அரசன் ஆனையும் பூனையும் தின்பவன்

அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அரசபைக்கு வந்தார்.

சிம்மாசனத்தில் மன்னர் அமர்ந்திருந்தார். அடுத்து சுற்றில் அமைச்சர்களும், அடுத்தடுத்து சேனாதிபதிகளும் அமர்ந்திருந்தனர்.

சிம்மாசனத்தில் சிங்கம் போல அமர்ந்திருந்த மன்னன், பாட வந்த புலவரைப் பார்த்து, “ வாரும் புலவரே! இன்பத் தமிழால் இனிய பாடல் பாடுங்கள்! யாமும், அவையோரும் கேட்டு மகிழ்கிறோம்!” என்றார் பூரிப்பாக.

புலவர் மன்னரை வணங்கி,“ சீரும் சிறப்புமாக நாடாளும் நம் மன்னர் ஆனையும் தின்பார்; பூனையும் தின்பார்’ என்றார்.

புலவர் இப்படி சொன்னதும் மன்னருக்கு கோபம் கொப்பளித்தது. மீசை துடித்தது.

அவையில் இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி!

“நிறுத்தும் புலவரே! இதுதான் ஒரு மன்னவனை புகழ்ந்து பாடும் லட்சணமா?”என்றார் கடும்கோபத்துடன்.

“ மன்னிக்க வேண்டும் மன்னரே! இது இன்பத் தமிழின் புலமை விளையாட்டு. நீங்கள் தவறாக பொருள் புரிந்துகொண்டீர்கள்! கோபத்தில் இருக்கிறீர்கள்.” என்றார் பணிவுடன் புலவர்.

“ இப்போது நீங்கள் சொன்னதற்கு வேறு என்ன பொருள் இருக்கிறது. நொடியில் விளக்கம் தராவிட்டால், அடுத்த நொடி உன் தலை இங்கே உருளும்” என்று மன்னர் கர்ஜித்தார்.

அதற்குப் புலவர், “மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க”என்றார்.

புலவர் சொன்ன விளக்கத்தைக்கேட்டு ஆச்சரியமடைந்த மன்னர், புலவரைப் பாராட்டி,பரிசும் கொடுத்து அனுப்பி வைத்தார்.



*வாயிலில் போடுவேன்!



கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், “சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்.



அதற்கு அவர், “ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை நீங்கள் நினைப்பது போல வாயில் போட மாட்டேன். அதை வாயிலில்தான் போடுவேன்” என்றார்.



அப்படி அவர் சொன்னதும் அதை கேட்டஅங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

விளக்கம் அளித்தார் கி.வா.ஜ.

“ சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?” என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



*****************

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (5-Feb-16, 9:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 101

மேலே