ஸ்ரீகாந்த் சரியாக சொன்னான்

ஸ்ரீகாந்த் சரியாக சொன்னான்...!
-------------------------------------------------
சாதனா! தனியார் அலுவலகத்தில் ஒரு நல்ல பதவியில் வேலை செய்கிறாள்.... இவளுக்கு வயது 24.... மிகவும் அழகாய் இருப்பாள்... ஆனால் கர்வம் கிடையாது... அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார்... இவளுக்கு ஒரே தங்கை சுப்ரியா .... அவளுக்கு வயது 22....இப்பொழுதுதான் படித்து முடித்தாள்... நல்ல வேலை தேடி வருகிறாள்... அம்மா பள்ளியில் ஆசிரியை... இன்னமும் போய்கொண்டிருக்கிறாள் ......
"சாதனா! உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா? " அம்மா மெதுவாக கேட்டாள்..." போகட்டுமேமா! இப்பதான் நல்ல வேலை கிடைத்திருக்கு. கொஞ்சம் பணம் சேர்ப்போம்... சுப்ரியாவும் அடுத்தது இருக்கா! அவசரப்படாதே.... 2 வருஷமாவது போகட்டும்.... நீ மனசை போட்டு அலட்டிக்காதே..." ரொம்பவும் பவ்யமாய் பதிலளித்தாள் .... அம்மாவிற்கு கொஞ்சம் சீக்கிரம் முடித்தால் நன்றாய் இருக்கும் என நினைத்தாள்...ஆனால், " சாதனா கூறுவதிலேயும் ஒரு நியாயம் இருக்கு... பணமும் வேண்டுமே! " மனதை உறுதி படுத்திக்கொண்டாள்....
ஒன்றரை வருஷம் ஓடியது சாதாரணமாக.... சுப்ரியாவிற்கும் ஏதும் நல்ல வேலை கிடைக்காததால், அவள் பேஷன் டிசைன் கிளாஸ் சென்றாள்.. இப்பொழுது அது சம்மந்தமான வேலை தேடுகிறாள்...
இரண்டு மாதங்கள் முன் ஒரு வரன் வந்தது... ஆனால், சாதனா இப்பொழுது வேண்டாம் என்று கூறி விட்டாள்.. சாதனா கொஞ்சம் சிக்கனம்தான்... ஆடம்பர செலவுகளை கட்டுப் படுத்தி கொஞ்சம் பணம் சேர்த்தாள்... வாழ்க்கை சக்கரம் ஓடியது...
இன்று, ஸ்ரீகாந்த் இவளை பெண் பார்க்க வருவதாய் போன் வந்தது.... அவன் மைசூரில் வேலை பார்க்கிறான்.... இரண்டே பிள்ளைகள்.. பெரியவருக்கு கல்யாணம் ஆகி விட்டது... பெற்றோர் இருவரும் பெரியவரோடு இருக்கிறார்கள்...
அம்மாவிற்கு இந்த வரன் நல்லதாய்தான் பட்டது....
மாலை 5 மணி இருக்கும் ஸ்ரீகாந்த், அவன் அப்பா, அம்மா , அண்ணன் வந்தனர்.... சாதனா ஸ்ரீகாந்திடம் பேசவேண்டும் என்று கூறினாள்... இருவரும் தனியாக சென்று பேசினர்.. ஸ்ரீகாந்த் குடும்பம் சாதனாவின் சித்தப்பாவிற்கு தெரிந்தவர்கள்தான்....
" சாதனா ! சொல்லு... என்ன பேசணும்... என்னை பற்றி தெரியனுமா? " மெதுவாய் ஆரம்பித்தான் ஸ்ரீகாந்த்...
"உம! சுருக்கமா சொல்லிடறேன்... எங்கள் அப்பா எனக்கு 5 வயசு இருக்கும் போதே போய்ட்டார். அம்மா தான் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தா... இப்போ நான் நல்ல வேலையில் இருக்கிறேன்... முடிந்தவரை சேர்த்திருக்கிறோம்... ஆனால் , கடைசிவரை அம்மாவிற்கு பணம் வேண்டும்... அவளால் முன் போல் வேலைக்கு செல்வது இனி கஷ்டம்... கொஞ்சம் உடம்பு படுத்தறது....
சுப்ரியா வேற இருக்கா... அவளுக்கும் இன்னும் வேலை கிடைக்கலே... உங்க கிட்ட ஒரு உதவி கேட்கலாமா?" சாதனா கேள்வியோடு முடித்தாள்.
"" கேளு! " ஸ்ரீகாந்த் சொன்னதை தொடர்ந்து சாதனா " நான் என் கல்யாணத்தை தள்ளி போடலாம்னு நினைக்கிறேன்... அம்மா கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டா. அவள் மனசும் கஷ்டப்படும்... உங்களுக்கு விருப்பம் இருந்தால் , சுப்ரியாவை கல்யாணம் செய்துக்கறீங்களா? சாரி.. என்னை தப்பா நினைக்காதீங்க... ஒன்றும் கட்டாயம் இல்லை... என் குடும்ப சூழல் இதுதான்...உங்களுக்கு அவளை பண்ணிக்க சம்மதம் என்று நீங்கள் சொன்னால் நான் அம்மாவை சமாதனப் படுத்திடுவேன்... நான் இந்த குடும்பத்தை பார்த்துப்பேன்..." முடித்தாள்...
" சாதனா! நீ சொல்றது உனக்கு நல்லா இருக்கலாம்.. அதை நான் பாராட்டறேன்... உன் குடும்பத்தின் மேலே உனக்கிருக்கும் ஈடுபாடு இது... சந்தோஷம்.. ஆனால், எனக்கென்று ஒரு ஆசை இருக்கு.... உன் போட்டோ பார்தேன்.. என்னமோ உடனே மனதில் ஒரு மின்னல் நீதான் என் மனைவி என்று தோன்றியது.... உன்னை இதோ நேரில் பார்த்ததும் முடிவு செய்துவிட்டேன் நாம் இணைவோம் என்று... இதில் உனக்கு என்ன தடை? " கட்சிதமாய் தன மனதில் பட்டதை சொல்லி முடித்தான் ஸ்ரீகாந்த்.
" உங்கள் மனதை நோகடிக்கனும்னு நான் பேசலே .. ஆனால் என் நிலைமையை விளக்கினேன்... எனக்கு இப்போ திருமணம் ஆனால் என் குடும்பம் கஷ்டப்படும்... அதனால் வேண்டாம்.. நான் பிடிக்கவில்லை என்று கூறிவிடுகிறேன்" முடிவை சொல்வதுபோல் சொன்னாள் சாதனா
" ஏன் வேண்டாம் என்று சொல்றே? என்னை பிடிக்கலையா? உண்மையை கூறு..." ஸ்ரீகாந்த் கேட்க , வெட்கத்தில் சாதனா மேனி சிலிர்த்ததை ஸ்ரீகாந்த் உணர்ந்தான்....
"இல்லை.. பிடித்திருக்கு !" மெல்லிய குரலில் சாதனா
"அப்போ ? போலியாக நான் உன் தங்கையை கல்யாணம் செய்துக்கணுமா? உனக்கு இது தப்புன்னு தோணலே.... பிடிக்கலேன்னு சொல்லு ஆனால் உன் விருப்பத்திற்காக வேறு வழியை நீ காண்பிப்பது தவறு சாதனா! இந்த எண்ணத்தை விட்டிடு.... நீ வேலைக்கு போறே... கட்டாயம் மைசூருக்கு மற்றம் கிடைக்கும் ... இல்லையென்றால் நான் மாற்றல் வாங்கிக்கொள்கிறேன்.... நீ உன் சம்பளத்தில் என்ன வேண்டுமோ உன் அம்மாவிடம் கொடு... இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது... எனக்கு தங்கை இருந்தால் பார்த்துக்க மாட்டேனா? அதுபோல் சுப்ரியாவை பார்த்துப்போம்... நீ கவலை படாதே...மனசிலே உறுதி கொண்டு வெளியே வா! " மிக விளக்கமாய் பேசினான் ஸ்ரீகாந்த்...
சாதனா....சிலையாகவே நின்றாள்.. இரண்டு நிமிடம் ஆனதும் சுதாரித்துக்கொண்டு வெளி வந்தாள்.. இவள் முகம் கொஞ்சம் கலவரமாய் தான் காணப்பட்டது.... ஸ்ரீகாந்த் , தன பெற்றோரிடம் தனியே பேசினான்.... இவள் ஒன்றும் அம்மாவிடம் பேசவில்லை... தான் ஸ்ரீகாந்திடம் பேசியதை நினைத்து வருத்தப்பட்டாள்.. தவறு என உணர்ந்தாள்..
ஸ்ரீகாந்த் அம்மா நாளை போன் செய்வதாய் கூறி சென்றனர்....
சாதனாவிற்கு தான் கட்டாயம் ஸ்ரீகாந்திடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என நினைத்தாள்..
மறுநாள் போன் வந்தது.... நிச்சயதார்த்த நாள் குறிக்கப்பட்டது....
இரண்டு நாள் கழித்து ஸ்ரீகாந்த் இவர்கள் வீட்டிற்கு தன அண்ணனுடன் வந்தான்....
சாதனா மன்னிப்பு கேட்டாள்....
ஸ்ரீகாந்த் சிரித்தான்....
நன்றியுடன்
மைதிலி ராம்ஜி