ஞாயிற்று கிழமையும் காதலும்
காதல் என்பது.....
ஒரு ஞாயிற்று கிழமையை போல.....
சில வேளைகளில்....
ஞாயிற்று கிழமையின்
அதிகாலை பெருநகர சாலையைப்போல்
ஆள் அரவமற்ற தனிமை சுகம் தரும் காதல்
ஞாயிறு அன்று
குளியலற்று சோம்பி திரிதல் போல்
விதிகள் மறந்து சுகித்திருக்க செய்கிறது காதல்
மழித்தும் துவைத்தும் மிளிர வாய்த்திருக்கும்
ஒரு ஞாயிற்று கிழமையை போல் ...
வரும் கையோடு அழகியல் உணர்வையும்
அழைத்து வந்துவிடும் காதல்
ஞாயிற்று கிழமையில் ஷாப்பிங் மால் போல்
காதல் வந்தால்.....
உற்சாகம் தானாக தொற்றிக் கொள்ளும்
ஞாயிற்று கிழமைகளில் ரங்கநாதன்தெரு போல்
காதலில் ....
நினைவுகளின் கூட்டம் நெரிக்கும்
கறிசோற்றையும் மதியத்தில் கண்ணயர்வையும்
பரிசளிக்கும் ஞாயிற்றைபோல்
காத்திருப்புகளையும் கடைக்கண் பார்வைகளையும்
வரமளிக்கும் காதல்
கவலைகள் மறந்து கடற்கரையில்
கால் நனைக்க வாய்ப்பளிக்கும் ஒரு ஞாயிற்றை போலவே
கவிதை எழுத விடுகிறது காதல்
திங்களை எதிர்கொள்ள தயங்கும்
ஞாயிற்று கிழமையின் மாலையை போலவே
காதலில் பிரியும் நேரம் கொடிது
அடுத்து வரும்
ஞாயிற்று கிழமைக்கு தவமிருப்பதுபோல்
இன்னுமொரு சந்தித்தலுக்காக
காத்திருக்கச் செய்யும் காதல்
காதல் என்பது.....
ஒரு ஞாயிற்று கிழமையை போல.....
-டயானா