எதிர் வீட்டு மாரியண்ணன் ஆடு

எதிர் வீட்டு மாரியண்ணனின் ஆட்டை
அவர் மடியிலும், தோள்களிலுமே பார்த்திருக்கிறேன்,
ஊட்டி ஊட்டி அவர் வளர்த்தாலும்
எக்கி நின்று மேயும் அதன் சுபாவத்தில்
என் வீட்டுச் சந்தடி சோதித்து
வராந்தா செடிகளில் வந்து வாய்வைக்கும்,
அன்று என் அப்பாவின் கண்களுக்கு, ஆடும்
கையின் மரக்கட்டைக்கு, ஆட்டின் காலும்
வசமாக மாட்டிக்கொண்டதால்
பலமான காயமாகிவிட்டது
முந்தைய பிராது நிறைய இருந்ததால்,
மாரியண்ணன் ஆட்டைத்தான் கடிந்துகொண்டார்.
முன்தொகை கொடுத்து விலை பேசிப்போன
கறிக்கடை பாய் வந்த போது
கால்காயத்தைக் காரணம் காட்டி
முன்தொகையைக் கொடுத்து
வேறொரு நாள் வரச் சொல்லித் திருப்பிவிட்டார்
ஆட்டின் கால் காயம் குணமான தகவல் தெரிந்து
கறிக்கடை பாய் தானே வந்தபோது
அவரையும் பார்க்கவில்லை
அவர் ஓட்டிச் சென்ற தன் ஆட்டையும் பார்க்கவில்லை
வீட்டுக்குள்ளிருந்த மாரியண்ணன்.

எழுதியவர் : ஆண்டன் பெனி (9-Feb-16, 4:47 pm)
பார்வை : 97

மேலே