பசியென்ற நெருப்பும் பதினெட்டு நொடிகளும்

...............................................................................................................................................................................

ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்காக பூனாவிலிருந்து தஞ்சை மாவட்டத்திலுள்ள பூவிலங்கு கிராமத்துக்கு வந்திருந்தாள் மாலி. இந்த கிராமத்தை இவள் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள்: ஒன்று இவள் உறவுப் பையன் தனஞ்செயன். விவசாயத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவன். டென்மார்க், சிட்னி, சிகாகோ போன்ற நகரங்கள் சூட்கேஸ் நிறைய டாலரை வைத்துக் கொண்டு வா வா என்று வரவேற்ற போதிலும் அதையெல்லாம் விடுத்து பன்னிரெண்டாயிரம் மட்டுமே மக்கள் தொகையுள்ள பூவிலங்கு கிராமத்துக்கு விரும்பி வந்தவன்... இரண்டாவது, இவன் வந்தபிறகு கிராமம் முன்னேறியிருக்கிறது- பாரதப் பிரதமரிடம் மாதிரிக் கிராமம் என்ற பாராட்டும், விருதும் வாங்குமளவு..!

ஊருக்குள் நுழைந்தவுடனே ஒரு பெரிய போர்வையாய் போர்த்தியது இதமான குளிர்..! காரணம், சுத்தமான மண் சாலையும் அதன் இருமருங்கும் அடர்ந்து நின்ற வேப்ப மரங்களும்..!

வேப்ப மரங்களில் ஆங்காங்கே சிவப்பு சிவப்பாய் தெரிந்தவற்றை உற்று நோக்கினாள்... கிளிகளின் அலகு.. ! !

வேப்ப மரங்களை விலக்கி, பார்வையைத் தாவ விட்டால் வாழைக் கொல்லை தெரிந்தது. அதைத் தாண்டி வீடுகளும் தெரிந்தன....

கிட்டத்தட்ட எல்லாமே மாடியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள்..! சூரிய மின்சாரம் எல்லா வீடுகளிலும் இருந்தது. வீட்டைச் சுற்றித் தோட்டம், மாடியிலும் தோட்டம்..! தெருக்கள் சுத்தமாக இருந்தன.

கிராமத்தில் கோயில்கள்தாம் அதிகமாகத் தென்படும்.. இங்கு நூலகங்கள், பள்ளிகள் மற்றும் கம்யூட்டர் சென்டர்கள் அதிகம் தென்பட்டன. படிப்பு சதவீதம் தொண்ணூறைத் தாண்டுகிறதாம்.

தனஞ்செயன் வீடு வந்து விட்டது..!

வீடு பெரிதாக இருந்தது. பண்ணை வீடு.. வீட்டின் ஒரு பகுதி பழைய தேக்கு மரக் கட்டமைப்பிலும், தஞ்சை ஓவியங்களுடனும் காட்சியளித்தது. இன்னொரு பகுதி முழுக்க முழுக்க நவீன மயம்..!

தனஞ்செயனின் அண்ணி, மாலியை வரவேற்றாள். தனஞ்செயன் வயலுக்குச் சென்றிருந்தான். பரஸ்பர நலன் விசாரிப்புகள் முடிந்தன..

தனஞ்செயன் வீட்டு இட்லி இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருந்தது. மில்லில் உமி மாத்திரம் தீட்டப்பட்ட புழுங்கலரிசி சிவப்பு வண்ணத்தில் இருக்குமாம்.. எக்கசக்க சத்தாம்..!

அன்று முழுதும் ஓய்வெடுத்துக் கொண்டாள் மாலி.

மாலையில்தான் தனஞ்செயன் வந்தான்.. கொக்கோகோலா நிற மேனி; கண்ணாடி அணிந்த முகம்.. உள் செருகாத எளிமையான பாண்ட், சட்டை, மோதிரம் போட்ட விரல்..!

மறு நாள் அதிகாலையிலேயே இரட்டை மாடுகள் பூட்டிய வில் வண்டி வந்தது.

காளைகளை அவ்வளவு நெருக்கத்தில் அப்போதுதான் பார்த்தாள் மாலி. இரண்டுக்கும் வெளிர் பழுப்பு நிற உடல்.. சின்னக் கொம்புகள்.. ஈச்ச நாரில் கோர்த்த மணிமாலையில் சங்குகள் இருந்தன. முழங்கால்களில் விளையாட்டு வீர்ர்கள் அணிவதைப் போன்ற கனத்த எலாஸ்டிக் பட்டைகள் தெரிந்தன – மாடுகளுக்கு அடி படாதிருக்க...! காளைகளின் மையிட்டதைப் போல் கருமை தவழும் உயிரோட்டமுள்ள கண்கள் மாலியை மௌனமாக உள்வாங்கின..

தனஞ்செயனும், மாலியும், இன்னும் சிலரும் வில் வண்டியில் புறப்பட்டார்கள்.

“ என்னென்ன பண்ணியிருக்கீங்க உங்க கிராமத்துல? ” கேட்டாள் மாலி.

தனஞ்செயனும் பெரியவரும் சொல்லிக் கொண்டு வந்தனர்.

“ இங்க மதுக்கடை இல்லே, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லே, திறந்த வெளியில் கழிக்கிறது இல்லே..
மனித மலத்தை உரமாக்கி வயலுக்குப் போடறோம். மனித மலத்திலிருந்து எரிவாயுவும் எடுக்கறோம்..
இயற்கை முறையில விவசாயம் செய்யறோம்.. தீட்டப்படாத மில் அரிசி சாப்பிடறோம்.. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எங்கேயும் கிடைக்கும்.. ஏரி, குளம், கண்மாய் எல்லாம் தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி வச்சிருக்கோம்.. முடிஞ்ச வரை மரம் செடி கொடின்னு நட்டு வச்சிருக்கோம்.. சூரிய மின்சாரத்தை முழு வீச்சில பயன்படுத்தறோம்... அவ்வளவுதான்..! ”

“ இதையெல்லாம் செய்யறதுக்குப் பணம்? ”

இப்போது தனஞ்செயன் சொன்னான்: “ இந்த கிராமத்துக்கு இந்தத் தேவை இருக்குன்னு சமூக வலைத் தளங்கள்ள அறிவிச்சேன். பண உதவி மட்டுமல்ல.. தொழில் நுட்ப உதவியும் கிடைச்சது..! ஒரு குழுவா வேலை செய்றோம்.. நன்கொடை கொடுத்தவங்க கேட்டாலும், கேக்காட்டி போனாலும் துல்லியமான வரவு செலவு கணக்குகளை அவங்களுக்கு அனுப்பி வச்சு நன்றி சொல்றோம்.... நேர்ல வந்து பார்க்கச் சொல்றோம்.. .. ரொம்ப முக்கியமான விஷயம்.. இந்த கிராம மேம்பாட்டுக்காக அவங்க நன்கொடை கொடுத்த தொகைக்கு வரிவிலக்கு வாங்கிக் கொடுத்தோம்..! இதுக்காக ரொம்ப மெனக்கெட்டோம்..! நமக்கு உதவி செய்ய வர்றவங்களை சும்மா விட்டுடக் கூடாது.. அவங்களுக்கும் ஒரு பலன் கிடைக்கணுமில்லையா? ”

“ நல்ல அணுகுமுறைதான்.. முட்டுக்கட்டை போடுறதுக்குன்னே சில ஆட்கள் இருப்பாங்க.. கவர்ன்மெண்ட்டும் அதிகாரிகளும் ஒத்துழைக்க மாட்டாங்க.. இதையெல்லாம் மீறி எப்படி செஞ்சீங்க? ”

“ ஆரம்பத்துல அப்படித்தான் இருந்தது.. நிறையச் சிரமப்பட்டேன்.. ஆனாலும் மாலி.. இது வேற யுகம்.. இப்ப நமக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ் எண்ணம், வெளிப்படையான அணுகுமுறை, குழுவா வேலை செய்யற திறமை.., தெளிவான பார்வை, நல்ல தகவல் தொடர்பு.. இதுவெல்லாம்தான்.. இன்னும் யார் முதல்ல, யார் ரெண்டாவதுன்னு போட்டி போட முடியாது.. தனித்தீவாயும் இருக்க முடியாது..! ”

“ ஆனா... ”

“ மாலி.. இந்த ஊருக்கு ஒரு சரித்திரம் உண்டு.. பசி பட்டினியோட பரிமாணத்தை நேர்ல பார்த்த ஊர் இது..! எங்க ஊர் அரசியல்வாதியோட அப்பா அந்தப் பழைய கால சம்பவத்தை நேரில பார்த்தவர்..! அப்ப அவர் சின்ன வயசுதான்.. என்ன, ஏழெட்டு வயசிருக்கலாம்.. ஆனாலும் அவரோட தாத்தாவோட பேயறைஞ்சு நின்ன அந்த முகம் அவருக்கு அவ்வளவு சீக்கிரம் மறக்கலே.. அந்தக் கதையை அவர் தன்னோட மகனுக்கு நல்லாவே பதிய வச்சிருக்கார்.. இப்படி மூணு நாலு தலைமுறையா ஓடுற கதை அது... அந்தக் கதை தந்த உணர்ச்சி இங்கே உள்ளவங்க ரத்தத்துல இருக்கு..! அது தவிர எல்லா வசதியும் இங்கேயே இருந்தது.. நான் முன்னெடுத்துச் செஞ்சேன்.....! முதல் இழு என்னோடது.. கிடுகிடுன்னு தேர் புறப்பட்டுடுச்சு... ”

கழனி வந்து விட்டது..

வண்டிப்பாதை நடைபாதையாக மாறியது.. கால்வாய்கள் சற்றுப் பருத்த கரைகளோடு வயலின் நடுவில் பிரிந்து பிரிந்து பாய்ந்தது..

கண்ணுக்கெட்டிய தூரம் பச்சை பசேல்தான்.. ஒருபுறம் நீல வானம் எல்லையாக இருந்தது. இன்னொரு புறம் தென்னை மரங்கள் அணிவகுத்து எல்லையிட்டன. பிளாட் போட்ட அடையாளமாக எல்லைக் கற்கள்? இல்லவே இல்லை...! ! !

கால்வாய்க் கரைகளில் ஆங்காங்கே நின்ற குற்று மரங்களின் கிளைகளில் தூளி கட்டி குழந்தை தூங்கியது..! கழனியெங்கும் கூச்சலைக் கிளப்பியபடி சின்னப் பிள்ளைகள் ஓடியாடிக் கொண்டிருந்தனர்..
நிலங்களினூடே மூன்றுக்கு மூன்று அடி என்ற அளவில் சின்ன மறைப்புகள் கூரையோடு தென்பட்டன.. கழிவறைகள்..! ! பம்ப் செட் அறைக்குப் பக்கத்தில் பெரிய தொட்டியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கான குழாய்கள் தெரிந்தன.

நீள முதலையின் நடுமுதுகு போல கரடுமுரடான வரப்பு..! ஆளைத் தள்ளி விடும் காற்று..!

தனஞ்செயன் இது அம்பாசமுத்திரம்.. அது சீரகச் சம்பா.. என்று நெல் வகைகளை சொல்லிக் கொண்டே வந்தாலும் மாலிக்கு நெற் கதிரை சோளக் கதிரிலிருந்து பிரித்தறியத் தெரிந்ததே ஒழிய மற்றபடி அம்பாசமுத்திரமும் தெரியவில்லை.., ஆடுதுறையும் தெரியவில்லை..!

ராணுவ வீர்ர்களைப் போல் அணிவகுத்து நின்றன நெற்பயிர்கள்..! பக்கத்தில் சென்று பார்த்தாள்.. மார்கழி மாதப் பனி, பயிரின் தாளில் இன்னும் திரண்டிருந்தது. பனியில் தூரத்து தென்னை மரத்தின் முழு உருவமும் தெரிந்தது....! பச்சைத் தாள்களைத் தாண்டி பொன்னிறக் கதிர்கள் பளபளத்துக் காணப்பட்டன. கதிர்கள் ஒரு பக்கமாக தரை பார்த்து தலை குனிந்திருந்தன. அப்படியே மணமகனை நோக்கும் பருவப் பெண்ணின் சாயல் ..!

ஒரு இளைஞர் ஆட்களைக் கணக்கெடுத்து வயலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். வயலில் இறங்கியவர்களைப் பார்த்து மாலி திகைத்துப் போனாள்..

விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் காலில் பூட்ஸ், கையில் சொரசொரப்பான கையுறை, தலையில் தொப்பி, பச்சை ஓவர்கோட் அணிந்திருந்தனர். ஒரு பெண்மணி காதுக்கு வந்து விட்ட தொப்பியை வெட்கத்துடன் சரி செய்தார். வயலில் வேலை செய்தவர்களுள் பள்ளிப் பிள்ளைகளும் இருந்தனர்.

“ இதென்ன, இவங்க படிக்கப் போகலையா? ” மாலி கேட்டாள்.

“ இல்லே, இல்லே, இந்த கிராமத்துல பள்ளிக்கூட நேரம் மதியம் ரெண்டில இருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும்.. வாய்க்கால்ல கழிவறை கட்டிக் கொடுத்து தண்ணி வசதி பண்ணி வச்சப்புறம் இளந்தாரிப் பொண்ணுங்க அம்மாவோட வயலுக்கு வந்துடுறாங்க..... பொண்ணுங்க வந்தா பசங்களும் வரத்தானே செய்வாங்க? பூட்சு, தொப்பின்னு கொடுத்து இவங்களை வயல்ல இறக்கப் பழக்கப்படுத்தினோம்... காலங்கார்த்தால வந்த இந்தக் கூட்டம் கூலி வாங்கிட்டு பன்னெண்டு மணிக்கு குழந்தை குட்டிங்களோட கிளம்பிடும்..! பதினொன்றரை மணிக்கு இன்னொரு கூட்டம் வரும்.. அவங்க ஆறுமணி வரைக்கும் இருப்பாங்க.. அவங்களோட குழந்தைங்க வர மாட்டாங்க.. அதனால இந்த சத்தமிருக்காது... ”

“ வேற எந்த சத்தமிருக்கும்? ”

“ பறவைகளும் குரங்குகளும் வந்துடும்.. நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ... ”

“ ஆரம்பத்துல இருந்தே இங்கே பள்ளிக்கூட நேரம் இதுதானா? ”

“ இல்லே.. ஆரம்பத்துல காலை ஒன்பது மணியிலேர்ந்து நாலு மணி வரைக்கும் பள்ளிக்கூடமிருந்தது... என்ன ஆச்சுன்னா இது விவசாயக் கிராமம்.. சூரியன் மறையற வரைக்கும்தான் வயல்ல வேலையே..! அதுக்கப்புறம் பெத்தவங்க உஸ் அப்பான்னு வீட்டுக்குப் போனா பிள்ளைங்க டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு ஒரே அடியில பத்து பேரை அடிக்கற ஹீரோவையும் விதம் விதமா துணி போட்டு டூயட் பாடுற ஹீரோயினையும் காப்பி அடிச்சு யதார்த்தம் புரியாம இருந்தாங்க..! இதை உடைச்சு அவங்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்க நினைச்சோம்.. பள்ளி நிர்வாகத்தோட பேசி நேரத்தை மாத்தினோம்.. இப்ப சின்னப் பிள்ளைங்க வயல்ல விளையாடுறாங்க.. பெரிய பிள்ளைங்க அம்மா அப்பாவுக்கு உதவி செய்றாங்க.. கல்லூரியில படிக்கிறவங்க பெத்தவங்க பிரச்சினையை தீர்த்து வைக்கிறாங்க...! ”

“ என்னது, தீர்த்து வைக்கிறாங்களா? ”

“ ஆமா, அனந்தகண்ணன்னு ஒரு பையன். அவங்க வயல் பள்ளமான பகுதிங்கறதால போன தடவை நெல்லுப் பயிர் வெள்ளத்துல மூழ்கிடுச்சி.. அப்பா தற்கொலை பண்ணிக்கப் போயிட்டார்.. மகனுக்கு ஒரு விவரம் தெரிய வந்தது- அதாவது சீனாவோட மஞ்சளாறு இப்படித்தான் அவங்க ஊர் நெல் வயலை மூழ்கடிக்கும்.. அப்ப அவங்க என்ன செய்றாங்கன்னு துருவினான்.. ஒரு வித மீனை வயல்ல வளர்த்து நஷ்டப்படாம தப்பிக்கிறாங்கன்னு தெரிஞ்சிட்டான்.. அந்த மீன் முட்டைகளை ஆர்டர் பண்ணி மொரிஷியஸ் போய் வாங்கிட்டு வந்தான்.. வயல்ல வளர்த்தான்.. பயிரை சாப்பிட்டு என்னவோ ஜெல்லி மாதிரி வளர்ந்தது மீன்..! ! சாப்பிட்டா காளான் ருசி ! ! ரெண்டு மாசம் கழிச்சி ஐஸ்ல பேக் பண்ணி சென்னையில ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்ட்டுக்கு மொத்தமா வித்துட்டான்.. நெல்லு வித்தா என்ன மகசூல் வருமோ, செலவு போக அதே லாபம் கையில நின்னது..! ! அப்பாவுக்கு பிள்ள பெருமை பிடிபடலே....! அதோ பார்.. அந்த வயல்தான்.. கொஞ்ச நாள் மக்க வச்சுட்டு இப்பத் திரும்ப பயிர் பண்றார்...! ”

“ ஏன், மீன் வளர்ப்பையே தொடர்ந்து செய்யலாமே? ”

தனஞ்செயன் சிரித்தான்.. “ எப்போதாவது பிரியாணி போட்டா நீ விரும்பி சாப்பிடுவே... எப்போதுமே பிரியாணி போட்டா..., உன்னால சீரணிக்க முடியாதில்லையா? நிலமும் அப்படித்தான்..! ”

“ ஆச்சரியம்..! நிலத்துல இவ்வளவு வித்தை செய்யலாமா? ”

“ நிறையச் செய்யலாம்..! வானம் பொழிகிறது, பூமி விளைகிறதுன்னு அன்னைக்கு வெள்ளைக்காரனைப் பார்த்து கட்டபொம்மன் சொன்னான்.. பூமி இருந்தாதானே கத்துவே-ன்னு இன்னைக்கு உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் எல்லாம் சவால் விடுது..! விடக்கூடாது..! எப்பவும் இல்லாத அளவு இப்பத்தான் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரணும்.. என்னதான் முன்னேறினாலும் பிளாஸ்டிக் அரிசி சாப்பிட முடியாது.. நாம என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்-கிறதை ஐரோப்பா ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு எவனும் அதிகாரம் பண்ணக் கூடாது.. ஒரு வெள்ளம் வந்தப்புறம் நம்ம நீர் மேலாண்மையோட லட்சணத்தை தெரிஞ்சிகிட்டோம்.. ஒரு பஞ்சம் வந்தாதான் வேளாண்மையை தெரிஞ்சிக்குவோம்னு அடம் பிடிச்சா தெரிஞ்சிக்க வாய்ப்பே கிடைக்காமலும் போயிடலாம்... என்ன, சரிதானே? ”

மாலி பள்ளிப் பிள்ளைகளை வயலில் பார்த்த அந்த நொடியே வாயடைத்துப் போயிருந்தாள்.

“ மாலி..! பக்கத்து ஊர்லயும் அறுப்பு நடக்குது.. அங்கேயும் போய்ப் பார்.. என் கார் இங்கதான் நிக்குது.. பாஸ்கர்..! அழைச்சிட்டுப் போப்பா..!

அங்கிருந்த ஒரு இளைஞனிடம் தனஞ்செயன் சொல்ல, மாலி காரில் பாஸ்கருடன் கிளம்பினாள்.

பூவிலங்கு தாண்டியதும், வழியெல்லாம் செத்தைக் குப்பையோடு பிளாஸ்டிக்குகள் நாற்றமடித்து, ஈ மொய்த்துக் கிடந்தது.

பக்கத்து ஊர் வயல்காரருக்கு இன்றுதான் அறுப்பு முதல் நாள் போலும். இரண்டு முழு செங்கற்களை வரப்பில் வைத்து அவற்றுக்கு மூன்று குடம் மஞ்சள் நீர் குளிப்பாட்டி, சந்தனமும் குங்குமமும் வைத்தனர். பிறகு இரண்டுக்கும் மஞ்சள் துணி சுற்றி பூமாலையிட்டனர். மஞ்சளையும் கழனி மண்ணையும் ஒன்றாகப் பிசைந்து பிள்ளையார் பிடித்து செங்கற்கள் முன் வெற்றிலையில் வைத்தனர். பிள்ளையாருக்கும் பொட்டிட்டு பூ வைத்தனர்..

விரித்த வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலைப் பாக்கு, காசு, செம்புக்குடம் தளும்ப பச்சைக் கற்பூரமும் துளசியும் கலந்த நீர் ஆகியவற்றை படைத்தனர். இன்னொரு பச்சைத் துண்டில் வரிசையாக கதிர் அரிவாள்கள் வைக்கப்பட்டிருந்தன. அரிவாள்களுக்கும் சந்தனம் குங்குமம் பூசி, செவ்வந்தி மலர்கள் இடப்பட்டிருந்தன. குலசாமிக்கும், மண்ணுக்கும், சூரியனுக்கும் தூபதீபம் காட்டி பூஜை முடிந்ததும் குலவையிட்ட பெண்கள் அரிவாளைக் கையிலெடுத்து, வலது காலை முன் வைத்து அறுப்பில் இறங்கினர்..

பூஜை நேரம் முழுக்க வயலின் சொந்தக்காரருக்கு கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது..!
அவரது மனைவி உணர்ச்சி வசப்பட்டவராக “ நெல்லு வீட்டுக்கு வந்துரும்... நெல்லு வீட்டுக்கு வந்துரும்... ” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கணவனும் மனைவியும் எலுமிச்சையால் திருஷ்டி கழித்து நாலா புறமும் எறிந்தனர்...

வயலில் வேலை செய்தவர்களுள் பெண்கள்தாம் அதிகமிருந்தனர்.. அதுவும் நடுத்தர வயதுப் பெண்கள்.. எண்ணெய் காணாத தலை கலைத்து விட்ட குருவிக்கூடு போன்று இருந்தது.. கைகளில் வெட்டும், கால்களில் சேற்றுப் புண்ணும்...

“ ஹோ” வென்று இருந்தது கழனி..! எங்கு ஒதுங்குவார்கள்? தாகமெடுத்தால் என்ன செய்வார்கள்..? அவரவர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்திருந்தார்கள். சில பல தூக்குவாளிகள் திட்டிலிருந்தன.

மாலிக்கு ஒன்று புரிந்தது- விவசாயத் தொழிலாளர்கள் இங்கு மண் பொம்மைகளாக நடத்தப்படுகிறார்கள்..

அது சரி, ஆண் தொழிலாளர்கள் குறைந்து போனது ஏன்?

பாஸ்கர் விளக்கினான்:

நடவு வேலை சாதாரணமல்ல.. நிறைய சக்தி தேவைப்படுகிற துறை.. தமிழகத்தில் அரசு நடத்தும் மதுக்கடைகள் விவசாயத் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவது மட்டுமல்ல.. சொங்கிகளாக்கியும் வைத்திருக்கிறது.. இப்பொழுது வேளாண்மை செய்பவர்கள் எல்லோரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.. தமக்குத் தெரிந்த வழிகளில் பயிர் செய்கின்றனர்.. அதில் சில பொழுது லாபம் வருகிறது.. சில பொழுது நட்டமும் ஏற்படுகிறது.. இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையில் விவசாயம் பெருமளவு அழிந்து போகலாம்..! ! !

ஒரு பெரியவர் மாலியின் காதோடு குசுகுசுத்தார்..

“ அரை வயித்து, கால் வயித்து கஞ்சி குடிச்சிட்டு வயலுக்கு வருவோம்.. வேலை வறுத்தெடுக்கும்.. பத்து மணி நேரம் வேலை பாத்தா கூலி கூட ஒழுங்காத் தர மாட்டாங்க... கிடைச்ச கூலியை வாங்கிட்டு குடிப் பழக்கம் இல்லாம இருந்தா வீட்டுக்குப் போயி ஒரு வேளை சாப்பாட்டை கறி மீனோட வயிறாற சாப்பிடலாம்.. குடிப் பழக்கம் இருந்தா கோவிந்தா.. நாமளும் பட்டினி; வீடும் பட்டினி..! ”

கொஞ்ச நேரத்தில் வயலுக்குச் சொந்தக்காரர் மாலியிடம் வந்தார்..

“ வேலையா பார்க்குறானுங்க வேலை? வயல் வேலைங்கிறது வேலை கிடையாது; அது வாழ்க்கை. கோழி கூவறப்போ எழுந்து வயலுக்குப் போகணும்; கோழி படுக்கறப்போ ஒரு பாட்டம் முடிக்கணும்.. ராத்திரிக்கு காவல் காக்கணும்.. என்னவோ ஆபிஸ் வேலை கணக்கா ஆக்கி வைச்சிருக்கானுங்க? ஒம்போது மணிக்கும் பத்து மணிக்கும் வந்துட்டு டாண்ணு அஞ்சு மணிக்கு போனா பொழப்பு வெளங்குமா? ஆபிஸ் வேலையில பண்ற தகிடுதத்தமெல்லாம் இங்கேயும் தொடங்கிட்டானுங்கோ.. கொல்லைக்குப் போறேன்னு சொல்றவன் அப்படியே காணாமப் போயி, கூலி குடுக்க கொஞ்ச நேரம் இருக்கும்போது படலுக்குள்ள ஓணான் புகுந்த மாதிரி வந்து ஒக்காந்துக்கறான்... உருப்படாததுங்க... ”

மாலி திகைத்தாள். ஒரு பரஸ்பர நம்பிக்கையில்லை.. நல்லெண்ணமில்லை, உழைக்கத் தயங்குகிறார்கள்.. உழைப்புக்குக் கூலி கொடுக்கவும் தயங்குகிறார்கள்.

கனத்த மனதுடன் அங்கிருக்கப் பிடிக்காமல் பாஸ்கரை அழைத்துக் கொண்டு பூவிலங்குக்கே திரும்பினாள் மாலி.

அங்கே தனஞ்செயனின் நிலத்தில் களத்து மேட்டில் கதிர்கள் குவியத் தொடங்கி யிருந்தன.. அறுப்பின்போது எழும் “ ஷ்ரிக் ஷ்ரிக்” சப்தமும் ஆட்கள் முன்னேறிப் போகும் சரசரவென்ற சப்தமும் கழனியெங்கும் எழுந்தது...

மணி ஒன்பதரை இருக்கும்...

ஓரிடத்தில் அஸ்பெஸ்டாஸ் தடுப்புக்கு இடையில் ஓரடி உயரம் மூன்று மீட்டர் நீளத்துக்கு செங்கல் திட்டு இருந்தது. அதற்கு இணையான இன்னொரு செங்கல் திட்டு விறகு செருகுவதற்கு வசதியாக இடைவெளியுடன் நீண்டது. சூளை அடுப்பு..! மாலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே குப்பைக் கூளங்களை பொலபொலவென்று அதில் நிரப்பினர்.. இடைவெளிகளில் ஓரிரண்டு சுள்ளிகளையும் வைத்தனர்.. வரிசை வரிசையாக அதன் மீது பானைகள் வைக்கப்பட்டதும் நெருப்பு மூட்டினர். நெருப்பின் வேகத்துக்கு இணையாக மக்களும் வேகமெடுத்தனர்.. மாலியின் கண் முன் நூறு பேருக்கு ராகிக் களியும், சுக்கு காபியும் தயாரானது. குழந்தைகளுக்காக ஒரு பாத்திரத்தில் பாலும் சூடாகிக் கொண்டிருந்தது...

இந்தப் பக்கம் தொட்டுக் கொள்ள ஏகப்பட்ட அயிட்டங்கள் மாட்டு வண்டியில் வந்தன.. வெங்காயம், வதக்கிய பச்சை மிளகாய், பாகல் வற்றல், கொத்தவரங்காய் வற்றல், எலுமிச்சை, மா, இஞ்சி மாங்காய் ஊறுகாய்கள்...

இரண்டு பெரீய்ய கலயம் நிறைய மோர்..!

என்ன ஒரு வாசம்..! ! ராகி வாசம்.. கூடவே சுக்கு வாசமும்..!

மாலிக்கே பசி மயக்கம் வந்தது.

அனைவரையும் சாப்பிட அழைத்தான் தனஞ்செயன்..

தூக்குச்சட்டியில் களியையும் மோரையும் பிசைந்து கூழாக்கிக் குடித்தனர் மக்கள். குழந்தைகள் வழிய வழிய பால் குடித்தனர்..! “மகராசன் நல்லா இருக்கட்டும் ” என்று மனமார வாழ்த்தினர்.

எத்தனை எளிதில் வாழ்த்துக்கள் கிடைக்கிறது தனஞ்செயனுக்கு..! உயிர் காக்கிற மருத்துவருக்குக் கூட இத்தகைய வாழ்த்துக்கள் கிடைப்பது அபூர்வம்....!

மாலி மனதுக்குள் பூவிலங்கையும் அந்த பக்கத்து கிராமத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். தமிழகத்தில் “ பக்கத்து கிராமங்கள்” ஏராளம்..! தனஞ்செயன்கள் அபூர்வம்..!

ஏதோ ஒரு நிராசையில் மௌனித்திருந்த மாலியைப் புன்முறுவலுடன் பார்த்தான் தனஞ்செயன்..

“ என்ன மாலி? ராகிக் கூழை சியர்ஸ் பண்ணிக் குடிக்கலாமா?

மாலி தயங்க, அவன் சிரித்தபடி ஒரு டிபன் பாக்ஸை அவள் முன் காட்டினான்.. சப்பாத்தி..!

மாலி சப்பாத்தியையும் கூழையும் மாறி மாறி வெட்டினாள். “ வயக்காட்டுலே எனக்கே இவ்வளவு பசிக்குதே.. இவங்களுக்கெல்லாம் எவ்வளவு பசிக்கும்? ” கண்கள் விரியக் கேட்டாள் மாலி.

“ மதியத்துக்கும் ஏதாவது உண்டா? ”

“ உண்டே..! கஞ்சி சோறு.. தொட்டுக்க இதேதான்.. வெங்காயம், ஊறுகாய்.. எக்ஸெட்ரா.. மூணு மணிக்கு அடுப்பை மூட்டிடுவோம்.. சோத்து வாசம் பரவ ஆரம்பிச்சதும் கூட்டமா குரங்குங்க வந்துடும்.. அதுங்களுக்கு அந்த தொட்டியில கஞ்சி ஊத்திடுவோம்.. சாப்டுட்டு போயிடும்.. நாலு மணிக்கு மேலே வகை வகையா பறவைங்க வர ஆரம்பிக்கும்... வாய்க்கால்ல விழுந்த தானியம் தண்ணியோட போய் அதோ அங்கே சேகரமாகும்.. அங்கே பூச்சி புழுவும் நிறைய இருக்கும்.. விவசாயத்துக்குக் கெடுதல் பண்ணாத பூச்சிங்க.. ரசாயண உரம் போடாததால வந்த பூச்சிங்க.. இந்தப் பறவைங்க அங்கே போய் போட்டி போட்டு கொத்தித் தின்னுட்டு களேபரம் பண்ணிட்டுப் போயிடும்...”

“ சரி, ஏதோ பழைய சம்பவம்னு சொன்னியே? என்ன அது? ”

மாலி கேட்க, சொல்ல ஆரம்பித்தான் தனஞ்செயன்..

“ நான் சொல்றது எம்பது வருஷத்துக்கு முந்தின கதை.. ! வெள்ளைக்காரன் ஆண்ட காலம்.. நாடு உணவு உற்பத்தியில தன்னிறைவு அடையல..! பசியும் பட்டினியும் நாட்டை உருக்கிட்டிருந்த அந்தக் காலத்துலேயும் இந்த தஞ்சை மண்ணு சோறு போட்டு தாயா வாழ வச்சிட்டிருந்தது..! ஆனாலும் தஞ்சையைத் தாண்டி சில கிராமங்கள்ல பசிங்கிற அரக்கன் தன்னோட கொட்டத்தை காட்டத்தான் செய்தான்...!

இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்துல நடந்தாம்பாடின்னு ஒரு கிராமம். காரணப் பெயர் அது.. நடந்தாம்பாடி ஜனங்களுக்கு நடந்தாத்தான் பொழப்பு.. அவங்க மேக்கால நடந்தா பூவிலங்கு.. வயக்காட்டு வேலை செஞ்சு வயித்தைக் கழுவிக்கலாம்.. கிழக்கால நடந்தா மல்லிப்பட்டினம்.. மீனவக் கிராமம். மீன் பிடிச்சு பொழச்சிக்கலாம்.. உள்ளூரு உவர் மண்ணு.. தென்னை பனை தானா விளைஞ்சி நிக்கும்...... அதுவும் நெடுநெடுன்னு உசரமா.. என்னவோ இந்திர சபையில ஊர்வசி, மேனகா ஆட்டத்தை பார்க்க போறா மாதிரி ஒரு ஜோரு.. சாதாரண ஜனம் மேல ஏறிட முடியாது.. காயும் சின்னச் சின்னதா காய்க்கும்.. ஆனாலும் அறுவடை முடிஞ்சு அடுத்த விளைச்சல் வர்ற வரைக்கும், மீன் குஞ்சுங்களுக்காக கடலுக்குப் போக தடை இருக்கற நாள்லேயும் நடந்தாம்பாடி கிராமத்து ஆம்பளைங்க தென்னை மேலேயும் பனை மேலேயுந்தான் குடித்தனம் நடத்துவாங்க.. அப்படி நெடுக்கா நடந்தாலும் அவங்க பொழப்பு ஓடிடும்..ஓகேயா? ”

“ ம்..ம்...! ”

“ இதே போல ஒரு அறுவடைப் பருவம்.. நடந்தாம்பாடியில பிள்ளைகளை கவனிச்சுக்கற தாய்மாருங்க, உடம்பு முடியாதவங்க, வயசானவங்க தவிர மத்தவங்க வயக்காட்டு வேலைக்கு பூவிலங்குக்கு வந்துட்டாங்க.. அந்த நேரத்துல பண்ணையாருங்க, கணக்குப் பிள்ளைங்க எல்லோரும் ஒரு முக்கிய வேலையா வெள்ளைக்கார துரையைப் பார்க்க பட்டணம் போயிட்டாதால, வந்த இடத்துல அவுங்களுக்கு வேளைக்கு சோறு கிடைச்சுதே ஒழிய கூலி கிடைக்கல..! கூலி வாங்காம வெறுங்கைய வீசிட்டு ஊருக்குப் போகப் பிடிக்காம போன ஜனம் அங்கேயே தங்கிடுச்சு..!

ஒரு வாரம் ஓடிப் போச்சு..!

நடந்தாம்பாடியில எஞ்சியிருந்த பெண்டு பிள்ளைங்களும் பெரிசுங்களும் போனவங்க ஏன் திரும்பலேன்னு விசனப்பட ஆரம்பிச்சாங்க.. அவங்க கவலைப்பட இன்னொரு விஷயமும் இருந்தது. வீட்டுல இருந்த வரகு, சோளம், உப்புக் கண்டம் எல்லாம் நாலைஞ்சு நாளையில தீர்ந்துடுச்சு..! ஆறாவது நாள்..! பொங்கித் தின்ன எந்த வீட்டுலேயும் குந்து மணித் தானியமில்லே..! பசி பொறுக்காம எறும்புப் புத்தை இடிச்சு, எறும்பு சேத்து வச்சிருந்த புத்தரிசியைத் தின்னுற நிலைமைக்குப் அவங்க போயிட்டாங்க..! ஏழாம் நாள் மரப்பொந்துக்குள்ள இருக்கற வெண்ணாந்தையை பிடிச்சித் தின்னப் போன சமயம்..

மாட்டுச் சலங்கை சத்தம் கேட்டது.!

ஒரு வழியா ஊரு ஜனம் கை நிறைய கூலி வாங்கிட்டு திரும்ப வந்திட்டிருந்தது..! வண்டி நிறைய கூடை கூடையா சீரகச் சம்பா, வாழைத்தாரு, வெத்தலை, காய்கறி, இருவாட்சின்னு மணக்க மணக்க வந்துட்டிருந்தது ஜனம்..!

கொஞ்ச நேரத்துல ஊரே கோலாகலமாயிடுச்சு..!

முத்துராசுன்னு ஒரு பயல்..! அவன் பெண்டாட்டி மரகதம் எட்டு மாசக் குழந்தைக்குத் தாய்.. முத்துராசுவோட வீடு ஒரு நீளக் குடிசை.. பதினெட்டுத் தப்படி குடிசை..! முத்துராசுவும் பூவிலங்குக்குப் போய் கூலி வேலை செஞ்சிட்டு திரும்பிட்டிருந்தான்..! அவன் வீடும் பசி பட்டினிக்குத் தப்பல..! அப்பப்ப குடிச்ச ஊத்துத்தண்ணி மரகதத்தோட உயிரைப் பிடிச்சி நிறுத்திட்டிருந்தது.. சாதாரணமாவே பசி வந்தா பத்தும் பறக்கும்னு சொல்வாங்க..! குழந்தைக்குப் பால் கொடுக்கற தாய்க்கு எப்பேர்பட்ட ராட்சசப் பசியெடுத்திருக்கும்? மரகதத்துக்கு பிள்ளை சிரிச்சா சோறு பொங்கற மாதிரி இருந்தது.. தலைமுடியப் பார்த்தா சோளக்கதிர் ஞாபகம் வருது..! வயிறு சேவல் கூவுற மாதிரி கூவுது.. பசி மயக்கம் கண்ணைக் கட்டுது.. கால் தள்ளாடுது.. குழந்தை வேளா வேளைக்கு நெஞ்சில உறிஞ்சிக் குடிக்கறப்போ உயிரைக் குடிக்கிற மாதிரி இருக்குது...!

இதுக்கு மேல தாங்க முடியாதுங்கிற நிலைமையில முத்துராசு வந்துட்டான். கிடைச்சதையெல்லாம் வீட்டுல இறக்கினான்.. பெண்டாட்டி தள்ளாடுறதைப் பார்த்து அவனே நெல்லு குத்தி அரிசியாக்கி உலையிலும் போட்டுட்டான்.. அதுக்குள்ளே பங்காளி ஒருத்தன் கூப்பிட்ட, வெளியே போயிட்டான்...

சீரகசம்பா சோத்து வாசம் அப்படியே மரகதத்தை அலைக்கழிச்சது..! நெஞ்சு முழுக்க அந்த வாசனையை ரொப்பினா..! ஏதோ ஜிவ்வுன்னு சொர்க்கத்துக்கு போனா மாதிரி..! அடக்கி வச்ச பசியெல்லாம் விஸ்வரூபம் எடுத்தது..!

ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரம்தான்.. சோறு வெந்துடும்..

குழந்தையை தூளியில போட்டு ஆட்டி தூங்க வச்சா..

அப்பாடா.. சோறு வெந்துடுச்சு..!

கரித்துணி எடுத்துட்டு சாதத்தை இறக்கப் போனபோது...

தீ...! ! !

வைக்கோல் படப்பை நெருப்பு பத்திட்டிருந்தது ஜன்னல் வழியா தெரிஞ்சது.. அந்த நெருப்பு அவ கூரைக்கும் தாவுறது தெரிஞ்சது..!

ஐயோ அம்மாடின்னு அலறி அடிச்சவ, கரித்துணி கையோட, சோத்து சட்டியை தூக்கிட்டு வெளியே ஓடிட்டா...! !

அந்த அடுப்பங்கரைக்கும் வாசலுக்குமான தூரத்துக்கு அவ எடுத்துட்ட நேரம் கிட்டத்தட்ட பதினெட்டு நொடி..!

அப்புறம் திரும்பவும் அவ வீட்டுக்குள்ள பாய்ஞ்சா...! ! தூளிக் குழந்தைய தூக்குனா..! ! அதுக்குள்ள உத்தரத்து மூங்கில் எரியிற கிடுகோட நடுவால விழுந்து அவளை வாசலுக்குப் போக விடாம தடுத்துடுச்சு..! ! !

பரிதாபமா தாயும் புள்ளையும் கருகி....

ஊர் ஜனங்க மரகதம் வீட்டுக் கூரை நெருப்பு பத்தினதை பார்த்திட்டுதான் இருந்தாங்க.. ! ! குய்யோ முறையோன்னு கூச்சல் போட்டுட்டு தண்ணியும் கையுமா அவங்களும் ஓடித்தான் வந்தாங்க.. ! ! வீட்டுக்குள்ளிருந்து ஒரு தாய் வெளியே ஓடி வர்றா.. குழந்தை இருக்க வேண்டிய கையில சோத்துப்பானை இருக்கு...! ! ! ! பார்த்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் ? ? ? இத்தனைக்கும் மரகதம் நல்ல பொம்பள; புருசன் மேலேயும் புள்ள மேலேயும் பிரியமானவ..!

ஊர் ஜனம், பசி ஒரு தாயோட புத்தியை பேதலிக்க வச்ச கொடுமைய நேர்ல பார்த்தது..! ஒரு வேளை மரகதம் கால் வயிறாவது சாப்பிட்டிருந்தா... சோத்துப் பானையை கீழே போட்டு கடாசிட்டாவது குழந்தையைத் தூக்கியிருப்பா, இல்லையா? ”

மாலி திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். வயற்காட்டில் காலையில் வயிற்றை கிள்ளிய உணர்ச்சி அவளுக்கு ஞாபகம் வந்தது... ஆனாலும் அது அரைமணி நேரப் பசிதான்..!

“ பசியோட கொடுமையை நேருக்கு நேர் ஒரு தடவை பார்த்துட்டா அது வாழ்நாளைக்கும் மறக்காது.. அப்படிப்பட்ட ஜனங்க இந்த ஊர்ல இன்னும் இருக்காங்க.. அவங்க பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும்தான் எனக்குப் பெரிய தூண்களா நிக்கிறாங்க... இதனாலதான் இந்த ஊர்ல மாற்றத்தை சுலபமா கொண்டு வர முடிஞ்சது... ”

தனஞ்செயன் முடித்தான்.

மாலி தீவிர சிந்தனையில் லயித்தாள். சில விஷயங்களை அனுபவித்த பின் தெரிந்து கொள்வது, தனஞ்செயன் குறிப்பிட்டதைப் போல நல்லதே அல்ல....! ! ! ! !

முற்றும்..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (10-Feb-16, 2:06 pm)
பார்வை : 522

மேலே