புறநானூறு பாடல் 2 - சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன்

இப்பாடல் முரஞ்சியூர் முடிநாகனார் என்ற புலவரால் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னனை வாழ்த்திப் பாடியது. இம்மன்னனை உதியனென்றும், உதியஞ்சேரலென்றும், உதியஞ்சேரலனென்றும் மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர்.

பாண்டவரும், துரியோதனாதியரும் போர் புரிந்த காலத்தில் நடுநிலையாய் இருந்து இருபக்கத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறிட்டதால் இம்மன்னன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என அழைக்கப்பட்டான்.

இப்பாட்டைப் பாடிய முடிநாகனாரது ஊர் முரஞ்சியூர் என்பதாகும். இவர் தலைச் சங்கப் புலவருள் ஒருவர் எனப்படுகிறது. நாகனார் என்ற இவரது பெயர் பிற்காலத்து ஆசிரியர்களால் நாகராயர் என தவறுதலாக எழுதப்பட்டது.

இமயப் பொற்கோட்டையும், பொதியத்தையும் பாடலில் இணைத்துச் சொல்வதால், இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப்போர் நிகழ்ச்சியில் சேரமான் நடுநிலையாய் உணவளித்து உதவியதை இவர் நேரில் கண்டறிந்தவரென சொல்லப்படலாம் எனத் தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்(கு) 5

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலும் அளியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற்குளிக்கும் 10

யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் 15

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்து 20

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்து இமயமும் பொதியமும் போன்றே. 24

பொருளுரை:

செழுமை மிகுந்த நிலப்பரப்பும், நிலப்பரப்பின் மேலேயுள்ள வானளாவிய ஆகாயமும், ஆகாயத்தைத் தழுவி வரும் காற்றும், அக்காற் றினால் உந்தப்பட்டு பரவும் நெருப்பும், அந்த நெருப்புக்கு மாறுபட்டு அதை அணைக்கவல்ல நீரும் எனப்படும் ஐந்து வகையான பெரும் பூதங்களின் தன்மை போல, தன்னைப் போற்றாமல் பிழை செய்யும் பகைவரின் பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவில்லாது பகைவர் சூழ்ச்சி செய்யுமிடத்து அவர்களை அழித்து அகற்றவும், அப்பகைவரை அழிப்பதற்கேற்ற மனவலிமையும், தவறு செய்தவரை அழித்தலும், அவர் தவறை உணர்ந்து வழிபட்டால் அவரை மன்னித்து அருளும் தன்மையும் உடையவனே!

உனது நாட்டின் கடற்பரப்பின் மேல் தோன்றிய சூரியன் உனது வெண்மையான தலைக்கு நிகரான வெண்மையான நுரையுடன் கூடிய அலைகள் மோதும் கடலின் மேற்கே மறையும் புதுவருவாயும், செல்வமும் தரும் ஊர்களையுடைய நல்ல நாட்டின் அரசே! வானளாவிய அதிகாரமும் உடையவன் நீதானே பெருமானே!

அசைகின்ற பிடரி மயிறு கொண்ட குதிரையையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து நிலத்தைத் தம்மிடம் சூதாடி அபகரித்துக் கொண்டதால், தும்பையை மாலையாக அணிந்த துரியோதனன் முதலாகிய நூறு பேர்களும் போர் புரிந்த நாட்களில் எல்லாம் படைப்பிரிவினர் அனைவர்க்கும் நிறைவான உணவு அளவில்லாது கொடுத்தவனே!

’பால் தன் சுவை குறைந்து புளித்தாலும், சூரியன் தன் ஒளியைக் குறைத்து பகல் பொழுது இருண்டாலும், நான்கு வேதத்தில் சொல்லப்பட்ட ஒழுக்கம் மாறினாலும் மாறுபாடில்லாத உனைச் சுற்றியுள்ள மந்திரிகளுடனும், உறவினரோடும் முற்றிலும் நெடுங்காலம் வாழ்ந்து, மலைச்சாரலில் சிறிய தலைக் குட்டிகளையுடைய பெரிய கண்களையுடைய பெண் மான் தங்கள் இறுதிக் காலத்தில் அந்தணர் செய்தற்கரிய கடமையாகிய ஆகுதியாகப் பண்ணும் முத்தீ வெளிச்சத்தில் துயிலும் பொற்சிகரங்களையுடைய இமயமலையும், பொதியமலையும் போல எவ்வித மனச்சோர்வின்றி உறுதியாக நிற்பாயாக’ என்று சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனை புலவர் முரஞ்சியூர் முடிநாகனார் வாழ்த்துகிறார்.

திணை: இப்பாடல் பாடாண்திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்பு களைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.

’ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய்’ என்று சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனின் புகழ், வலிமையும், ’ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’ என்று அவன் கொடைத் திறமும் சொல்லப்படுவதால் இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது செவியறிவுறூஉ துறை யாகும்.

’கறந்த பால் புளித்தாலும், பகல் இருட்டாக மாறினாலும், நால்வேத நெறி உலகில் நிகழாமல் போனாலும், நீயும் நின் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப் போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ் சோறு வழங்கிய கொடை உள்ளம் மாறாமல் இருப்பீர்களாக’ என்று கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அறிவுறுத்துவதனால் இப்பாடல் செவியறிவுறூஉ துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-16, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1492

மேலே