என்தேசம் என் சுவாசம்

என்தேசம் என்சுவாசம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு
-----வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி
வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால்
-----வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு !
முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த
-----முட்செடியா இந்தநாடு? மானத் தாலே
தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால்
-----தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு !

காற்றினிலே மிதந்துவந்து மூக்கிற் குள்ளே
-----கலக்கின்ற நறுமணமா இந்த நாடு ?
நேற்றுகளின் பண்பாட்டைச் சுவடாய்த் தாங்கி
-----நிலைக்கவைக்கும் சுவாசந்தான் இந்த நாடு !
வேற்றுமையை எழிலான நிறத்தில் காட்டி
-----வேலிக்குள் பூத்தமலர்த் தொகுப்பா நாடு ?
போற்றுகின்ற சாதிமத எண்ண மொன்றிப்
-----பொலிகின்ற மனத்தொகுப்பே இந்த நாடு !

வெற்றெழுத்தால் உருவான சொல்லா நாடு
-----வெடிக்கை ஒலிக்குறிப்பின் சேர்ப்பா நாடு?
குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் ஒற்றெ ழுத்தில்
-----குலவிப்பொருள் தரும்சொல்லே இந்த நாடு !
வற்றாத நதிகளாக அன்பு பாய்ச்சி
-----வயல்விளைத்துக் காக்கின்ற தாயே நாடு !
வெற்றுச்சொல் பேச்சின்றி உயிராய்ப் பேணி
-----வியர்வையிலே உயர்த்துவதே சேயின் மூச்சு !

( தினமணி நாளிதழின் கவிதைமணி மின்னிதழில் 01-02-2016 அன்று வெளிவந்த கவிதை )

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (3-Feb-16, 10:26 am)
பார்வை : 1750

மேலே