ஓர் நாள் ஒரு பொழுது

எனக்குத் தெரியும் 
வழக்கத்தை விட ...நீ 
சீக்கிரம் எழுந்துவிடுவாயின்று.. 

காலையிலே நீ 
கிளம்பவேண்டும் 
தவிர்க்கவியலா பயணம் 
நானும் ... 
உடன்வரமுடியா தருணம்... 

பார்த்துப் பார்த்துச் 
செய்து கொண்டிருக்கிறாய் 
ஒவ்வொன்றாய்... 

காலை..மதிய உணவை 
தயார் செய்துவிட்டாய் 
நான் ...எழுவதற்குள்... 

சூடான டீயுடன் எழுப்புகிறாய்.. 
நான் சோம்பல் முறித்து எழ 
சில நாழிகையாகும்.. 
குழந்தைகளும் அவ்வாறே... 

பரபரவென 
நகர்ந்த நொடிகளுள் 
நீ புதைந்து போக 
ஒரு வழியாய் கிளம்பிவிட்டாய்... 

பால் சூடாயிருக்கு 
ஆறினதும் 
பிள்ளைகளுக்குக் கொடுத்திடுங்க... 

மறக்காம 
கரண்ட் பில்..போன் பில் 
கட்டிடுங்க.. 

குழந்தைகளை 
ஸ்கூல் வேணுவரை 
கூடப்போயி அனுப்பிடுங்க 

மதியம் சாப்பிட வரும்போது 
காக்காவுக்குச் சோறு வச்சிடுங்க 
பாவம் வந்து வந்து 
கத்திக்கிட்டிருக்கும்... 

அப்புறம் 
சிலிண்டர் வந்தா 
வாங்கி வச்சிடுங்க... 

ஒரு எட்டு ரேசன் போயி 
ஏதாவது போடுதாங்களான்னு 
பார்த்திடுங்க... 

சாயங்காலம் சீக்கிரம் வந்து 
குழந்தைகளை 
கொஞ்சம் கவனிச்சுக்குங்க.. 

ஏதாவது சாப்பிட 
வாங்கிக் கொடுங்க... 

நான் எப்படியும் 
இரவு வந்திடுவேன்... 

எனப் பல அழைப்புகள் 
உன்னிடமிருந்து அலைபேசிவழி 
நீ சென்ற பின்னும்... 

நீ எங்கோ பயணிக்கிறாய் 
உன் நினைவுகளை 
இங்கு நிறுத்தி... 

ஓர் நாள் ..ஓர் பொழுது 
பிரிவிற்கே துடிக்கிறாய் 
நீ...பலவாறு.. 

ஓர் நாள் 
எனைவிட்டு நீயும் 
உனைவுட்டு நானும் 
நிரந்தரமாய் 
பிரிய நேர்ந்தால்...? 

என்னவளே...மரணம் கூட 
நம்மைப் பிரித்ததாய் 
மகிழக்கூடாது... 

மரணத்தை வென்றும் 
என் உணர்வோடு நீயும் 
உன் உணர்வோடு நானும் 
பயணிப்போம்..பலயுகங்கள்.. 
காதல் மொழி கதைத்தபடி... 
-------------------------------------------------------- 
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (8-Feb-16, 8:30 pm)
பார்வை : 386

மேலே