம் பண்ணி விட முடியும்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
வாசல் தோறும் வேதனை இருக்கும். என்பதை புரிந்து கொண்டால் போதும். வாழ்க்கை நம் வசமாகிவிடும். சுகம், துக்கம், பந்தம் ,பாசம்,அன்பு, கோபம், சிரிப்பு அழுகை என எல்லாவகை உணர்வுகளும் கொண்டவன் தான் மனிதன். இத்தகைய உணர்வுகள் இல்லாதவன் மனிதனாக இருக்கமுடியுமா ? நிச்சியமாகக் கூறலாம் மனிதனாக இருப்பவனால் அப்படி இருக்க முடியாது. ஆனால் எல்லா உணர்வுகளையும் சமமாக எண்ணுகின்ற பக்குவம் பெற வேண்டும். இன்பம் வந்தால் குதிப்பதும், துன்பம் வந்தால் குமுறி அழுவதும் இல்லாமல் மனதை ஒரே சமமாக வைத்துக் கொண்டால், எந்த ஒரு உணர்வும் மனிதனைப் பாதிக்காது. உலகத்தில் வந்து போகும் இரவும் பகலும் போல் இதுவும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.
திரைப்படம் பார்க்கப்போகிறோம். திரைக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் இருக்கையில் உட்கார்ந்து கொள்கிறோம். திரையைப் பார்க்கிறோம். திரை வெண்மையாக இருக்கின்றது. எந்த ஒரு சலனமும் , கத்தலோ இல்லாமல் மகான்கள் போல் அமைதியாக இருக்கிறது. விளக்கு அணைக்கப்பட்ட உடன், வெண்திரை, வெள்ளித்திரையாக மின்னுகிறது.. சண்டைகள், சச்சரவுகள் , ஒடுவது, குதிப்பது, காதல் பண்ணுவது , கொஞ்சுவது, குரைப்பது எனப் பலவகையான காட்சிகள் ஒடுகின்றன. இப்போது திரை அமைதியாக இல்லை. கொதிக்கிறது. கும்மாளம் போடுகிறது. அலை அடிக்கிறது. பூகம்பமும், சூறாவளியும் வந்து அலங்கோலப்படுத்துகின்றன. எங்கும் அழுகைக்குரல்கள். திரைப்படம் முடிந்து விட்டது. விளக்குகள் போடப்பட்டன. திரையினைப் பார்க்கும். இப்போது எந்தவொரு சலனமும், ஆர்பாட்டமும் அங்கே இல்லை. அது படம் ஓடுவதற்கு முன் பார்த்த வெண் திரையாக அமைதி காக்கிறது.. இதுதான் உண்மை. சற்றுமுன் காட்டப்பட்டது வெறும் நிழல்கள் என்பது உறுதி படுத்தப்பட்டு விட்டது. இந்த வெண் திரைபோல் நமது மனதை வைத்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.அந்தச் சுகம் தெரியும். சலனப்படாமல் மனது இருந்தால், எதுவுமே நம்மைப் பாதிக்காது.
மனிதனுக்கு ஒரு செயலைச் சாதிக்க வேண்டுமென்றால், மனதில் உறுதி வேண்டும்.
அந்த உறுதியைப் பெறுவது எப்படி ? எண்ணிய செயலை எண்ணியபடி முடிக்கவேண்டும் என்னும் ஒரு வைராக்கியம் வேண்டும். நம்மால் இதைச் செய்து முடிக்க முடியும் என்னும் நம்பிக்கை வேண்டும் நம்பிக்கைதான் நமது வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளம் என்றால் அது உண்மை..
‘காட் விட் ‘ என்னும் ஒரு பறவை பதினோராயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓய்வின்றி கிட்டத்தட்ட ஒரு வார காலம், உணவு உண்ணாமல்,ஓய்வும் எடுத்துக்கொள்ளாமல் பறந்து செல்லுமாம். அது எப்படி அந்தப் பறவையால் முடிகிறது. அது தான் அதன் வைராக்கியம். இலையுதிர் காலத்தில் அலாஸ்காவிலிருந்து, நியூசிலாந்துக்கும், வசந்த காலத்தில் நியூசிலாந்திருந்து அலாஸ்காவிற்கும் இந்தப் பறவை தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. அந்த பறவைக்கு இருக்கிற வைராக்கியமும், உறுதியும், நம்பிக்கையும் மனிதர்களுக்கு இல்லாதிருப்பதுதான், மனிதனின் மனச்சஞ்சலங்களுக்கும், தோல்விகளுக்கும் காரணமாக இருக்கின்றன. அந்தப் பறவையைப் போல், மாறிப்பாருங்கள், வானமும் வசப்படும்.வாழ்கைகையும் சுகப்படும் என்பது உண்மை.
‘யாருக்காவது தீமை செய்ய வேண்டுமென்றால் மட்டுமே உனக்கு சக்தி தேவை. இல்லையென்றால் ,உன்னுடைய புன்னகை ஒன்றே போதும் எல்லாவற்றையும் செய்து முடித்து விடும்’ என்றார் சார்லி சாப்ளின். கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டால், உடம்புக்கு நல்லதல்ல. இல்லாத வியாதிகளை எல்லாம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அதே நேரம், புன்னகை முகத்தோடு இருக்கப் பழகுங்கள், எல்லாமும் , எல்லோரும் உங்களுக்குச் சொந்தமாகும்.
வாழ்கையில் பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்பவர்களாக நாம் இருந்திடப் பழக வேண்டும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது மற்றவர்களைப் பாதிக்குமா? என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும். எவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்னும் உணர்வுகளோடு செயல்படுவது நன்றல்ல. ஏனென்றால் தனி மனிதர்களின் கூட்டுதான் சமுதாயம். ஒவ்வொரு தனிமனிதனின் பாதிப்பும், முடிவில் இந்தச் சமுதாயத்தைத்தான் பாதக்கும் என்பதை தனிமனிதன் ஒவ்வொருவனும் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் போதும் . சமுதாயம் முன்னேறும். சமுதாயம் முன்னேறினால் ,நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் உலகமே முன்னேறும்.
நல்லது செய்பவர்களையும், உதவி செய்பவர்களையும் நாம் பாராட்டவேண்டும். பாராட்டை எதிர் பார்த்து செய்பவர்களாக இருந்தாலும் , பாராட்டும் எண்ணத்தை விட்டுவிடக் கூடாது. உதவு செய்பவர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கவேண்டுமே தவிர, உபத்திரம் செய்பவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் கவனமாகச் செயல்பட வேண்டும். ‘ நன்றி மறப்பது நன்றல்ல ‘ என்பது வள்ளுவரின் வாய்,மை மொழி. ‘இந்தஉலகம் நீ நன்மை செய்யும் போது கவனிக்காது. அதே நேரம் நீ தீமைகள் செய்யும்போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது ‘ என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
பாரியின் இறப்பிற்குப் பின் ,வசதிகள் குன்றி வறியவர்களாக ஒரு சிறிய குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பாரியின் புதல்விகளான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார் ஔவையார். வீட்டிற்கு வந்துவிட்ட ஔவையாருக்கு எதுவுமே கொடுக்க முடியவில்லையே என்று வருந்திய பாரியின் புதல்விகள், வீட்டில் இருந்த கீரையை உணவாகச் சமைத்துக் கொடுத்து, ஔவையின் பசியை ஆற்றினார்கள். உண்டு களைப்பாறிய, ஔவைக்கு , உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோற்றியது.இவ்வாறு பாடி தனது நன்றியை வெளிப்படுத்துகிறார்..
‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டும் –பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் செறியாதோ கைக்கு. ‘
(வெய்தாய்-- சுடச்சுட, அடகு --- கீரை கடகம் - இரத்தினக்கல் )
வாழ்க்கையில் நாம் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். பிறரின் நற்செயல்களைப் பாராட்டத் தெரிந்தவர்களாவும் இருக்கவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருக்க வேண்டியது அன்பு. அன்பு தான் கடவுள். அன்புதான் வாழ்க்கை. ஏன் அன்புதான் எல்லாமே.மறந்தடக் கூடாது.
அன்பு -சிலருக்குக் காட்டத் தெரியவில்லை.
அன்பு –சிலருக்குக் காட்டுவது தெரிவதில்லை
அன்பு –பலருக்குக் காட்டுவது புரிவதே இல்லை.
இந்தக் குறைபாடுகளை அவரவர் போக்கிக் கொள்ளவேண்டும். இந்த மூன்றில் நமக்கு எதில் குறை என்பதைப் புரிந்து கொண்டு , அந்தக் குறைகளைக் களைந்து வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை வளமாகும்.
*******************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Jan-16, 7:54 pm)
பார்வை : 403

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே