நல்ல வார்த்தைகளாவோம்
தண்ணீரிலே அனல் வீசுகிறது
தாகம் தீர்த்துக் கொண்டால்
சோகம் திரள்கிறது….
செய்ததே செய்கிறோம்
உய்வு இன்றி உள்ளோம்-
பழக்கங்களின் ஆற்றில்
அடித்துக்கொண்டு போகிறோம்
பழகி விட்டதால் பழுதாகிவிட்டோம்-
பிழைகளால் பிழைகளோடு
பிழைகளை நோக்கி பயணம் செய்கிறோம்
பிழைகளைத் தவிர
வேறு எதை அடைய போகிறோம்?
கருதவதிலும்,
கருத்துக் கேட்பதிலும் மாட்டிக் கொண்டோம்
மூட நம்பிக்கைகளால் மட்டுமல்ல
கருத்துக்களாலும் பாதிக்கப்பட்டோம்-
உதவாத உருவங்களானோம்
ஊமை வாத்தியங்களானோம்-
உண்மைகளில்லை
உணர்வுகள் இல்லை
சரியானது நம் புத்திக்கு எட்டுவதில்லை
சிறந்த ஏடுகளும் நம்மை சீர் படுத்துவதில்லை
இல்லை இல்லை
இருக்க வேண்டியவை
இல்லவே இல்லை
எத்துனை நாள் இப்படி?
போதும், போதும்
நாம் வாங்கிய அடி-
தப்பில்லை மாறி விடுவோம்
நம் மன ஓட்டங்கள் மேம்பட
தவறாமல் தேரி விடுவோம்
நம் கண்ணோட்டங்கள் கனிந்திட
நம் எண்னங்கள் எனும் சிற்ப்பங்களை
நாம் சரிவர செதுக்கிக் கொள்வோம்
நம் சந்ததிகள் எனும் ஓவியங்களை
நாம் காப்பாற்றிக் கொள்வோம்
நம் வரலாறு மின்னவே
நாம் திருந்தி விடுவோம்
நம் உலகம் காவியமாய் மின்னவே
நாம் நல்ல வார்த்தைகளாவோம்