சோறு எங்கே விக்கும்
முன்பு ஒரு காலத்தில் நாகைக்கு வந்திருந்தார் காளமேக புலவர். அவர் பசியால் வாடிப் போய் உட்கார்ந்திருந்தார்.
அவர் சாப்பாட்டுக்குக் காத்திருந்த காத்தான் சத்திரத்தில் சாப்பாடு தயாராகத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது.
தெருவில் சிறுவர்கள் பாக்குக் கொட்டையை( கோலி விளையாட்டு) வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இப்போதைய பசிக்கு சாப்பாடு காசு கொடுத்து வாங்கியாவது சாப்பிட நினைத்தார் காளமேகம்.
விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து,
“தம்பீ, சோறு எங்கப்பா விக்கும்?” என்று பசி மயக்கத்தில் கேட்டார்.
அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே“சோறு தொண்டைலே விக்கும்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் விளையாட ஓடி விட்டான்.
சிலேடை மன்னன் என்று புகழ் பெற்ற காளமேகத்திற்கு, அந்தச் சிறுவன் சிலேடையாக சொன்ன பதில் வியப்பைத் தந்தது. பசியையே மறந்தார்.
சமையல் அறை பக்கம் கிடந்த ஒருகரித் துண்டை எடுத்துக்கொண்டு, காத்தான் சத்திரத்தின் சுவற்றில்
‘பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகை’ என்று எழுதினாராம்.
*உப்புமா குத்துமா?
குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை.
அருகில் இருந்தார் கி.வா.ஜ.
“உப்புமாவைத் தின்ன முடியலையா? உப்புமா தொண்டையைக் குத்துகிறதா” என குழந்தையை அதட்டினார் அம்மா.
கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ”ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்” என்றார்.
ஏன் என்று அந்த அம்மா கேட்டார். உப்புமா ‘ஊசி இருக்கிறது’ என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
******************