ஜனவரி 30

ஜனவரி 30


ஜனவரித் திங்கள் முப்பதாம் நாள் கோட்சே காந்தியைச் சுட்ட தினம்.
இனவெறி மதவெறி இரண்டையும் எதிர்த்த காந்தித் தாத்தா செத்த தினம்.

தினம்வரும் தினசரிப் பத்திரி கைகளில் நினைவுச் செய்திகள் ஏதுமில்லை.
மனம்மிக வருந்துது சினம்மிகப் பொங்குது இந்த மாந்தரை நினைக்கையி லே!

சுதந்திர இந்தியா ராம ராஜ்யமாய் ஆக. வேண்டுமெனக் கனவு கண்டார்.
மதம்தலைக் கேறிய ஆட்சி யாளரால் ரோம ராஜ்யம்போல் அழிகிற தே!

சுயமாய் நம்மைநாம் ஆளுங் காலம் வந்தது எனவே மகிழ்ந்தது பொய்
சுயநலக் காரர் ஆட்சியில் அமர்ந்து சூறை யாடுறார், இதுவே மெய்.

துயர்படும் உழவர் நிலைகண்டு வருந்தி மேலா டைஅணி வதைத் துறந்தார்.
இவர்பெயர் சொல்லி ஆட்சிக்கு வந்தோர் இடுப்பா டையுமே உருவு கிறார்!


நாதுராம் அவரை குண்டொன்று போட்டு ஒருமுறை தானே கொன்றிட் டான்!.
தீதொன்றும் நினையா தூயவர் இவரை தினம் தினம் இவரோ கொல்லு கிறார்.


முச்சந்தி முனையில் இவர்சிலை நிறுவி வருடம் ஒரேமுறை வணங்கி வந்தார்.
இச்சம யத்தில் அதையும் விடுத்து கோட்சே சிலையை நிறுவு கிறார்!


தினம்தினம் புழங்கும் பணநோட் டுகளில் அவர்புகைப் படமின் றில்லை யெனில்
இனம்கண்டு கொள்ளார் இன்றைய தலைமுறை இப்படி ஒருவர் இருந்ததை யே!

கரம்சந்த் காந்தி இன்று இருந்தால் தற்கொலை செய்து கொள்வாரோ? இல்லை
கரந்தனில் "கேஷ்நிகோ கன்னை" எடுத்து கயவ ரனைவரையும் கொல்வாரோ?

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (1-Feb-16, 6:29 pm)
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே