தமிழன் என்று சொல்லடா

தமிழகத்தின் பெருமை

செந்தமிழ் நாடாம் என்தமிழ் நாட்டின்
இனிமை,வளமை,வலிமை,தொன்மை என
பேசப் பேசத் தீராத பெருமைதனை பேசுவோமா !

பெயரிலுள்ள இனிமைதனைப் பேசப் போதின்......
கேட்கும்போது காதினில் தேன்வந்து பாய்ந்திடுமே !
சொல்லும் பொது மூச்சினில் புது சக்தி பிறந்திடுமே !
எழுதும்போது வார்த்தையில் எறும்புகள் மொய்த்திடுமே !

அதன் மங்காத வளமைதனை பேச விழைந்திடின் ......
யானை கட்டி போரடித்தால்தான் மாளும் செந்நெல்!
காவிரி முதல் வைகை ஈறாய் விளைந்திட்ட கன்னல் !
வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்த வளமை !

எம்மவர் வலிமைதனை பேசப் போனால்.......
போரென்றால் புலிக்குணம். பொங்குமின்பக்
காதலென்றால் பூமணம். புகழைக்காக்கும்
மானம் என்றால் உலகிற்கு ஒரே இனம் எம் தமிழினம் !

எம்மொழியின் தொன்மை பற்றி சுருங்கச் சொல்லின் ......
கல்லும் மண்ணும் தோன்றா காலத்தே தோன்றிய தமிழ் !
குரளீன்ற வள்ளுவனை தானீன்று தந்த தங்கத் தமிழ் !
அறம் தந்த அவ்வையை அவனிக்கு தந்த சங்கத் தமிழ் !
இயம்புந்தோறும் இனிக்கின்ற சுயம்பு தமிழ் எங்கள் தமிழே !

இனி எமது எதிர்காலப் பெருமை பகர்ந்தோம் என்றால் .......
அன்று நீரின்றி அமையாது உலகென்றவன் தமிழன் !
இன்று நீரின்றி அமையாது நிலவென்றவனும் தமிழன் !
நாளை மூவுலகையும் அளக்கப் போகும் அவதாரம் அவனே !
அவன் தாயகமாம் தமிழகம் என்றென்றும் பெருமையுடத்தே !

மாமுகி .

எழுதியவர் : MAAMUKI (16-Feb-16, 2:54 pm)
பார்வை : 266

மேலே