புனைவு என்னும் புதிர் மனதைத் திறக்கும் கலை --விமலாதித்த மாமல்லன்
புதிய களம், புதிய அனுபவம், கலையும் பிரச்சாரமும்:
சமீபத்திய பயணம் ஒன்றில் பக்கத்து இருக்கைக் குறுந்தாடி இளைஞர் கைபேசியில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அதில், பிரச்சாரகர் ஒருவர் உக்கிரமாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர் ஒலியைக் காதுக்குள் விட்டுக்கொண்டிருந்தார்.
இந்தக் காலத்து இளைஞருக்கு இவ்வளவு பக்தியா என்று வியப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் கண் மூடிப் பிரார்த்தித்தவர், மொபைலை அணைத்துவிட்டுத் தூங்கத் தலைப்பட்டார். இளைஞரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, என்னுடைய ஐபேடை எடுத்து, சேமித்திருந்த ஒரு கதையை மிக நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன். ஓரப் பார்வையில் இளைஞரும் படிப்பதை உணர முடிந்தது. ‘இந்தாருங்கள்’ என்று ஐபேடை நீட்டினேன். ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ‘பரவாயில்லை’ என்று, தலைப்பிலிருந்து படிக்க வசதியாக முதல் பக்கத்துக்கு நகர்த்திக் கொடுத்தேன். குறுந்தாடி மேலே நகர்த்திவிட்டு இரண்டாம் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.
படித்து முடித்துவிட்டு என்னிடம் கொடுத்தார். உள்ளூரப் பரபரப்புடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.
“புரியவில்லை”.
“இதில் என்ன புரியவில்லை?”
“ஒரு ஆள் வீட்டுக்குள் போகிறான்
நாய் வருகிறது.”
“பஞ்சம்” என்கிற ஒரே ஒரு வார்த்தையைக் கூறினேன். அவருக்கு முழுக் கதையும் புரிந்துவிட்டது.
புதிய களம், புதிய அனுபவம்
வீடியோவின் பிரச்சாரகர், குறிப்பிட்ட சில வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போலத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் அடுத்து அவர் சொல்லவருவது என்ன என்பது அந்த இளைஞருக்கு, அவர் சொல்லும் முன்பே எளிதாகப் புரிந்துவிடுகிறது.
அவர் படித்தது வண்ணநிலவனின் ‘மிருகம்’ கதை. வண்ணநிலவன் காட்டுவது புதிய களம். 80களில் பிறந்திருக்கக்கூடிய அந்த இளைஞரின் அனுபவ உலகத்தில் இல்லாதது. கற்பனை செய்து பார்ப்பதுகூட அவருக்குக் கடினம். பஞ்சம் காரணமாய், ஓர் ஊரில் ஒரு மனிதனைத் தவிர ஒட்டுமொத்த மனிதர்களும் ஓடிப்போவதை அவரால் உணர முடிவது சிரமமே. எனவே அவருக்குக் கதை புரியாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். அது மட்டுமின்றி, ஊன்றிப் படிக்காததும் மற்றொரு காரணம். விவரணைகளை விட்டுவிட்டு வெறும் சம்பவத்தை மட்டும் தொடர்வது.
எழுத்தாளனால் அவன் காணாத உலகத்தின் பாத்திரமாய் எப்படி ஆக முடிகிறதோ அதே போல, தேர்ந்த வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை பார்த்திராத போதிலும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறான்.
ரசனைகூட ஒரு விதப் பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன் உடலையும் மனதையும் தயார் செய்துகொள்வதைப் போல இலக்கியத்துக்கும் சிறு முயற்சி, கொஞ்சமான யத்தனம் சிறிய மெனக்கெடல் தேவைப்படுகிறது. கதையின் சம்பவங்களைத் தவிரவும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உணர்வுகளை, எழுத்தாளன் கோத்துச் செல்லும் விவரணைகளை, அவற்றின் நுட்பங்களை, அதன் மூலமாகக் கதையை, மனதில் உணரும் பயிற்சி. எழுதப்பட்டிருப்பதை வைத்து எழுதப்படாததை உணரும் ரசனை.
கலையும் பிரச்சாரமும்
வண்ணநிலவன் ஒரு காக்கை, குட்டிச் சுவரில் உட்கார்ந்திருப்பதை எழுதுகிறார். கதையில் கொஞ்ச நேரம் கழித்து, விரட்டினாலும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை எழுதுகிறார். அவரது பாத்திரம் நான்கு நாள் முன் பார்த்த அதே காக்கையாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறது. தேர்ந்த வாசகன், அதே காகத்தை நாயின் இன்னொரு
வடிவமாக, காய்ந்த வயிறாக, பசி இயலாமை காரணமாய் மற்றவர்களைப் போல் தொலைதூரம் பறந்துவிட முடியாத கதை நாயகனின் பிரதிபலிப்பாக உணரக்கூடும். இந்தக் கதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் பஞ்சம் மவுனமாய் எதிரொலித்துக்கொண்டிருப்பதைக் கேட்க மனதின் காதுகள் திறந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
கதையின் தொடக்கத்தைக் கவனியுங்கள். கதையின் முதல் வரியிலேயே கதையின் மையம் இருக்கிறது.
“நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை.”
ஒரு மனிதன், ஒரு காகம், ஒரு நாய். இவைதாம் கதாபாத்திரங்கள். இரண்டு வீடுகள்தாம் களம். இவற்றை வைத்துக்கொண்டு எழுத்தில் ஒரு தேர்ந்த கலைப் படத்தைக் கொடுத்துவிடுகிறார் எழுத்தாளர்.
கலைஞர்களும் பிரச்சாரகர்கள்தாம். மனிதத்தின் உன்னதத்தை, கீழ்மையை, அவலத்தை, கையறு நிலையைக் காட்டி நம்மை விழிப்படையச் செய்பவர்கள்.
மதம் மற்றும் கட்சி கொள்கைப் பிரச்சாரகர்களின் இலக்கு கடவுளை அல்லது கொள்கையை நோக்கி வாசகன் மனதைக் குவிப்பது. கலைஞனின் வேலை, தன் இலக்கைத் தானே கண்டடையும்படி மனித மனத்தை விசாலமாய்த் திறந்துவிடுவது. விமானத்தில் பயணித்த இளைஞரால், மதப் பிரச்சாரத்தைக் கேட்டுவிட்டு நிம்மதியாய்க் கண் மூடித் தூங்க முடிந்தது. சமூகத்தின் துக்கத்தைக் காட்டி நம் தூக்கத்தைப் பிடுங்குவதுதான் கலைஞனின் தலையாய காரியம்.
இணையத்திலேயே கிடைக்கிறது இந்தக் கதை.