அன்பாய் இருந்திடுவாள்

அன்பாய் இருந்திடுவாள் !

இடையில் மின்னிட இதழிடை சுவையுற
நடையிடை ஜதியென நடைபயின்றாள்!

கண்ணிடை வேலென கழுத்திடை சங்கென
பண்ணிடை இசையென பனிஇதழ் நகைத்திடுவாள்

நூலிடை கனியென நுதலிடை பிறையென
தாளிடை பஞ்சென நடம் புரிந்திடுவாள் !

கவியிடை கருத்தென கருத்திடை அமுதென
செவியிடை இசையென செவ்விதழ் விரித்திடுவாள்!

அன்பிடை அணைப்பென அறிவிடை நூலென
பண்பிடை பாசமென பைந்தமிழ் பாட்டிசைத்தாள்!

என்னுயிர் அமுதாய் எழுத்தினில் கவியாய்
பொழுதினும் துணையாய் பின்தொடர்ந்திடுவாள் !

அழகிலும் அழகாய் அமுதினும் அமுதாய்
அணைத்திடும் தமிழாய் அன்பாய் இருந்திடுவாள் !

----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (4-Feb-16, 8:50 pm)
பார்வை : 92

மேலே