ஆற்றல் ஞாயிறு -- டாக்டர் கலாம் வாழ்வில் திருக்குறள் 15

குறள்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து (277)

பொருள்:

வெளித்தோற்றத்தில் குன்றிமணியைப் போல் செம்மையானவராகக் காட்சி தந்தாலும், அந்தக் குன்றிமணியின் மூக்கைப் போல கருத்த மனம் கொண்டவர்களும் உலகில் உண்டு.

குன்றிமணியின் மூக்கில் இருந்துதான், குன்றிமணி மரமாக முளைவிட்டு, பின் வளர்ந்து கிளை பரப்பும். அது போல மனிதனுடைய மனதில் இருந்துதான் சிந்தனைகள் முளைத்து, அது விரிந்து வாழ்க்கை ஏற்படுகிறது. வாழ்கையின் முளை தோன்றக் கூடிய மனம் தீமையில் நிறைந்து இருண்டு போனால் அங்கிருந்து வெளிவரும் எண்ணங்களும் தீயனவாகவே இருக்கும்.

விளக்கம்:

மகாபாரதத்தில் சலிப்புற்று போர்க்களத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்ற தவிப்போடு நிற்கிறான் அர்சுனன். ஆயுதங்களைக் கிழே போடுவதற்கான தனது நிலையை நியாயப் படுத்த முயற்சிக்கிறான். அதுபோல சில சமயங்களில் மனித நிலையும் ஏறத்தாழ அப்படியிருக்கும். உணர்ச்சி களுக்கு வசப்பட்டுவிடுகிற நாம், அவற்றை நியாயப் படுத்துவதற்கான தர்க்க வாதங்களிலும் முயற்சிகளிலும் இறங்கிவிடுகிறோம்.

தனது ஆணவத்தால் எடுத்துவிட்ட ஒரு முடிவை உறுதி செய்யும் வகையில், அதாவது தன்னுடைய நியதியை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வகை ஆதாரங்களையும் மனம் தேடும். தேடிக் கண்டு பிடித்து அதுவே சரி என்று சாதிக்கும். நம்மைப் பற்றி நாம் நம் மனதில் கொள்ளும் இத்தகைய பொய் வடிவம், நம் வாழ்க்கையில் நம் செயல்களுக்கும் மன அமைதிக்கும் ஆதாரம் போலத் தோற்றம் தரலாம். ஆனால் இது உண்மை இல்லை. நம்முடைய விதி நம்மை எவ்வாறு இருக்கச் செய்கிறதோ அவ்வாறுதான் நாம் இருக்கிறோம். நாமாகக் கற்பனை செய்துகொள்ளும் பொய் பிம்பத்தை வைத்து நாம் எதுவும் சாதிப்பதில்லை; சாதிக்கவும் இயலாது

எழுதியவர் : (14-Feb-16, 10:18 pm)
பார்வை : 72

மேலே